ஆயிஷா (முத்துக் குளிக்க வாரியளா?)
தமிழில் பதின்ம வயதினரை (teenagers) மையமாகக் கொண்டு எழுதப்படும் கதைகளும் புத்தகங்களும் மிக மிக அரிதாகவேக் கண்ணில் படுகின்றன. அப்படி அரிதாகக் கண்ணில் பட்ட புத்தகம் இரா. நடராசன் எழுதிய 'ஆயிஷா' . மொத்தம் இருபத்தி நான்கு பக்கங்களே கொண்ட மிகச் சிறிய புத்தகமாக இருந்தாலும் பேசு பொருள் சற்று கனமானதுதான். பத்தாம் வகுப்பில் படிக்கும் மாணவி ஆயிஷாவைப் பற்றியும் அவளுடைய ஆசிரியையைப் பற்றியுமான கதையாக விரிந்தாலும் இன்னொருபுறம் அது நம்முடைய கல்விச் சூழலைப் பற்றிய வலிமிகு விமர்சனமாகவே இருக்கிறது. கல்விக் கூடங்களில் காலெடுத்து வைக்கும் குழந்தைகள் ஒவ்வொருவரும் எத்தகைய அறிவினைச் சுமந்து வருகிறார்கள், அந்த அறிவை நமது கல்வி அமைப்பு கூர் தீட்டி வாள் சுழற்ற பயிற்சி அளிக்காமல் எப்படி மழுங்கடித்து மதிப்பெண் எனும் உறைக்குள் திணிக்கிறது என்பதாக கதையோட்டத்தின் ஊடவே சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். கதை கொஞ்சம் melodramatic ஆன ஒன்று தான். ஆரம்ப வரிகளை வாசிக்கும் போதே முடிவு என்னவாக இருக்கும் என்று ஊகித்துவிடக்கூடிய கதையோட்டம் தான். ஆனாலும் வாசித்து முடிக்கையில் மனம் கனப்பதைத் தடுக்க இயலாமல்தான் போகிறது. ஏப்ரல...