பேஷண்ட் ‘வத்சலா’


 


கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் கழித்து இரவு எட்டரை மணி போல் க்ளினிக் இருக்கும் தெருவின் வழியாகத் தற்செயலாகச் சென்ற முகிலன் அங்கு எரியும் விளக்கைப் பார்த்து ஒன்றும் புரியாமல் உள்ளே நுழைந்தான். 

ரிசப்ஷனில் எரியும் லைட்டையும், டாக்டர் தீரனின் மூடிய கதவின் அடியில் தெரியும் ஒளிக்கீற்றையும் பார்த்தவன், குழப்பமாய் நின்றான் அவர் கதவின் முன். உள்ளிருந்து டாக்டர் தீரனின் குரல் கேட்டது.

"சார்…! சார்…!" என்றபடி கதவைத் தட்டினான்.

சட்டென்று நின்ற அவர் குரல், "யாரது?" என்று கேட்டது.

"சார்…! நான் தான், சார்… முகிலன்".

"One minute", என்ற டாக்டர் தீரனின் குரல் சற்று இடைவெளிக்குப் பின், "Come in", என்றது.

உள்ளே நுழைந்த முகிலன் டாக்டர் தீரனின் முகத்தில் அப்பியிருந்த பரந்த புன்னகையையும் கண்களின் ஓரம் மின்னும் சிறு குறும்பையும் பார்த்து ஒன்றும் புரியாமல் நின்றான். அனிச்சையாக அவர் அறையைச் சுற்றிச் சுழன்ற பார்வை அவரைத் தவிர யாரையும் அவன் கண்களுக்குப் புலப்படுத்தவில்லை.

"என்ன முகிலா, இந்நேரத்திற்கு இங்கே?" என்றார் டாக்டர் தீரன் குறையாத புன்னகையுடன். அவர் அறையில் இருக்கும் போது அவர் புன்னகைத்து அவன் பார்த்ததில்லை இத்தனை வருடங்களில். 

"ஒன்றுமில்லை, சார். இந்த வழியாகப் போனேன். க்ளினிக்கில் லைட் எரிவதைப் பார்த்து உள்ளே நுழைந்தேன்", என்றவன், "ஏதாவது எமர்ஜென்சி அப்பாயிண்ட்மென்ட்டா, சார்? ஒரு போன் செய்திருந்தால் நான் வந்திருப்பேனே, சார். ஃபைல் எதாவது எடுக்க வேண்டுமா?" என்று கேட்டான்.

"அதெல்லாம் எதுவுமில்லை, முகிலா. ஒரு கேஸைப் பற்றிய விஷயம் ஒன்று சட்டென்று நினைவுக்கு வந்தது. கேஸ் நோட்ஸில் குறித்து வைத்துவிடலாமென்று வந்தேன். வேறு ஒன்றுமில்லை", என்றார் டாக்டர் தீரன்.

டாக்டரின் வீடு அந்தக் கட்டிடத்தின் மாடியிலேயே இருந்ததால் அது ஒன்றும் சிரமமானக் காரியம் அல்ல என்று முகிலனுக்குத் தெரியும். இது அடிக்கடி நடக்கும் செயல் கூட.

"ஓகே, சார். அப்படியென்றால் நான் ரிசப்ஷனில் இருக்கிறேன். நீங்கள் முடித்தபின் எல்லாவற்றையும் பூட்டி சாவியை உங்களிடம் கொடுத்துவிட்டு நான் செல்கிறேன்", என்றான் முகிலன்.

"அதெல்லாம் வேண்டாம், முகிலா. நீ கிளம்பு. நான் பார்த்துக்கொள்கிறேன்", என்று அவசரமாக மறுத்தார் டாக்டர் தீரன்.

"சார், அது என்னுடைய வேலை. நீங்கள் இங்கே இருக்கும் போது உங்களை விட்டுவிட்டு நான் எப்படிப் போக முடியும்? பரவாயில்லை, நான் இருக்கிறேன், சார்", என்றான் முகிலன்.

"முகிலா, சொல்வதைக் கேள். நீ கிளம்பு. என் வேலையும் முடிந்துவிட்டது. நானும் கிளம்பிவிடுவேன். நீ இருக்கவேண்டும் என்று நான் நினைத்தால் நானே சொல்லமாட்டேனா?", என்ற டாக்டர் தீரன் அவர் இருக்கையில் இருந்து எழுந்து வந்து அவன் தோள் மேல் கை வைத்து அவனைக் கதவை நோக்கி அழைத்துச் சென்றார்.

கதவின் அருகில் வந்ததும் முகிலன் நின்றான். "சார், ப்ளீஸ், நான் இருக்கிறேனே… உங்களை விட்டுவிட்டுச் சென்றால் இரவு எனக்குத் தூக்கம் கூட வராது", என்று சொன்னவனின் பார்வை சட்டென்றுக் குத்தி நின்றது டாக்டர் தீரனின் மேஜை மேல் இருந்த அந்த ஒற்றை டெட்ரா பாக் மில்க் ஷேக்கின் மீது.

