SAMURAI GOURMET (பொதிந்திருக்கும் பவளங்கள்)

 


நாம் மட்டும் விழித்திருக்கும் நேரங்களில் (அது இரவாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை) OTT தளங்களில் எதையேனும் பார்க்கத்தோன்றும் போது NetFlix-ன் இந்தத் தொடரை முயற்சி செய்து பாருங்கள். Headphones இருந்தால் நலம் இசையைக் கேட்பதற்கு. இல்லையென்றாலும் ஒன்றும் நட்டமில்லை. ஏனெனில் பேசும் ஜப்பானிய மொழி எதுவும் நமக்குப் புரியப்போவதில்லை. ஆங்கில சப்டைட்டில்கள் இருந்தாலும் அவைகளும் கூட அவசியமில்லை இந்தத் தொடரை இரசிப்பதற்கு.

வசனமும் புரியாமல், சப்டைட்டில்களின் தேவையும் இல்லாமல் அப்படி எந்தத் தொடரைப் பார்க்கமுடியும், இரசிக்கமுடியும், அனுபவித்து உணர முடியும் என்ற கேள்விக்கு நிச்சயமான விடையாக அமைந்திருக்கிறது NetFlix-ன் ‘SAMURAI GOURMET’ தொடர்.

மானேஜர் பதவியிலிருந்து ஓய்வு பெரும் 60 வயது டகேஷி கஸுமி (Takeshi Kasumi) தான் தொடரின் நாயகன்(!). ஓய்வு பெற்றதை மறந்துவிட்டு வழக்கம் போல் அரக்க பரக்க எழுந்து அலுவலகத்திற்கு ரெடியாகும் டகேஷிக்கு அவர் ஓய்வு பெற்றதை நினைவூட்டி, ஏதேனும் ஒரு hobby-ஐத் தொடங்கினால்  என்ன என்று கூறி நடைபயிற்சியை அவர் மனைவி பரிந்துரைக்க, Reebok ஷூக்கள் மாட்டி நடக்கத் தொடங்கும் டகேஷி கஸுமி பழக்கதோஷத்தில் தினமும் அலுவலகத்திற்குச் செல்லும் இரயில் நிலையத்திற்கேச் சென்றுவிடுகிறார். 'சே! எப்போதும் போல் இங்கே வந்துவிட்டேனே!' என்று தன்னைத் தானே நொந்துகொண்டேத் திரும்பும் போது அவர் கண்ணில் படுகிறது தெருமுனை 'ஜப்பானிய செட் மீல்' உணவகம் ஒன்று ('செட் மீல்' என்பது நமது மதிய சாப்பாடு போல்). நடந்த நடையில் (ஜாகிங் செய்யும் ஒரு தாத்தாவோடு போட்டி ஓட்டம் வேறு!) வயிற்றில் பசி கிள்ள, அலுவலகத்தில் தினமும் உண்ணும் 'செட் மீல்' வேறு நினைவுக்கு வர, அந்த உணவகத்தில் உண்ண முடிவெடுத்து உள்ளே நுழைகிறார் டகேஷி.

முப்பது வருடங்களாக வீடு அலுவலகம் என்று செக்கு மாடு வாழ்க்கை வாழ்ந்தவருக்கு அந்த உணவகத்தின் உள்ளே நுழைவது கூட புதிய அனுபவமாய் இருக்கிறது. ஏற்கனவே அங்கே உணவருந்திக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துக்கொண்டேத் தயக்கத்துடன் காலி மேஜை ஒன்றில் அமர்ந்து சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் (உலகின் இப்படிப்பட்ட எல்லா உணவகங்களிலும் மெனுக்கள் இப்படித்தான் எழுதியிருக்குமோ?!) மெனுக்களின் மீது பார்வையை ஓட்டுகிறார். தனக்கு வேண்டியதை ஆர்டர் செய்துவிட்டு மேலும் பார்வையை சுழல விடும் அவரின் கண்ணில் படுகிறது 'இங்கே பியர் கிடைக்கும்' போஸ்டர்.

மிகுந்த ஆசையுடன் ஒரு பியர் ஆர்டர் செய்ய வாயைத் திறந்து விட்டு, பின், சுற்றிலும் இருப்பவர்கள், அந்த நேரத்தில் மதிய உணவுடன் பியர் குடிக்கும் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்தில் முன்னால் இருக்கும் தண்ணீரை எடுத்து அருந்த, அந்த நேரம் கதவு திறந்து நுழைகிறான் இளம் வயது சமுராய் ஒருவன்.


மேஜை ஒன்றில் அமர்ந்து ‘sake’ (ஜப்பானிய ஒயின்) ஆர்டர் செய்யும் அந்த சமுராயை வாய் பிளந்து பார்க்கும் டகேஷி கவனிக்கிறார் அவரைத் தவிர அனைவரும் பழங்காலத்து உடையில் இருப்பதை. அந்நேரம் மதுவருந்தும் சமுராயை சுற்றி இருப்பவர்கள் கிண்டலாய் பேச, சட்டென்று வாள் உருவும் அவனைப் பார்த்து பயந்து அவர்கள் வெளியே செல்ல, யாரைப்பற்றியும் எந்தக் கவலையும் இல்லாமல் வேண்டியதைச் செய்யும் சமுராயைப் பார்த்துத் துணிவு கொள்ளும் டகேஷி (Of course! அத்தனையும் அவர் கற்பனை தான்!) தன்னையும் அந்த சமுராயைப் போல் எண்ணிக்கொண்டு தைரியமாக, ஒரு பியருக்கு இரு பியராக ஆர்டர் செய்து தனது செட் மீலுடன் இரசித்து  அருந்துகிறார்.

