நாவாய் ஒப்பந்தம் - I

 


என் திருமணத்திற்கு அடுத்த ஜுலை மாதம் மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது, மூன்று கேஸுகளில் ஷெர்லக் ஹோம்ஸுடன் இணைந்து அவருடைய துப்பறியும் முறைகளை கூடவே இருந்து பார்த்ததில். என்னுடைய நோட்ஸுகளில் இவற்றை ‘இரண்டாம் கறையின் மர்மம்’, ‘நாவாய் ஒப்பந்தம்’ மற்றும் ‘சோர்ந்து போன கேப்டன்’ என்ற தலைப்புகளின் கீழ் குறித்து வைத்திருந்தேன்.

இதில் முதல் கேஸ் அரச குடும்பத்தின் பல பேர் சம்பந்தப்பட்டிருப்பதாய் இருப்பதால் இதை பற்றிப் பேசுவதற்கு அடுத்த நூற்றாண்டு வரைக் காத்திருக்க வேண்டும். அந்தக் கேஸில் சம்பந்தப்பட்டவர்கள் ஷெர்லக் ஹோம்ஸின் திறமையைப் பார்த்து வியந்ததற்கு சாட்சியம் போல், அவர் பாரீஸ் போலீசுக்கு அந்தக் கேஸை விளக்கிச் சொல்லியதின் வார்த்தை மாறா ரிப்போர்ட் என்னிடம் இருக்கிறது. ஆனாலும் அதைப் பற்றிப் பேச முடியாததினால், பட்டியலில் அடுத்து இருக்கும் கேஸிற்குப் போகிறேன். இந்தக் கேஸின் கிளையன்ட் என்னுடைய பள்ளித் தோழன் என்பதாலும், தேசத்தின் பாதுகாப்பு குறித்ததாகவும் இருப்பதாலும் இது கொஞ்சம் தனித் தன்மை கொண்டதாகிறது.

என்னுடைய பள்ளி நாட்களில் என்னுடன் படித்தவன் பெர்சி பெல்ப்ஸ் (Percy Phelps). என் வயதை ஒத்தவனானாலும் எனக்கு இரண்டு வகுப்புகள் சீனியராக இருந்தான் அவன். மகா புத்திசாலியான அவன் பள்ளியில் நடந்த போட்டிகள் அனைத்திலும் வென்று பரிசுகளைத் தட்டிச் சென்றது மட்டுமல்லாமல், பள்ளிப் படிப்பு முடிந்ததும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயில உதவித் தொகையும் பெற்று அங்கு படிக்கச் சென்றான். அவனுடைய தாய் மாமா லார்ட் ஹோல்ட்ஹர்ஸ்ட் (Lord Holdhurst), கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி. ஆனால் இந்த உறவும் அவர் பதவியும் அவனுக்குப் பள்ளியில் எவ்வகை உதவியும் செய்யவில்லை. மாறாக எல்லோராலும் குறிவைத்து சீண்டப்படுவதற்கும், கிரிக்கெட் விளையாடும்போது கால்களில் ஸ்டம்பினால் அடி வாங்குவதற்கும் காரணமாய் இருந்தது. ஆனால் படிப்பை முடித்து வெளியுலகில் அவன் நுழைந்ததும் கதை வேறாயிருந்தது. வெளியுறவுத் துறையில் நல்ல பொறுப்பான வேலையில் சேர அவனுடைய மாமாவின் இந்த அந்தஸ்தும் பதவியும் உபயோகமாய் இருந்தன என்று நான் பல காலம் முன் கேள்விப்பட்டதோடு சரி. அத்துடன் அவன் என் நினைவை விட்டு சுத்தமாய் அகன்று விட்டான், அந்தக் கடிதம் வரும் வரை.

