பேஷண்ட் ‘வத்சலா’

 


மறுநாள் காலை வீட்டின் அழைப்பு மணி சத்தம் கேட்டுக் கதவைத் திறந்தவர் முகிலனுடன் டாக்டர் சங்கரனும் நின்றிருப்பதைப் பார்த்து ஒரு கணம் திகைத்து, பின் புன்னகைத்தார்.

"இன்றிரவு தான் உன்னை எதிர்பார்த்தேன். காலை சர்ஜரி எதுவும் இல்லையா?" என்றார் கதவை அகலத்  திறந்தபடி.

"நல்லவேளையாக இல்லை", என்றபடி உள்ளே நுழைந்த சங்கரன் தீரனின் உடையைப் பார்த்துவிட்டு, "நீ ஏன் இன்னும் கிளம்பாமல் இருக்கிறாய்? நான் வருவதை சொல்லிவிட்டாயா?" என்று முகிலனிடம் கேட்டார்.

"இல்லை, சார்", என்ற முகிலன், "எனக்கும் அதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. உடம்புக்கு ஏதேனும்…?" என்று கேட்டான் டாக்டர் தீரனைப் பார்த்து பதட்டத்துடன்.

"சே, சே, அதெல்லாம் எதுவும் இல்லை. உனக்குத் தெரியாமல் என் உடம்புக்குக் கூட எதுவும் முடியாமல் போகாதே, முகிலா", என்றார் டாக்டர் தீரன் சிறு புன்னகையுடன்.

"இதெல்லாம் சொல்லுவீர்கள்… ஆனால் எனக்குத் தெரியாமல் பேஷண்ட்டை மட்டும் பார்ப்பீர்கள்", என்றான் முகிலன் லேசான வருத்தம் கலந்த கோபத்துடன்.

ஒரு கணம் அவனை ஊன்றிப் பார்த்த டாக்டர் தீரன், "வா, முகிலா, உட்கார். இன்றிரவு நானே உங்கள் இருவரிடமும் பேசலாம் என்றிருந்தேன். நீங்களே வந்துவிட் டீர்கள். நல்லதாகப் போயிற்று", என்றார்.

ஒன்றும் புரியாமல் டாக்டர் சங்கரனைப் பார்த்த முகிலன் அவர் அமரச் சொல்லி தலையசைத்ததும் எதிரெதிரே அமர்ந்திருந்த நண்பர்களுக்கு இடையில் இருந்த பக்கவாட்டு சோபாவில் அமர்ந்தான்.

"நீயும் முகிலன் கேட்டதைத் தான் கேட்கப் போகிறாயா?" என்றார் டாக்டர் தீரன் சங்கரனை நோக்கி.

"இல்லை. நீ சொல்வதைக் கேட்க வந்தேன்", என்றார் டாக்டர் சங்கரன்.

மெலிதாய் புன்னகைத்தார் டாக்டர் தீரன். ஒரு நிமிடம் மௌனமாய் இருந்தவர் இருவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டுப் பார்வையை தன் நண்பன் மேல் பதித்து, "ப்ராக்டிஸை நிறுத்தி விடலாம் என்றிருக்கிறேன்", என்றார். இது கிட்டத்தட்ட முடிவான ஒன்று என்பதால் அதில் இருவருக்கும் எந்த ஆச்சர்யமும் ஏற்படவில்லை.

"அப்புறம் ஏன் புதிதாய் பேஷண்ட் பார்க்கிறாய்? அதுவும் முகிலனுக்குத் தெரியாமல்?"

"அவள் பேஷண்ட் இல்லை".

சட்டென்று அதிர்ந்தனர் சங்கரனுக்கு முகிலனும்.

"கடவுளே! உங்கள் கற்பனைகள் அதற்குள் எங்கோ சென்றுவிட்டனவா? அவள் பேஷண்ட் தான். ஆனால் 'பேஷண்ட் அல்லாத பேஷண்ட்'", என்றார் டாக்டர் தீரன்.

"டேய்! என் ஸ்பெஷாலிட்டி சர்ஜரி, சைக்யாட்ரி இல்லை. புரியும்படி சொல்", என்றார் டாக்டர் சங்கரன்.

"ப்ரச்னை என்று எதுவும் இல்லை அவளுக்கு. அவள் பேசுவதைக் கேட்பதற்கு அவளுக்கு ஒருவர் தேவை என்று தான் வந்தாள். வரும்போதெல்லாம் பேசிவிட்டுப் போகிறாள். மற்ற பேஷண்ட்டுகளுக்குக் கேட்பத்தைப் போல் தான் அவள் பேசுவதையும் கேட்கிறேன். என்ன ஒரு வித்தியாசம் -  மற்ற பேஷண்ட்டுகளுக்குச் சொல்வதைப் போல் ஆலோசனைகளோ, அறிவுரைகளோ, பரிந்துரைகளோ சொல்லத் தேவையில்லை இவளுக்கு", என்ற டாக்டர் தீரனின் கண்கள் சட்டென்று தூரத்தில் வெறிக்க, உதடுகளில் மெல்லிய புன்னகை படர்ந்தது.

