PIPER (பொதிந்திருக்கும் பவளங்கள்)
"காற்று வாங்கப் போனேன்;
ஒரு கனவு வாங்கி வந்தேன்"...
என்ற கதையாகக் கடற்கரையில் ஜாகிங் போன போது தோன்றிய ஒரு கதைக் கருவிற்காகக் காலையில் ஐந்து மணிக்குக் குடும்பம் மொத்தமும் காமிரா சகிதமாகக் கடற்கரை சென்று அங்கிருப்பவற்றையும், அங்கு வரும் பறவைகளையும் காட்சிகளையும் படம் பிடித்து, அந்தப் பறவைகளையும் காட்சிகளையும் தத்ரூபமாகக் கண் முன் நிறுத்த அப்போது உபயோகத்தில் இருந்த அனிமேஷன் டெக்னீக்குகள் ஈடுகொடுக்க முடியாததால் புதிய அனிமேஷன் உத்திகளைக் கண்டுபிடித்து, மூன்று வருடங்கள் உழைத்து எடுத்த ஆறு நிமிட அனிமேஷன் காவியம்(!) Pixar -ன் 'Piper'.
இன்று வரை Pixar எத்தனையோ அனிமேஷன்களை உருவாக்கியிருந்தாலும், மனதிற்கு மிக நெருக்கமான அனிமேஷன், 2017-ல் 'Best Animated Short Subject' க்கான
Annie Awards வென்ற 'Piper' தான்.
கடற்கரையில் வாழும் சாண்ட்பைப்பர் இன வகையைச் சேர்ந்தக் குஞ்சு ஒன்று அம்மாவிடம் இருந்து உணவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழலில், தன் உணவைத் தானேத் தேடிக்கொள்ளும் வித்தையைக் கற்கும் பொருட்டு தாய்ப் பறவை குஞ்சு பைப்பரைக் கடற்கரையை நோக்கி செலுத்துகிறது. விஷயமறியாமல் கரையில் இறங்கும் குஞ்சு கடல் அலையால் உருட்டிப் புரட்டிப் போடப்பட, நனைந்து நடுங்கி பயந்து ஓடும் குஞ்சு எப்படித் தன் இரையைத் தேடப் பழகுகிறது என்பதை ஒரு வார்த்தை வசனமும் இன்றி இயற்கையின் சப்தங்களுடன் பின்னிசை சேர்த்து மனம் நிறையும் புன்னகையுடன் விவரிக்கிறது 'Piper'.
அனிமேஷன் படங்களின் (சிறிதோ பெரிதோ) ஒரு முக்கிய விதி யாதெனின் - 'இறகு, மணல், நீர் - இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடு அனிமேட் செய்வதற்கு' என்பது. ஆனால் 'Piper'-ல் இந்த மூன்றுமே உண்டு -அதுவும் படம் முழுவதும், அதுவும் மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்து இன்டராக்ட் செய்வதுமாக.
ஆக மொத்தம் ஏழு மில்லியன் இறகுகள் அனிமேட் செய்யப் பட்டிருக்கின்றன 'Piper'-ல். 'Piper'-ன் இயக்குநர் Pixar-ல் பத்து வருடங்களுக்கும் மேலாகப் பணி புரிந்த Alan Barillaro. அவரின் பின்புலம் 2-D அனிமேஷன். ஆனால் இந்தப் படம் தட்டையான கார்ட்டூன் வடிவங்கள் இல்லாமல், உயரமும் அகலமும் ஆழமும் உள்ள உயிரினங்களாகத் திரையில் உலவவிட்டு, கிட்டத்தட்ட ஒரு டாகுமெண்டரி பார்ப்பதைப் போன்ற பிரமையை ஏற்படுத்திவிடுகிறது பார்ப்பவருக்கு.
மனித மானரிஸங்கள் எந்த விதத்திலும் கலந்துவிடாமல், பறவைகளின் மொழியிலேயே அவற்றைப் பேசவிட்டு, உணர்வுகளை அவைகளின் அங்க அசைவுகளிலேயே உயிரூட்டி நமக்குக் கடத்தி விடுகிறது 'Piper'.
ஆறு நிமிடங்கள் முடிந்ததும் மறுபடியும் முதலிலிருந்து மீண்டும் மீண்டும் நம்மை 'Piper'-ஐப் பார்க்கவைப்பதிலேயே அதன் வெற்றி அடங்கியிருக்கிறது.
2017-ன் ‘Best Animated Short Film’ ஆஸ்கார் விருது அதற்கு போனஸ்.
கருத்துகள்
கருத்துரையிடுக