மாடஸ்டி ப்ளெய்ஸ் (Modesty Blaise)
சூப்பர் ஹீரோக்களும் சூப்பர் ஹீரோயின்களும் நிறைந்திருக்கும் இன்றைய காமிக்ஸ் புத்தக உலகில் மாடஸ்டி பிளெய்சின் தாக்கத்தை உணருவது கொஞ்சம் சிரமமானது தான். ஆனால் 1980களில் அன்றைய காமிக்ஸ் உலகில் வலம் வந்த 'முகமூடி மாயாவி', 'மந்திரவாதி மாண்ட்ரேக்', 'இரும்புக்கை மாயாவி' ஆகிய ஹீரோக்களுக்கு நடுவே, எந்த வித மந்திரமும் மாயாஜாலமும் இல்லாமல், தன் புத்தி கூர்மையும், தற்காப்புக் கலையும், வயதிற்கு மீறிய கிரிமினல் அனுபவமும், ஏராளமான சொத்தும், எந்தக் காலத்திலும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கப்படாதக் கொள்கைகளும், ஆயிரம் முறை கூட நம்பி தன் உயிரை ஒப்படைக்கும் நம்பிக்கையுள்ள பார்ட்னரும் கொண்ட இளம் பெண் மாடஸ்டி ப்ளெய்சின் (Modesty Blaise) வருகை ஏற்படுத்தியத் தாக்கத்தின் அளவு - மாடஸ்டியின் சாகசங்களை தமிழ் காமிக்ஸுகளில் வாசித்து வளர்ந்த தமிழர் ஒருவர் பிற்காலத்தில் தன் மகளுக்கு 'மாடஸ்டி' என்று பெயர் சூட்டும் அளவு.
மாடஸ்டியின் பிறப்பு:
மாடஸ்டிக்கு இரண்டு பிறப்புகள் உண்டு. ஒன்று - 'மாடஸ்டி' என்ற கதாபாத்திரத்தின் பிறப்பு. மற்றொன்று - 'மாடஸ்டி' என்ற காமிக் ஸ்ட்ரிப்பின் (comic strip) பிறப்பு.
1962ல் பிரிட்டனின் நாளிதழான Daily Express-ன் Strip Cartoon Editor ஆன Bill Aitken-னிடமிருந்து மாடஸ்டியை உருவாக்கிய Peter O’Donnell-க்கு ஒரு அழைப்பு வந்தது அவர் விரும்பும் வண்ணம் ஒரு காமிக் ஸ்ட்ரிப் உருவாக்கித் தரும்படி. Peter O’Donnell, Jim Holdaway (1972ல் Jim Holdaway-ன் மறைவுக்குப் பின் Enric Badia Romero-விடம் வரையும் பொறுப்பு சேர்ந்தது) என்ற ஓவியரிடம் அந்தக் காமிக் ஸ்ட்ரிப்பை வரைந்து தரும்படிக் கேட்க, அவரும் சம்மதிக்க, மாடஸ்டி ப்ளெய்சையும் அவருடைய பார்ட்னர்/நண்பர் வில்லி கார்வினையும் (Willie Garvin), காதல் கத்தரிக்காய் குடும்பம் புடலங்காய் என்று இவர்கள் இருவரிடையே எதுவும் இல்லாமல், "இளவரசி (வில்லி கார்வின் மாடஸ்டியை வேறு எப்படியும் அழைப்பதில்லை) என் தலையைக் கேட்டால் அதை ஒரு தட்டில் வைத்து அவளிடம் நீட்டு", என்று வில்லி கார்வின் தன் மேனேஜரிடம் சொல்லும் படியான ஒரு 'rare relationship'-ப்பாய் உருவாக்கினார்
Peter O’Donnell.
ஆனால் Daily Express-ன் சேர்மன் 'கிரிமினல் உலகிலிருந்து ஒரு பெண்' தன் நாளிதழின் வாசகர்களுக்கு சரிவராது என்று மாடஸ்டியை புறந்தள்ள, அதை இன்னொரு லண்டன் பத்திரிக்கையான London Evening Standard அலேக்காக அள்ளிக்கொண்டது.
13/05/1963 திங்கட்கிழமையிலிருந்து 11/04/2001 வரை, ஒவ்வொரு கதையும் 18-20 வாரங்கள், என தொடர்ச்சியாக வெளிவந்தது.
மாடஸ்டிக்கு இன்ஸ்பிரேஷன்:
பிரிட்டன் இராணுவத்தில் Peter O’Donnell இராணுவ வீரராக இருந்த போது பிரான்சு, ஈரான், ஈராக், சிரியா, லெபனான், எகிப்து, இத்தாலி, கிரேக்கம் ஆகிய நாடுகளில் பணிபுரிந்தார்.
1942-ல் வட ஈரானில் அவருடைய ரெஜிமெண்ட் இருந்த போது ஏழு அல்லது எட்டு வயது சிறுமி ஒருத்தியை கிழிந்த உடைகளுடன் வீரர்களின் கூடாரங்களை விட்டு சற்றுத் தொலைவில் பார்த்ததாகவும், சில சூப் டின்களையும், ஒரு டின் திறக்கும் கருவியையும் அவளுடைய சிறிய மூட்டைக்கு அருகில் வைத்ததாகவும், அவைகள் அவளுக்குத் தான் என்று அவள் உணர்ந்தபோது அவள் முகத்தில் தோன்றிய பிரகாசமானப் புன்னகையும், அவள் ஏதோ கூறி அவர்களிடம் விடைபெற்றுச் செல்லும் போது ஓர் இளம் இளவரசியைப் போல் நடந்து சென்றதாகவும், மாடஸ்டிக்கு அந்தச் சிறுமி தான் இன்ஸ்பிரேஷன் என்பதாகவும் ஒரு பேட்டியில் Peter O’Donnell கூறியிருக்கிறார்.
புகழ்பெற்ற எழுத்தாளர் Kingsley Amis, Peter O’Donnell-க்கு எழுதிய கடிதத்தில், "நான் காய்ச்சலில் படுத்த போது உங்களுடைய மாடஸ்டி ப்ளெய்ஸ் புத்தகங்களை இரண்டாம் முறையாக வாசித்தேன். என் உடல்நிலை தேற டாக்டர் செய்த அளவுக்கு மாடஸ்டி ப்ளெய்ஸ் புத்தகங்களும் செய்தன. அவற்றை நீங்கள் எழுதியமைக்கு உங்களுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்"[1], என்று கைப்பட எழுதியுள்ளார்.
இந்த நிச்சயமற்ற காலத்தில் சூழ்ந்திருக்கும் மனச்சோர்விலிருந்தும் இயலாமையிலிருந்தும் நம்மையும் மாடஸ்டி காப்பாற்றலாம்.
[1 “I just want to thank you and congratulate you for writing the Modesty Blaise books. They are endlessly fascinating. I read them for the second time recently when laid low by a depressing bout of flu, and I’m sure they did quite as much as the doctor did to put me on my feet again”. – Kingsley Amis
கருத்துகள்
கருத்துரையிடுக