பிரையர்ப்ரே, வோக்கிங் (Briarbrae, Woking)

என் அருமை வாட்சன்,

'தவளைக்குஞ்சு' பெல்ப்ஸை உனக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய மாமாவின் மூலமாக வெளியுறவுத் துறையில் ஒரு நல்ல வேலையில் சேர்ந்து விட்டேன் என்பதை நீ கேள்விப்பட்டிருப்பாய். நம்பிக்கைக்குரியவனாய் இருந்த என்னை, மோசமான சம்பவம் ஒன்று என் வேலையையும் வாழ்வையும் சேர்த்து மொத்தமாகக் குலைத்துப் போட்டுவிட்டது.

அந்த துர்சம்பவத்தைப் பற்றிக் கடிதத்தில் எழுதிப் பிரயோஜனமில்லை. என்னுடைய வேண்டுகோளுக்கு நீ இணங்கினால் அதை நான் நேரில் விவரிக்கிறேன். ஒன்பது வாரங்களாய் என்னை வாட்டியெடுத்த மூளைக் காய்ச்சலில் இருந்து இப்போது தான் மீண்டிருக்கிறேன். உன்னுடைய நண்பர் ஹோம்ஸை அழைத்துக் கொண்டு என்னை வந்து பார்க்க முடியுமா? இந்த விஷயம் சம்பந்தமான அவருடைய கருத்துக்களைக் கேட்பதில் ஆர்வமாய் இருக்கிறேன். போலீஸ் இதில் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை எனக் கைவிரித்து விட்டனர். ஒவ்வொரு நிமிடமும் எனக்கு ஒரு மணி நேரம் போல இருக்கிறது. சுய நினைவில் இல்லாதிருந்தபடியால்தான் அவரை இதற்கு முன் தொடர்புகொள்ளவில்லை; அவருடைய திறமைகளில் நம்பிக்கை இல்லாதபடியால் அல்ல. இதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தால் மறுபடியும் மூளை பாதிப்பிற்கு ஆளாகிவிடுவேன் என்று அஞ்சுகிறேன். இந்தக் கடிதத்தை நானே எழுதும் அளவிற்குக் கூட என் உடல்நிலை இல்லாததால், இதை உரக்க சொல்லி வேறொருவர் மூலமாக எழுதி அனுப்புகிறேன். எப்படியேனும் அவரை அழைத்து வா.

உன் பழைய பள்ளித் தோழன்,
பெர்சி பெல்ப்ஸ்.

மறுபடி மறுபடி ஹோம்ஸை அழைத்து வரச் சொல்லி எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தைப் படித்ததும் மனது பிசைந்தது. அந்த வார்த்தைகளில் ஒளிந்திருந்தக் கெஞ்சல், ஹோம்ஸை அழைத்துச் செல்வது கடினமானக் காரியமாக இருந்திருந்தாலும், அதைச் செய்ய என்னை நிச்சயம் தூண்டியிருக்கும். ஆனால் ஹோம்ஸுக்கு இப்பேற்பட்ட விஷயங்களின் மேல் எவ்வளவு ஆர்வமென்று நான் அறிந்திருந்தபடியால், அவரை சம்மதிக்கச் செய்வது சுலபமாகவே இருக்கும் என்றும் நான் அறிந்திருந்தேன். உடனே அந்தக் கடிதத்தை ஹோம்ஸிடம் காட்டவேண்டும் என்று என் எண்ணத்தையே என் மனைவியும் சொன்னபடியால் அடுத்த ஒரு மணி நேரத்தில் பேக்கர் தெருவின் (221 B, Baker Street) என் பழைய ஜாகையில் இருந்தேன்.

ஹோம்ஸ் தனது இரவு உடையுடன் அவரது சிறிய மேஜை ஒன்றில் அமர்ந்து ஏதோ வேதியியல் பரிசோதனை நடத்திக்கொண்டிருந்தார். பன்சன் அடுப்பு ஒன்றின் மீது வளைந்த குடுவையில் ஏதோ ஒரு திரவம் தளபுளவென்றுக் கொதித்துக் கொண்டிருக்க, அதிலிருந்து வெளியேறிய ஆவி குளிர்ந்து மறுபடி திரவமாகி வேறொரு குடுவையில் சேகரிப்பாகிக்கொண்டிருந்தது.