டாக்டர் தீரனின் முதுகுக்குப் பின்னால் இருந்த எதன் மீது முகிலனின் பார்வை மையம் கொண்டுள்ளது என்பதை உணர்ந்த டாக்டர் தீரன், "சொன்னால் கேள், முகிலா. நீ கிளம்பு. காலையில் பார்க்கலாம். Good night”, என்றபடி கதவைத் திறந்து அவனை வெளியே அனுப்பிப் பின் கதவை மூடித் தாளிட்டார்.

ஒரு கணம் உறைந்து நின்றான் முகிலன். அவன் மனம் இன்னும் அந்த டெட்ரா பாக்கின் மேலேயே இருந்தது. எங்கிருந்து வந்தது அது? யார் கொடுத்தது? கடைகளுக்குப் போய் சாமான்கள் வாங்கும் பழக்கமில்லாதவர் டாக்டர் தீரன். அவர் வீட்டின் சமையல் சாமான்கள் வாங்குவது கூட முகிலன் தான். சமையல்காரர் முத்தண்ணாவிடம் கேட்டு லிஸ்ட் போட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்வது மொத்தமும் முகிலன் தான். ஏதாவது கூடுதலாக வேண்டுமென்றால் டாக்டர் தீரன் அதையும் முகிலனிடம் தான் சொல்லுவார். இதுவரையில் அவர் மேஜையில் பார்த்த மில்க் ஷேக்கை ஒருமுறை கூட வாங்கியதுமில்லை, அவர் அதைக் குடித்து அவன் பார்த்ததுமில்லை.

அவன் நினைவுகளின் குறுக்கேப் பாய்ந்தது டாக்டர் தீரனின் சிரிப்பொலி. அதிர்ச்சி கலந்த குழப்பத்துடன் மூடியக் கதவைப் பார்த்தான் முகிலன். கவலையும் குழப்பமும் உந்தித் தள்ள, தாழிட்டக் கதவில் காது வைத்துக் கேட்க முயற்சித்தான்.

டாக்டர் தீரனின் குரல் ஏதோ சொல்வது சன்னமாகக் கேட்டது. சற்று இடைவெளிக்குப் பின் மறுபடியும் அவர் குரல் ஒலித்தது யாருக்கோ எதற்கோ பதில் சொல்லும் தொனியில்.

 அதிர்ந்து பின்வாங்கினான் முகிலன். யாருடன் பேசுகிறார் டாக்டர் தீரன்?

பதட்டமும் படபடப்பும் கால்களைப் பின்ன, அவசர அவசரமாய் வெளியே வந்தவன், கொஞ்சம் தள்ளி நின்று அவன் கைபேசியில் ஒரு நம்பரை அழைத்தான்.

மூன்றாவது ரிங்கில், "என்னடா முகிலா, இந்நேரத்துக்கு? Any problem?" என்று கேட்ட டாக்டர் சங்கரனிடம், "I think so, சார். நேரில் தான் பேசமுடியும். எப்போது பார்க்கலாம் உங்களை?" என்றான் முகிலன்.

"உன் குரலே சரியில்லையே, முகிலா. அவசரமென்றால் வீட்டிற்கு இப்போது வாயேன் ", என்றார் டாக்டர் சங்கரன்.

"க்ளினிக்கில் தான், சார், இருக்கிறேன். அரைமணி நேரத்தில் வீட்டிற்கு வருகிறேன்", என்றவன் திரும்பி ஒரு முறை க்ளினிக்கைப் பார்த்துவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

டாக்டர் தீரனும் டாக்டர் சங்கரனும் பள்ளியிலிருந்து நெருங்கிய தோழர்கள். மருத்துவக் கல்லூரியிலும் இணைபிரியா நண்பர்கள். டாக்டர் தீரன் முதுகலையில் சைக்யாட்ரியைத் தேர்வு செய்ய, டாக்டர் சங்கரன் அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுத்தார். 'உடம்புக்கு நான் மனசுக்கு அவன்னு கூறுபோடறதைக் கூடப் பங்கு பிரிச்சிகிட்டோம்டா, முகிலா', என்று அவனிடம் விளையாட்டாய் சொல்லியிருக்கிறார் டாக்டர் சங்கரன். அவருக்கு இருப்பது பெரிய குடும்பம் என்றாலும், டாக்டர் தீரனுக்கு டாக்டர் சங்கரன் தான் குடும்பம், சொந்தம், பந்தம் எல்லாம். முகிலனின் வரவிற்குப் பின் தான் டாக்டர் தீரனைப் பற்றிய கவலைகள் டாக்டர் சங்கரனுக்குச் சற்றேக் குறையத் தொடங்கின. இப்போது நடப்பதைப் பார்த்தால் இல்லாத கவலைகள் எல்லாம் இருவருக்கும் மொத்தமாய்ச் சேர்ந்து வந்துவிட்டதோ என்று மனதைக் குடையும் எண்ணங்களுடன் பைக்கில் விரைந்தான் முகிலன்.