கனமாய் நிலவிய மௌனத்தைக் கிழித்தன டாக்டர் சங்கரனின் வார்த்தைகள்.

"Are you in love with your patient?"

கேட்ட கேள்வி காதில் விழுந்ததா என்று சந்தேகத்துடன் அவரைப் பார்த்துக்கொண்டிருந்த டாக்டர் சங்கரனை நிதானமாய்க் கண்களைத் திருப்பிப் பார்த்தார் டாக்டர் தீரன்.

"Am I in love with my patient? " என்று கேள்வியை மறுபடிக் கேட்டவர், "I don’t know ", என்றார். "ஆனால் அவள் வரும் அந்த ஒரு மணி நேரத்தை நோக்கித் தான் என் நாட்களின் மற்ற மணித்துளிகள் நகர்கின்றன".

நிமிர்ந்து அமர்ந்தார் டாக்டர் சங்கரன். சோபாவின் நுனிக்கு வந்தான் முகிலன்.

"மனித மனங்களின் விகாரங்களையும் பிறழ்வுகளையும் மட்டுமே அறிந்த எனக்கு அவள் பேசுவதைக் கேட்டபின் தான் மனித மனம் எவ்வளவு அற்புதமானது என்பது தெரியவந்தது. வாழ்க்கையில் இல்லாமல் போனது, சொல்லப்போனால் வாழ்க்கையே இல்லாமல் போனது என்று அவள் என் வாழ்வில் வந்த பின் தான் தெரிந்தது", என்று சொல்லிவிட்டு சிந்தனையில் மூழ்கினார் டாக்டர் தீரன்.

டாக்டர் சங்கரனும் முகிலனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

"தீரா, நீ என்ன சொல்கிறாய் என்று தெரிந்து தான் சொல்கிறாயா? If this is not ‘being in love’ what is? இது எவ்வளவு ஆபத்தானது என்று என்னை விட உனக்கு நன்றாகத் தெரியும். மெடிக்கல் கவுன்சிலுக்குத் தெரிந்தால் அவ்வளவு தான். இதை இத்தோடு நிறுத்தவேண்டும். இல்லையென்றால் உன் லைசென்ஸ் மட்டுமல்ல, இத்தனை வருடங்களாக நீ சம்பாதித்து வைத்திருக்கும் பெயரும் பறிபோய்விடும். அவள் யாரென்று சொல். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். இனி நீ அவளை சந்திப்பது கூடாது", என்றார் டாக்டர் சங்கரன் பதட்டத்துடன்.

"அந்த பேஷண்ட் ஃபைலை வீட்டில் வைத்திருக்கிறீர்களா, சார்? க்ளினிக்கில் இல்லை. தேடிவிட்டேன்", என்று சட்டென்று எகிறிய பதட்டத்துடன் கேட்டான் முகிலன்.

"ஃபைலே இல்லை", என்றார் டாக்டர் தீரன் பதட்டமேயில்லாமல்.

"என்ன சார்? ஃபைலே இல்லையா? பின் பேஷண்ட் நோட்ஸ் எதில் வைத்திருக்கிறீர்கள்?"

"நோட்ஸ் எதுவும் எடுக்கவில்லை".

வாயடைத்துப் போனான் முகிலன். பேஷண்ட் நோட்ஸ் இல்லாமல் கேஸ் பார்ப்பதா? அவனுடைய இத்தனை வருட அனுபவத்தில் அவன் அறிந்திராத ஒன்று.

டாக்டர் சங்கரனும் கூட விக்கித்துப் போனார். தனிப்பட்ட முறையில் ஒரு பேஷண்ட்டைப் பார்த்தால் கூட அந்தக் குறிப்புகள் எந்த ரூபத்திலாவது எப்படியாவது பதியப்பட்டுவிடும் மருத்துவர்களால். அவர்களுடைய ரெஃபரன்சுக்காக மட்டுமல்ல, பின்னாளில் வைத்தியத்தின் நீட்சியை அறிந்து கொள்வதற்காகவும். அதுவும் ஒரு சைக்யாட்ரிஸ்ட்டிற்கு பேஷண்ட் நோட்ஸ் தான் அஸ்திவாரம், அடித்தளம், மேல்தளம் எல்லாம். அது இல்லாமல் பேஷண்ட்டைப் பார்ப்பதா? ஓ! ஒருவேளை 'பேஷண்ட் அல்லாத பேஷண்ட்' என்பதால் தீரன் இதைத் தவிர்த்துவிட்டானா?

ஆழ மூச்சிழுத்தார் டாக்டர் சங்கரன்.

"சரி, நோட்ஸ் தான் எடுக்கவில்லை, பேஷண்ட்டின் பர்சனல் டீட்டெய்ல்ஸ் இருக்குமல்லவா, அதைக் கொடு. போதும்".

"அதையும் குறிக்கவில்லை".

லேசாய்க் கோபம் வரத் தொடங்கியது டாக்டர் சங்கரனுக்கு.

"சரி விடு. நினைவில் இருப்பதை சொல்".

"நினைவில் எதுவும் இல்லை. ஏனென்றால் இது எதையும் அவளிடம் கேட்கவில்லை".

பல்லைக் கடித்துக்கொண்டார் டாக்டர் சங்கரன். கோபித்து எதுவும் ஆகப்போவதில்லை.

"சரி, அதையும் விடு. அவளைப் பற்றி உனக்குத் தெரிந்ததைச் சொல்".

"நாற்பத்தி நான்கு - நாற்பத்தி ஐந்து வயது இருக்கும். உயர் கல்வி படித்தவள். வசதிக்குக் குறைவில்லை. விலையுயர்ந்த கைப்பையும் வாட்சும் அணிவாள். ஏதோ ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் உயர்மட்ட நிர்வாகத்தில் பணிபுரியக்கூடும் அல்லது சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டும்  என்று நினைக்கிறேன். வேறு ஏதும் தகவல்கள் இல்லை என்னிடம்".

"குடும்பம், கணவன், குழந்தைகள்?"

"தெரியாது".

"எந்த ஊர்?"

"தெரியாது".

"பெற்றோர், உடன் பிறந்தவர்கள்?"

"தெரியாது".

அடக்கி வைத்திருந்தக் கோபம் பீறிட்டு வெளிவந்தது டாக்டர் சங்கரனிடமிருந்து.

"டேய் தீரா! என்ன தான் தெரியும் அவளைப் பற்றி?" என்று வெடித்தார்.

"பெயர்", என்று சொன்ன டாக்டர் தீரன், எதையோ அப்போது தான் உணர்ந்தவர் போல் அமைதியானார்.

"அப்பா! அதாவது தெரிந்ததே! அதையாவது சொல்", என்றார் டாக்டர் சங்கரன் வற்றாதக் கோபத்துடன்.

"அவளிடம் அவள் பெயரைக் கேட்டேன். 'என்னைப் பார்த்தால் என்ன பெயர் தோன்றுகிறது?' என்று என்னைக் கேட்டாள். தோன்றிய பெயரைச் சொல்லித்தான் அவளை அழைக்கிறேன் - 'வத்சலா'", என்றார் டாக்டர் தீரன்.

டாக்டர் சங்கரனின் கண்கள் சட்டென்று இடுங்கின.

"என்ன பெயர்? இன்னொரு முறை சொல்", என்றார்.

"வத்சலா".

டாக்டர் தீரனின் குரல் குழைந்து வந்தது. உச்சரித்த பெயர் ஏதோ நினைவுகளைக் கிளற கண்கள் தூரத்தை வெறிக்க, அமைதியானார் அவர்.

சற்று நேரம் கண்கள் மூடி யோசித்தார் டாக்டர் சங்கரன். அதிகரித்துச் செல்லும் பதட்டத்துடன் அவரையும் டாக்டர் தீரனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தான் முகிலன்.

சிறிது நேரத்தில் ஏதோ முடிவுக்கு வந்தவர் போல் சட்டென்றுக் கண் திறந்தார் டாக்டர் சங்கரன்.

"சரிடா தீரா, பிராக்ட்டிஸை நிறுத்திவிட வேண்டும் என்பதுதானே உன் விருப்பம்? அது இப்போதே நிறைவேறிவிட்டதாக வைத்துக்கொள். இந்த நொடியிலிருந்து நீ எந்த பேஷண்ட்டையும் பார்க்கத் தேவையில்லை, 'பேஷண்ட் அல்லாத பேஷண்ட்' உள்பட", என்றவர் முகிலனிடம் திரும்பி, "நீ வா, முகிலா", என்றபடி வெளியேறினார்.

- தொடரும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

The Red Balloon (பொதிந்திருக்கும் பவளங்கள்)

ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - V

மண்ணோடு மண்ணாக … (வீடு series – II)