                                    

நான் உள்ளே நுழைந்த போது ஹோம்ஸ் தலையைக் கூட நிமிர்த்தாததால் அது ஒரு முக்கியமான ஆய்வாக இருக்கவேண்டும் என்று எண்ணி நாற்காலி ஒன்றில் அமர்ந்துக் காத்திருந்தேன். முன் இருந்த சீசாக்களில் அதிலும் இதிலும் என பிப்பெட் ஒன்றில் திரவத் துளிகளைச் சேகரித்து இறுதியில் ஒரு சோதனைக் குழாயில் ஒரு திரவத்தை எடுத்து வந்தார்.

"திருப்புமுனைத் தருணத்தில் வந்திருக்கிறீர், வாட்சன்", என்றார் அவர். "இந்தத் தாள் நீலமாகவே இருந்தால் எதுவும் பிரச்னையில்லை. சிவப்பாக மாறினால் ஓர் உயிருக்கு ஆபத்து", என்று கூறி லிட்மஸ் காகிதம் ஒன்றை சோதனைக் குழாயில் இருந்தத் திரவத்தினுள் நுழைத்தார். உடன் அது மங்கிய அழுக்கான சிவப்பாக மாறியது. 

"ஹூம்! நான் நினைத்தது போல் தான்! சற்று நேரத்தில் முடிந்து விடும், வாட்சன். அது வரையில் புகைப்பதற்கு புகையிலை வேண்டுமெனில் அந்த பெர்ஸியச் செருப்பில் இருக்கிறது", என்று கூறிவிட்டு நான்கைந்து தந்திகளை எழுதி காத்திருந்த பையனிடம் கொடுத்துவிட்டு, என் முன் இருந்த நாற்காலியில் தொப்பென்று அமர்ந்து தன் மெலிந்த கால்களைத் தன் நீண்ட கைகளால் கட்டிக்கொண்டார்.

"ஒரு சாதாரணக் கொலை", என்றார் அவர் பரிசோதனைக்கு விளக்கமாக. "புயலைத் தெரிவிக்கும் கடற்பறவை போல், உம்மிடம் ஏதோ மிக வித்தியாசமானக் குற்றம் பற்றியத் தகவல் இருக்கும் போலிருக்கிறதே, வாட்சன்! என்ன விவரம்?"

நான் கடிதத்தை நீட்டினேன். மிகுந்த கவனத்துடன் வாசித்து முடித்தார். "விவரங்கள் ஏதும் அவ்வளவாக இந்தக் கடிதம் சொல்லவில்லையல்லவா?" என்றார் அதை என்னிடம் நீட்டியபடி.

"கிட்டத்தட்ட எதுவும் இல்லை".

"ஆனாலும் அந்தக் கையெழுத்து கொஞ்சம் சுவாரசியமாய் இருக்கிறது".

"ஆனால் அது அவனுடைய எழுத்து அல்லவே!"

"இல்லை. அது ஒரு பெண்ணினுடையது".

"இருக்காது. ஆணினுடையதாகத் தான் இருக்கவேண்டும்".

"இல்லை. நிச்சயமாய் ஒரு பெண்ணினுடையது. அதுவும் அசாதாரணமானக் குணநலம் கொண்ட ஒரு பெண்ணினுடையது. ஒரு விசாரணையின் தொடக்கத்திலேயே நம்முடைய கிளையன்ட் இப்படிப்பட்ட, அந்தக் குணம் நன்மையோ தீமையோ, குணமுடையவருடன் நெருங்கியத் தொடர்பில் இருக்கிறார் என்று தெரிந்து கொள்வதில் நமக்கு சில நன்மைகள் இருக்கின்றன. ஏற்கனவே என் ஆர்வம் தூண்டப்பட்டுவிட்டது, வாட்சன். நீர் தயாரென்றால் உடனே நாம்  வோக்கிங் புறப்பட்டு செல்வோம், இப்படி ஒரு மோசமான நிலையில் இருக்கும் அந்த வெளியுறவுத் துறை ஊழியரையும் அவருக்குக் கடிதங்கள் எழுதிக் கொடுக்கும் அந்தப் பெண்ணையும் பார்க்க".

வாட்டர்லூவில் அதிர்ஷ்டவசமாக சரியான நேரத்தில் இரயில் கிடைக்க, ஒரு மணி நேரத்தில் நாங்கள் வோக்கிங்கில் இருந்தோம். ஸ்டேஷனிலிருந்து நடக்கும் தூரத்திலேயே இருந்தது பிராயர்ப்ரே எனும் அந்தத் தனியான பெரிய வீடு. எங்கள் பெயர்ச் சீட்டுகளைக் கொடுத்தனுப்பிய உடன் ஒரு அழகிய வரவேற்பறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.

"நீங்கள் வந்ததில் மிகவும் மகிழ்ச்சி", என்றபடி கொஞ்சம் பருமனாய் இருந்த ஒருவரால் வரவேற்கப்பட்டோம். வயது அவருக்கு நாற்பதுக்கு அருகில் இருந்திருக்கலாம் என்றாலும் அவருடைய கன்னங்களில் இருந்த சிவப்பும் கண்களில் இருந்த உற்சாகமும் ஒரு குறும்பு மிக்கச் சிறுவனைப் போன்றதொரு பிம்பத்தை ஏற்படுத்தின.

"நீங்கள் வந்துவிட்டீர்களா, வந்துவிட்டீர்களா என்று காலை முதலேக் கேட்டுக்கொண்டிருக்கிறான், பெர்ஸி. தண்ணீரில் தத்தளிப்பவன் துரும்பைப் பற்றுவது போல் உங்கள் மேல் நம்பிக்கை கொண்டிருக்கிறான் அவன். அவனுடைய பெற்றோர்கள் என்னை அனுப்பினார்கள் உங்களை வரவேற்க. பாவம்! அவர்களுக்கு இந்த விஷயத்தைப் பற்றி நினைத்தாலே தாங்கமுடியாத வேதனை உண்டாகிறது".

"எங்களுக்கு இதுவரை எந்தத் தகவல்களும் தெரியாது", என்ற ஹோம்ஸ், "நீங்கள் இந்தக் குடும்பத்தவர் அல்லவென்று நினைக்கிறேன்", என்றார்.

ஒரு கணம் முகத்தில் ஆச்சர்யம் மின்னி மறைய, பின் தன்னைத் தானேக் குனிந்துப் பார்த்துவிட்டு சிரிக்கத் தொடங்கினார் அவர்களை வரவேற்றவர்.

"ஓ! என்னுடைய லாக்கெட்டில் இருந்த ‘JH’ எழுத்துக்களை நீங்கள் பார்த்துவிட்டீர்கள்!" என்றார். "ஒரு நிமிடம் நான் கூட நீங்கள் எதோ அதி புத்திசாலியானக் காரியம் எதையோ செய்துவிட்டீர்கள் என்று நினைத்துவிட்டேன்! ஜோசப் ஹாரிசன் (Joseph Harrison) என் பெயர். என் சகோதரி ஆன்னியைத் (Annie) தான் பெர்சி திருமணம் செய்துகொள்ளப்போகிறான். திருமண சம்பந்த உறவாகவேனும் வருங்காலத்தில் நான் இருப்பேன் இந்தக் குடும்பத்தில் ஒருவனாக. பெர்சியின் அறையில் தான் இருக்கிறாள் என் சகோதரி. இந்த இரண்டு மாதங்களாக அவள் தான் இரவு பகலாக அவனுக்குப் பணிவிடை புரிந்து பேணி வருகிறாள். இதற்கு மேலும் நாம் தாமதித்தால் அவனுக்குப் பொறுமை இருக்காது. அவனுடைய அறைக்குச் செல்லலாம், வாருங்கள்".