"நான் வெளியே வரலாமா, டாக்டர்?" என்று கேட்டபடி கன்சல்டேஷன் அறையுடன் சேர்ந்த பாத்ரூமிலிருந்து லேசாகத் தலையை நீட்டினாள் 'வத்சலா'.

"Please come. I’m so sorry, வத்சலா, உங்களை முகிலனின் பார்வையில் படாமல் ஒளியச் சொன்னதற்கு", என்றார் டாக்டர் தீரன். "I didn’t want to get into a long explanation", என்றார் அவர் செய்கைக்குக் காரணமாக.

"It’s okay, Doctor. புரிகிறது எனக்கு. நான் 'பேஷண்ட் அல்லாத பேஷண்ட்' அல்லவா?" என்றால் 'வத்சலா' புன்னகையுடன். "நேரமாகிவிட்டது, டாக்டர். I better get going", என்றாள்.

"இன்று இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தில் நேரம் நிரம்பவே வீணாகிவிட்டது", என்ற டாக்டர் தீரன் ஏதோத் தோன்றியவராய், "ஒன்று செய், வத்சலா. என் பர்சனல் நம்பரைக் குறித்துக் கொள். நீ வருவதாய் இருந்தால் என்னை அந்த நம்பரில் அழை. இது போல் தொந்தரவுகள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்", என்றார்.

" தொந்தரவு வேண்டாமென்று என் கைப்பேசியைக் காரில் வைத்துவிட்டேன் டாக்டர்", என்று கூறி கைப்பை திறந்து சிறிய நோட்டும் பேனாவும் எடுத்து அவர் கூறிய கைபேசி எண்ணை எழுதிக்கொண்டாள்.

கதவைத் திறந்து வெளியே சென்றவள் ஒரு கணம் நின்றுத் திரும்பி டாக்டர் தீரனைப் பார்த்து, "It was fun. Good night, Doctor", என்றுவிட்டுச் சென்றாள்.

"Good night", என்று அனிச்சையாய் பதிலளித்த டாக்டர் தீரனின் மனதில், ‘Yes, it was fun, wasn’t it?’ என்ற கேள்வி சுற்றிச் சுழன்றது. எதிர்பாராவிதமாய் நடுவில் இடைமறிக்கப்பட்டு 'session' முழுமையாய் நிறைவு பெற முடியாததில் வத்சலாவைவிட அவருக்கு ஏமாற்றம் அதிகமிருந்தது. வத்சலாவின் வருகையும் பேச்சும் தான் அவரை அவருக்கே ஒரு மனிதனாய் உணரவைப்பதாய் நினைக்க ஆரம்பித்து பல நாட்களாகின்றன. அவருடைய நாட்களும் பொழுதுகளும் அவளுடைய வருகையை எதிர்நோக்கி இருக்கும் தருணங்களாக மாறிவிட்டதையும் அவர் உணர்ந்தார். மற்ற பேஷண்ட்டுகளைப் பார்ப்பது கூட இந்தக் கணங்களின் வெறுமையை சற்றே மறக்கச் செய்யத்தான் என்பதை அவர் உணர்ந்தும் கொஞ்ச காலமாகிறது. அப்படி எதிர்பார்த்துக் காத்திருந்த வத்சலாவின் வருகை இன்று முகிலனால் பாதியில் தடைபட்டுவிட்டது. டாக்டர் தீரனுக்கு எரிச்சல் கலந்த கோபம் வந்தது முகிலனின் மீது, முதல் முறையாக. அவன் ஏன் இன்று இங்கு வந்தான்? அப்படியே வந்தாலும் போகச் சொன்னவுடன் போகவேண்டியது தானே… நின்று என்ன அத்தனை விசாரணை?

சட்டென்று டாக்டர் தீரனுக்கு சிரிப்பு வந்தது, மேஜை மேல் இருந்த மில்க் ஷேக்கின் மீது முகிலனின் கண்கள் பதிந்த போது அவன் முகத்தில் தோன்றிய பாவனையை நினைத்து. அந்தக் கணத்தில் அவன் முன் சிரித்துவிடக் கூடாதே என்றுக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு அவனை வெளியே அனுப்புவதற்குள் அவர் சிரமப்பட்டுத்தான் போனார். 'It was fun, wasn’t it?' என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டவரின் உதடுகளில் ஒட்டியிருந்த புன்னகை சட்டென்று மறைந்தது துடைத்துவிட்டது போல். 'இதற்கு மேலும் இந்த வெற்று வாழ்க்கையில் ஒட்டிக்கொண்டிருப்பது முடியாத ஒன்று', என்று முடிவெடுத்தவர் அவர் முடிவை நாளை முகிலனிடம் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.

- தொடரும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

The Red Balloon (பொதிந்திருக்கும் பவளங்கள்)

ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - V

ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - I