ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - IV
அதன்படியே நாங்கள் பேக்கர் தெருவிலிருந்துக் கிளம்பினோம். வெளியேக் குளிர் மிகக் கடுமையாக இருந்தது. முழங்கால் வரைத் தொங்கும் அல்ஸ்டர் கோட்டுக்களை அணிந்துகொண்டு, கழுத்தில் ஸ்கார்ஃபையும் சுற்றிக்கொண்டோம். மேகமே இல்லாத வானம் குளிரை பன்மடங்காக்கியது. தெருவில் நடந்து செல்வோரின் மூச்சுக் காற்று, துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டாப் புகை போல் காற்றில் மிதந்தது. எங்கள் காலடிச் சத்தம் டாக் டாக்கென்று நாங்கள் போகும் வீதிகளெங்கும் எதிரொலித்தது. கால் மணி நேரத்தில் நாங்கள் 'ஆல்பா இன்'னில் இருந்தோம். அந்தச் சிறிய விடுதியின் கதவைத் தள்ளித் திறந்துகொண்டு நாங்கள் உள்ளே சென்றோம். சிவந்த முகம் கொண்ட, வெள்ளை ஏப்ரன் அணிந்த அந்த விடுதியின் உரிமையாளரிடம் ஹோம்ஸ் இரண்டு பியர்கள் ஆர்டர் செய்தார். "உங்கள் வாத்துக்களைப் போலவே உங்கள் பியரும் இருந்ததென்றால், அது மிகவும் அருமையான பியராகத்தான் இருக்கும்", என்றார் ஹோம்ஸ். "என் வாத்துக்களா?" என்றார் அந்த மனிதர் ஆச்சர்யத்துடன். "ஆம். இப்போது அரை மணி நேரத்திற்கு முன்பு தான் மிஸ்டர். ஹென்றி பேக்கரிடம் பேசிக்கொண்டிருந்தேன். உங்கள் வாத்துக...