வரவேற்பறை இருந்த அதே தரைத் தளத்திலேயே தான் எங்களை அழைத்துச் சென்ற அறையும் இருந்தது. அதன் ஒரு பகுதி அமர்ந்து பேசுவதற்கு ஏதுவாகவும் இன்னொரு பகுதி படுக்கை அறையாகவும் பிரிக்கப் பட்டிருந்தது. ஒரு இளைஞன், நீண்ட நோயிலிருந்து மீண்டு வந்தும் முழுதாய் உடல்நிலை தேறாதவனாய், திறந்திருந்த ஜன்னலின் அருகே போடப்பட்டிருந்த சோபாவில் படுத்திருந்தான். ஜன்னலின் வழி வீசிய மெல்லிய கோடைக் காற்று பூக்கள் நிறைந்த தோட்டத்தின் வாசத்தை ஏந்தி வந்தது. அவன் அருகில் அமர்ந்திருந்த இளம்பெண் எங்களைப் பார்த்ததும் எழுந்து நின்றாள்.

                        

"நான் போகட்டுமா, பெர்சி?" என்று வினவினாள்.

அவள் கையை இறுகப் பற்றி அவளைத் தடுத்து நிறுத்தினான் பெர்சி.

"எப்படி இருக்கிறாய், வாட்சன்?" என்று என்னை விசாரித்தான். "மீசையுடன் உன்னைப் பார்ப்பதில் எனக்கு உன்னை அடையாளமேத் தெரியவில்லை. உனக்கும் என்னை அடையாளம் தெரிந்திருக்காது அல்லவா?" என்றான். பின்னர் ஹோம்ஸைப் பார்த்து, "இவர் தான் உன் பிரபல நண்பர் ஷெர்லக் ஹோம்ஸாக இருக்க வேண்டும்?" என்றான்.

அவர்கள் இருவரையும் ஓரிரு வார்த்தைகளில் அறிமுகம் செய்து வைத்த பின் நாங்கள் இருவரும் அவன் முன் அமர்ந்தோம். எங்களை அழைத்து வந்த ஜோசப் ஹாரிசன் விடைபெற்றுச் செல்ல, அவனுடைய சகோதரி ஆன்னி அங்கேயே இருந்தாள், பெர்சியின் கையை ஆதரவாய்ப் பற்றிக் கொண்டு. உயரம் சற்றேக் குறைவு என்றாலும், ஆலிவ் சருமமும், அகன்ற கரிய இத்தாலியக் கண்களும், கருகருவென்ற அடர்ந்த கூந்தலும் அவளைப் பளிச்சென்று காட்டின. அவளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பெர்சி பெல்ப்ஸ் கூடுதல் களைப்புடனும் சோகை பீடித்தவனாகவும் தெரிந்தான்.

                                    

"உங்கள் நேரத்தை வீணாக்காமல் நேரே விஷயத்திற்கு வருகிறேன். இந்தப் பேரிடி என் தலையில் விழும் வரை நல்லதொரு வேலையில் இருந்த, திருமணத்தை எதிர்நோக்கியிருந்த ஒரு மகிழ்ச்சியான மனிதன் நான், மிஸ்டர். ஹோம்ஸ். என்னுடைய மாமா லார்ட் ஹோல்ட்ஹர்ஸ்ட்டின் தயவாலும் உதவியாலும் வெளியுறவுத் துறையில் நல்லதொரு வேலையில் இருந்தேன். என் மாமா வெளியுறவுத் துறை அமைச்சர் ஆனதும் என்னிடம் முக்கியமான பல வேலைகளைக் கொடுத்தார். எல்லாவற்றையும் எந்தக் குறையும் இல்லாமல் நான் வெற்றியுடன் முடித்துக்கொடுத்ததால் என் மேல் அவருக்கிருந்த நம்பிக்கைக் கூடியது. முக்கியமானத் துறையின் அமைச்சர் என்பதால் பலவகையான ரகசிய ஆவணங்களும் விஷயங்களும் கையாளப்படும் இடத்தில் நான் அத்தகைய நம்பிக்கையைப் பெற்றிருந்தேன்.

கிட்டத்தட்ட பத்து வாரங்களுக்கு முன் - சரியாகச் சொல்வதென்றால் மே 23ஆம் தேதி - அவருடைய தனியறைக்கு என்னை அழைத்தார். என்னையும் என் வேலையையும் பாராட்டிய பின் ஒரு அதிமுக்கிய, அதிரகசிய வேலை ஒன்றை என்னிடம் ஒப்படைக்கப் போவதாகக் கூறினார்.

சாம்பல் நிறத்தில் சுருளாக சுருட்டப்பட்ட ஒரு காகித சுருளை அவருடைய அலமாரியிலிருந்து எடுத்தார். "இது இங்கிலாந்திற்கும் இத்தாலிக்கும் ஏற்பட்ட ரகசிய உடன்படிக்கையின் ஒப்பந்த அசல். இதைப் பற்றிய சில வதந்திகள் ஏற்கனவே பத்திரிக்கைகளுக்குக் கசிந்துவிட்டன. இனியும் வேறு எந்தத் தகவல்களும் வெளியேறிவிடாமல் இருப்பது மிக மிக அவசியம். பிரெஞ்சுத் தூதரகமும் ரஷ்யத் தூதரகமும் என்ன விலை கொடுத்தேனும் இதை வாங்குவதற்குத் தயாராய் இருக்கின்றன. சரியானபடி இவை என் அலமாரியை விட்டு வெளியே போகக்கூடாது. ஆனால் இதைக் கண்டிப்பாய் ஒரு பிரதியேனும் எடுக்கவேண்டும். உன்னுடைய ஆபிசில் உனக்கு மேஜை இருக்கிறதல்லவா?"

"இருக்கிறது"

"அப்படியெனில் இதை எடுத்துப் போய் உன் மேஜையில் வைத்துப் பூட்டிவிடு. யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற பயமின்றி மற்றவர்கள் வேலை முடிந்து கிளம்பிய பின் நீ இதைப் பிரதியெடுக்கும் வேலையை ஆரம்பி. பிரதி எடுத்து முடிந்ததும் அசலையும் நகலையும் மறுபடி உன் மேஜையில் வைத்துப் பூட்டிவிடு. நாளைக் காலை என்னிடம் இரண்டையும் ஒப்படைத்துவிடு", என்றார். 

நான் அந்தக் காகிதங்களை எடுத்துக்கொண்டு - "

"ஒரு நிமிடம்", என்று இடைமறித்தார் ஹோம்ஸ். "இந்த சம்பாஷணை நடந்த போது நீங்கள் இருவர் மட்டும்தானே இருந்தீர்கள்?"

"நிச்சயமாக".

"இந்த சம்பாஷணை நடந்த அறை பெரியதா?"

"முப்பது அடி இருபுறமும்".

"நீங்கள் இருந்தது அறையின் நடுவிலா?"

"கிட்டத்தட்ட".

"மெல்லிய குரலில் தானே பேசினீர்கள்?"

"என் மாமாவின் குரலே சன்னமானதுதான். நான் எதுவும் பேசவேயில்லை ஓரிரு வார்த்தைகள் தவிர".

"நன்றி. மேலே சொல்லுங்கள்", என்றார் ஹோம்ஸ் கண்களை மூடிக்கொண்டு.

"அவர் சொன்னபடியே செய்தேன். மற்ற கிளார்க்குகள் எல்லாரும் வெளியேறும்வரைக் காத்திருந்தேன். என்னுடைய அறையில் இருந்த இன்னொரு கிளார்க் சார்ல்ஸ் கொரோட்டுக்கும் (Charles Gorot) கொஞ்சம் வேலைகள் பாக்கியிருந்ததால் அவற்றை முடித்து அவன் கிளம்புவதற்குள் நான் சென்று என் இரவு உணவை முடித்துவிட்டு வந்தேன். நான் வருவதற்குள் அவன் கிளம்பிவிட்டான். என் வேலையை நான் விரைந்து முடிப்பதில் ஆர்வமாய் இருந்தேன். ஜோசப், இப்போது நீங்கள் பார்த்த நபர், லண்டனுக்கு வந்திருந்து அன்றைய இரவு பதினோரு மணி ரயிலில் வோக்கிங் திரும்புகிறார் என்று நான் அறிந்திருந்ததால், பணியை முடித்துவிட்டு அவருடனேயே நானும் ரயிலில் வீடு திரும்பிவிட விரும்பினேன்.