 கதை என்பது இது தான். ஒவ்வொரு எபிஸோடிலும் அவர் ஓர் உணவகத்திற்கு உணவருந்த செல்வதும், அங்கு அவருக்கு ஏற்படும் தயக்கங்களும், அந்தத் தயக்கங்களை அவரின் கனவு நாயகனான கற்பனை சமுராய் போக்குவதும் அவன் கொடுக்கும் தைரியத்தில் டகேஷி கஸுமி ஓய்வு கால வாழ்க்கையில் அவர் இத்தனை வருடங்கள் தவறவிட்ட வாழ்க்கையை வாழ்வதும் தான்.

பன்னிரண்டு எபிஸோடுகள் உள்ளத் தொடரில் மிக நீளமான எபிஸோடு என்பதே இருபத்தி நான்கு நிமிடங்கள் தான். வசனங்கள் என்று பார்த்தால் இதில் மொத்தம் மூன்று-நான்கு நிமிடங்கள் கூட இருக்காது. கதாபாத்திரங்களும் நான்கு-ஐந்து பேர் தவிர அதிகமில்லை. ஆனாலும் நம் மொத்த கவனத்தையும் பிசிறில்லாமல் ஈர்ப்பதுடன் மட்டுமல்லாமல் முதல் எபிசோடில் முதல் சில கணங்களில் நம் முகத்தில் ஒட்டும் புன்னகை இறுதி வரை கலையாமல் இருப்பதற்கு முழுமுதல் காரணம் டகேஷி கஸுமியாக நடித்திருக்கும் 61-வயது ஜப்பானிய நடிகர் Naoto Takenaka (நஒட்டோ டகேநகா).

அவர் உணவை இரசித்து உண்பதும், அப்படி உண்ணும் போது அவரின் முக பாவங்களும், நல்ல உணவை உண்டு முடித்த பின் அவரிடம் தோன்றும் திருப்தியும், ஒரு குழந்தைத்தனமான உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் வாழ்வை அறுபது வயதிற்குப் பின் அவர் எதிர்கொள்வதும் நம்மையும் அவர் வாழ்க்கைக்குள் இழுத்துக்கொண்டு விடுகின்றன. இப்படி ஜப்பானிய உணவைத் தனிமையில் இரசித்து உண்ணும் படி நடித்திருக்கும் Takenaka-வுக்கு நிஜத்தில் தனிமையில் உண்ணப் பிடிக்காதது மட்டுமல்ல, அவருக்கு மிகவும் பிடித்தமானது இந்திய உணவு, அதிலும் குறிப்பாக இந்திய கிரேவி (curry) வகைகள்.

ஒரு கடற்கரை விடுதியில் காலையில் அவர் உண்ணும் சுட்ட கருவாடாகட்டும், சினிமா அவுட்டோர் படப்பிடிப்பில் எக்ஸ்ட்ரா நடிகர்களுக்குத் தரப்படும் 'பென்டோ பாக்ஸ்' (‘Bento Box’) உணவாகட்டும், மழையில் ஒழுகும் உணவகம் ஒன்றில் குடையைப் பிடித்துக்கொண்டு முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் அருந்தும் உணவாகட்டும் … அத்தனையும் நம் முகத்தில் ஒட்டியிருக்கும் புன்னகையை அகலமாக்கும் சங்கதிகள்.

ஜப்பானிய உணவுகளைப் பற்றி மட்டுமல்லாது, ஜப்பானைப் பற்றியும், ஜப்பானிய வாழ்க்கை முறை பற்றியும் மிகச் சிறந்த அறிமுகமாக இருக்கும் இந்தத் தொடர்.

என்ன … ஒரே ஒரு குறை தான்! ஒவ்வொரு எபிஸோடிலும் காட்டப்படும், சமைக்கப்படும், உண்ணப்படும், இரசிக்கப்படும், அனுபவிக்கப்படும் உணவுகளைப் பார்த்துவிட்டு நம் நாவிலும் நீர் சுரக்க, அந்த உணவுகள் நினைவூட்டும் நம் உணவுகளை நமக்குப் பிரியமான உணவகங்களில் இருந்து ஆர்டர் செய்தோ நேரில் சென்றோ உண்ண முடியாத சூழலில் இந்தத் தொடரைப் பார்க்க நேர்வது தான்.

அந்த வெறுப்பின் உச்சத்தில் உங்களிடமிருந்து வெளிப்படும் கோபத்திலிருந்து இந்தத் தொடரை அறிமுகப்படுத்திய இந்தப் பதிவையும் அதை எழுதியவரையும் அந்த ஜப்பானிய சமுராய் காப்பாற்றட்டும்!





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

The Red Balloon (பொதிந்திருக்கும் பவளங்கள்)

ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - V

மண்ணோடு மண்ணாக … (வீடு series – II)