ஒப்பந்தத்தை எடுத்துப் பார்க்கும் போது புரிந்தது அதன் முக்கியத்துவத்தை என் மாமா மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்று. பிரெஞ்சுக் கப்பற்படை இத்தாலியக் கப்பற்படையைத் தோற்கடிக்கும் பட்சத்தில் பிரிட்டனின் செயற்பாடுகள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்று விவரிக்கும் ஒப்பந்தம் அது. முற்றிலும் கடற்படை சம்பந்தப்பட்டது. முடிவில் அதில் கையெழுத்திட்ட அரசாங்க அதிகாரிகளின் கையொப்பங்கள் இருந்தன. மேலோட்டமாக ஒரு பார்வை அதைப் பார்த்துவிட்டு ஒப்பந்தத்தை நகலெடுக்கும் பணியை ஆரம்பித்தேன்.

பிரெஞ்சு மொழியில் இருந்த ஒரு நீண்ட நெடிய ஆவணம் அது. எவ்வளவு முயன்றும் ஒன்பது மணிக்கு மொத்தம் இருந்த இருபத்தி ஆறு பாகங்களில் ஒன்பது பாகங்களைத் தான் என்னால் முடிக்க முடிந்தது. என் திட்டப்படி ரயிலைப் பிடிப்பது இயலாதக் காரியமாய்த் தோன்றியது. நாள் முழுதும் இருந்த வேலைப் பளுவினாலும் இரவு உண்ட உணவினாலும் நிரம்பத் தூக்கக் கலக்கமாய் இருந்தது. ஒரு கப் காபி குடித்தால் கொஞ்சம் தெளிவாய் இருக்கும் என்று தோன்றியதால் ஆபிஸ் உதவியாளரை அழைக்கும் மணியை இழுத்தேன். இரவு முழுவதும் இந்த உதவியாளர் ஆபிசில் தான் இருப்பார். இது போல் யாரேனும் அதிக நேரம் தங்கி வேலை செய்வதாக இருந்தால் அவர்கள் கேட்கும் போது ஒரு சிறிய அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்துக் காபி போட்டுத் தருவார்.

ஆனால் ஆபிஸ் உதவியாளருக்குப் பதில் நடுத்தர வயது பெண்மணி ஒருவர் என் அழைப்பு மணிக்குப் பதில் கொடுக்கும் விதமாக என் அறைக்கு வந்தார். தான் உதவியாளரின் மனைவி என்றும், அங்கு சுத்தம் செய்யும் வேலையை அவர்தான் செய்வதாகவும் என்னிடம் கூறவும், என் காபிக்கான ஆர்டரை அவரிடமேக் கூறினேன். சரியென்று சொல்லிச் சென்றார் அந்தப் பெண்.

அதன் பின் விட்ட இடத்திலிருந்து அடுத்த இரண்டு பகுதிகளை எழுதி நகலெடுத்தேன். மேலும் தூக்கம் கண்களைச் சுழற்றவே, எழுந்து என் அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்தேன். நான் கேட்டிருந்த காபி அதுவரையிலும் வராமல் போகவே என்ன தாமதம் என்று பார்ப்பதற்காக என் அறையை விட்டு வெளியே வந்தேன்.

கிளார்க்குகளின் அறையிலிருந்து சன்னமான விளக்கு எரியும் பாதை ஒன்று வளைந்த படிக்கட்டில் போய்ச் சேரும். எங்கள் அறைக்கு அது ஒன்று தான் வழி உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும். இந்தப் படிக்கட்டு ஒரு சிறிய தளத்தில் இறங்கி பின் மறுபடியும் இன்னும் கொஞ்சம் கீழிறங்கி தரைத் தளத்தில் உள்ள ஹாலில் இணையும். ஆபிஸ் உதவியாளரின் இடமும் இங்கே தான் இருக்கிறது. மேல் உள்ள சிறிய தளத்தில் இன்னொரு செட் படிக்கட்டுகள் 900 கோணத்தில் இணைகின்றன. இந்தப் படிக்கட்டுகள் பக்கவாட்டுக் கதவு ஒன்றில் முடிகின்றன. இந்தக் கதவின் வழியே வெளியே உள்ள ஒரு சிறிய சந்திற்குச் செல்லலாம். பணியாட்களும், சில சமயம் கிளார்க்குகளும் இந்தப் பாதையை உபயோகிப்பார்கள்.

என் ஆபிஸினுடைய அமைப்பு இது தான். நீங்கள் புரிந்துகொள்ள ஏதுவாக இந்தப் படத்தை வரைந்திருக்கிறேன்", என்று ஒரு சிறிய வரைபடத்தை நீட்டினான் பெர்சி.

                                    

வரைபடத்தைக் கவனித்துப் பார்த்த ஹோம்ஸ், "நன்றி. உங்கள் அலுவலக அமைப்புப் புரிகிறது", என்றார்.

"இப்போது நான் சொல்லப்போகும் இந்த முக்கியமான விஷயத்தை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும், மிஸ்டர். ஹோம்ஸ். என் அறையில் இருந்து வெளியே வந்து நான் படிகளில் இறங்கி நேரே உதவியாளரின் இடத்திற்குச் சென்றேன். உதவியாளர் அங்கே ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். அடுப்பில் என் காபிக்கான தண்ணீர் தளதளவென்றுக் கொதித்துக் கொண்டிருந்தது. தண்ணீரை இறக்கி வைத்துவிட்டு அடுப்பையும் அணைத்துவிட்டு உதவியாளரை எழுப்பப் போனேன். அந்தக் கணத்தில் அவர் தலைக்கு மேல் தொங்கிய அழைப்பு மணி சத்தமாக ஒலித்தது.

திடுக்கிட்டு விழித்த அவர் என்னைப் பார்த்ததும் குழம்பியவராய், "பெல்ப்ஸ், சார்!" என்றார்.

"என் காபி தயாராகிவிட்டதாவென்று பார்க்க வந்தேன்", என்றேன் நான்.

"தண்ணீரைக் காய்ச்சிக் கொண்டிருந்தபோது தூங்கிவிட்டேன் போல், சார்", என்றார்.

பின்னர் என்னையும் இன்னும் லேசாக அதிர்ந்துகொண்டிருந்த அழைப்பு மணியையும் மாறி மாறிப் பார்த்தவர், ஆச்சர்யத்துடன், "சார், நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்றால் அழைப்பு மணியை யார் ஒலித்தது?" என்று கேட்டார்.

"எந்த அறையின் மணி அது?" என்று நான் அதிர்ந்து போய்க் கேட்டேன்.

"உங்கள் அறை தான், சார்!"

ரகசிய ஒப்பந்தம் மேஜை மேல் இருந்த அந்த அறையிலிருந்து தான் அழைப்பு மணி அடிக்கப் பட்டிருக்கிறது என்று நான் உணர்ந்த போது என் உடல் முழுதும் சில்லிட்டுப் போனது. தலைதெறிக்கப் படிகளில் ஓடி ஏறினேன். பாதைகளில் யாரும் இல்லை. என் அறையிலும் யாரும் இல்லை. என் மேஜை மேல் எல்லாம் அப்படியே இருந்தன, நான் நகலெடுத்த பிரதி உட்பட. ஒரிஜினல் ஒப்பந்தத்தை மட்டும் காணவில்லை!"

ஹோம்ஸ் நிமிர்ந்து உட்கார்ந்துக் கைகளைத் தேய்த்துக்கொண்டார். இந்தப் புதிரில் அவருக்கு சுவாரஸ்யம் ஏற்பட்டுவிட்டதை என்னால் உணரமுடிந்தது.

தொடரும் ...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PIPER (பொதிந்திருக்கும் பவளங்கள்)

ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - V

ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - II