எங்கே செல்லும் இந்தப் பாதை? (சிறுகதை)
'எங்கே செல்லும் இந்தப் பாதை?
யாரோ யாரோ அறிவார்?'
சட்டென்று வீசிச்சென்றச் சில்லிட்டக் காற்று அவள் போட்டிருந்த ஸ்வெட்டரையும் மீறி அவளை லேசாய் நடுங்கச் செய்தது. 'ஜாக்கெட்டைப் போட்டு வந்திருக்கலாமோ?' என்று அவளுக்குத் தோன்றிய சிந்தனை அவளைப் புன்னகைக்கவைத்தது.
'சாகப்போகிறவள் குளிராமல் சாக வேண்டுமாம்!' என்று அவளையே அவள் கேலி செய்துகொண்டு நடந்தாள். எடுத்து வைத்த அடுத்த அடியில் சட்டென்று விரிந்தது அவளை மூச்சுவிட மறக்கச் செய்த மலைக்காட்சி.
அவள் நடந்து வந்த ஒற்றையடிப் பாதை, அது ஒற்றையடிப் பாதை கூட அல்ல - வெறும் ஒற்றையடித்த தடம், ஏறிக்கொண்டே சென்று, சொல்லாமல் கொள்ளாமல் முடிந்தது அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாறைகள் பொதிந்து கிடந்த சிறிய புல்வெளி ஒன்றில். தூரத்தில் அகண்டு நின்று வான் தொட்டது பச்சைப் போர்த்திய மலைத் தொடர். உச்சிகள் மேகங்களில் சொருகி நிற்க, முக்கால் வட்டமாய் மலை உடல்கள் மூடி நின்றன நிலத்தை.
ஆழ மூச்சிழுத்து சுற்றிலும் பார்த்துக் கொண்டு வந்தவளின் பார்வை அவள் நின்றிருந்த அந்தப் புல்வெளியின் ஒரு பகுதியில் நிலைகுத்தி நின்றது. அவளது தேவைக்கு அது சரியான இடமாயிருக்கும் என்று பட்டது அவளுக்கு. அந்த இடத்திற்குப் போவதற்கு அவள் கண்கள் செடிகளின் ஊடேயும் பாறைகளின் இடையேயுமாய் ஒரு பாதையைத் தேர்வு செய்தன. கண்கள் போட்ட பாதையில் அவள் கால்கள் முன்னேறிச் சென்றன. அவள் தேர்வு செய்த இடத்திற்கு சற்று முன்னே அவள் கொஞ்சம் நிதானித்தாள். மிகவும் கவனமாய் கால் வைக்கப் போகும் இடங்களை சரி பார்த்துக் கொண்டாள். சரி பார்த்த இடங்களில் கால் வைத்து மெதுவே முன் சென்றாள். மலையின் ஓரத்திற்கு வந்து நின்று ஜாக்கிரதையாய் எட்டிப் பார்த்தாள். அவளாய்க் குதிக்கும் முன் கால் இடறி தவறுதலாய் விழுந்துவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தாள். தேடித் தேடித் தேர்வு செய்திருந்தாள் அந்த இடத்தை. கடைசித் தருணங்கள் ரம்மியமாயும் வலிகள் அற்றும் இருக்க வேண்டும் என்ற அவள் விருப்பத்தின் வடிவம் அந்த இடம். கைக்கு சிக்கிய காட்டுச் செடியைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு முடிந்த அளவு முன்னால் குனிந்து மலைமுகட்டிலிருந்துக் கீழே பார்த்தாள். பச்சைக் கம்பளம் அவளை வரவேற்கக் காத்துக்கொண்டிருந்ததைப் போல் தோன்றியது அவளுக்கு.
"குதிக்கப்போகிறீர்களா?"
பின்னால் இருந்து கேட்டக் குரல் ஏற்படுத்திய அதிர்ச்சியில் காட்டுச்செடியை அவள் பிடிக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் பள்ளத்தாக்கில் விழுந்திருப்பாள். சுதாரித்துக்கொண்டுத் திரும்பிப் பார்த்தாள். பதினைந்து, பதினாறு வயதுடைய டீன் ஏஜ் பெண் ஒருத்தி கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டிருந்தாள்.
"குதிக்கப்போகிறீர்களா?" என்றாள் அவள் மறுபடியும்.
சொல்வதற்கு பதில் ஏதும் இவளிடம் இல்லாததால் அமைதியாய் இருந்தாள்.
"நீங்கள் குதிப்பதற்கு முன் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?"
இவளுக்கு சுள்ளென்று ஒருக் கோபம் வந்தது ஏனென்றேத் தெரியாமல்.
"நான் குதிக்கத்தான் போகிறேன் என்று நீயாக எப்படி முடிவு செய்யலாம்?" என்றாள் லேசான வீம்புக் கோபம் கலந்த குரலில்.
"என் யூகம் தவறாக இருந்தால், my apologies. இந்த இடத்திற்கு யாரும் வேறு எதற்காகவும் வருவதில்லை".
"இயற்கைக் காட்சியைப் பார்த்து இரசிப்பதற்காகக் கூட நான் வந்திருக்கலாம் அல்லவா?"
"இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் இப்போது நீங்கள் எனக்கு ஒரு பத்து நிமிடங்கள் தந்து உதவமுடியுமா?"
குழப்பத்துடன் பார்த்தாள் உதவி கேட்கும் அந்த அறிமுகமில்லாத பெண்ணை. இவளை விட எப்படியும் எட்டு, ஒன்பது வருடங்களாவது இளையவளாய் இருக்கவேண்டும். ஜீன்ஸும் முழுக்கை கட்டம் போட்ட சட்டையும் அணிந்திருந்தாள். தலையில் அணிந்திருந்த ஹேர் பாண்ட் முகத்தில் முடிகள் விழாமல் ஒதுக்கிப் பிடித்திருந்தாலும், வீசியக் காற்றில் முகத்தில் முடிக்கற்றைகள் உரசிக்கொண்டுதான் இருந்தன. முழங்கால் வரை வளர்ந்திருந்த புற்களும் செடிகளும் அவள் கால்களைப் பாதி மறைத்திருந்தன.
தலை தூக்கிய லேசான எரிச்சலை முந்திக்கொண்டு இவளுக்கு ஓர் ஆர்வம் எட்டிப்பார்த்தது, மலையின் உச்சியில் சாவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் ஒரு பெண், முன்பின் பார்த்திராத இன்னொரு இளம்பெண்ணுக்கு என்ன உதவி செய்துவிட முடியும் என்று.
"உங்களுக்கு வலது புறத்தில் ஒரு சிறிய பாறை இருக்கிறது. அதில் அமருங்கள்", என்றாள் இவளுக்கு சற்றுத் தள்ளி இருந்த பாறை ஒன்றைக் காட்டி.
எதுவும் பேசாமல் கவனமாய் நடந்துசென்று அமர்ந்தாள் அவள் சுட்டிக்காட்டிய பாறையில். மத்தியான வெயில் பட்டு பாறை சூடாகியிருந்தது. அமர்ந்த இவள் தொடைகளின் வழி சூடு உடலில் ஏறி லேசாய் வியர்க்க வைத்தது. தண்ணீர் குடித்தால் நன்றாக இருக்கும் என்றுத் தோன்றியது.
"தண்ணீர் வேண்டும் போல் தோன்றுகிறதா? அவளுக்கும் அப்படித்தான் தோன்றியது", என்றபடி அந்தப் பெண் முன்னால் சென்று சில நிமிடங்களுக்கு முன் இவள் நின்றிருந்த இடத்தில் நின்றாள், எந்தச் செடியையும் பிடித்துக்கொள்ளாமலேயே.
சட்டென்று எகிறிய இதயத்துடிப்புடன் அவள் என்ன செய்யப்போகிறாள் என்று புரியாமலேயே அவளைப் பார்த்துக்கொண்டிருந்தாள் இவள். விளிம்பில் நின்ற அவள் வலது கையை அந்தரத்தில் நீட்டி முன்னும் பின்னும் வீசினாள். வீசிவரும் குளிர்காற்றை விரல்கள் விரித்து வழிய விட்டாள். சட்டென்று இவளுக்கு முதுகுக் காட்டி நின்றவள் கீழே குனிந்து பார்த்தாள். எங்கோ ஒரு கழுகு கிறீச்சிட்டது. முதுகுத்தண்டின் அடியிலிருந்து ஒரு சிலிர்ப்பு இவள் உச்சந்தலை வரை ஓட, சில நிமிடங்களுக்கு முன்தான் அதே இடத்தில் தான் நின்றிருந்ததை சுத்தமாக மறந்துபோனாள். ஆபத்தின் ஓரத்தில் நின்றிருந்தவளைத் திருப்பி அழைக்கக் குரல் எழாமல், உடல் மொத்தமும் உறைந்து போய் கண்கள் நிலைகுத்தி அவளையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"உங்களிடம் சொல்வதைப் போல் அவளிடம் சொல்வதற்கு யாரும் இல்லாததால் அவள் குதித்தாள், இதே இடத்திலிருந்து", என்றாள் அவள் திரும்பி வந்து இவளுக்கு சற்றுத் தள்ளி இருந்த மற்றொரு கல்லின் மீது அமர்ந்துகொண்டு.
"உங்களுக்கு யாரவது சொல்லியிருக்கலாம், அல்லது நீங்கள் கற்பனை செய்திருக்கலாம், இவ்வளவு உயரத்திலிருந்து மனித உடல் கீழே விழுந்தால் அந்த அதிர்ச்சியே இதயத்தை உறைய வைத்து இதயத்துடிப்பை நிறுத்தி, உடல் தரையைத் தொடும் போது பிணமாய்த் தான் தொடும் என்று. அப்படித்தான் அவளும் நம்பியிருந்தாள். அந்த நம்பிக்கையில் தான் அவளும் குதித்தாள் இங்கிருந்து. ஆனால் அது எப்பேர்பட்டத் தவறான நம்பிக்கை என்று கீழேக் கிளைவிரித்திருந்த மரங்களின் மீது அவள் உடல் மோதும் போது அவளுக்குத் தெரிந்தது. உயிரில்லாத வெற்று உடல்தான் தரையில் மோதித் தெறிக்கும் என்று நினைத்துக் குதித்தவளுக்கு பரந்து விரிந்து கிடக்கும் மரங்களை சந்திக்க முழு நினைவோடும் உயிரோடும் தன் உடல் பயணப்படுகிறது என்று குதித்த சில நொடிகளில் புரிந்துவிட்டது. அவளின் அலறலை அலட்சியமாய் புறந்தள்ளிப் போய்விட்டது காற்று. மரங்களில் மோதப்போகும் கடைசி நொடியில் தன்னிச்சையாய் தலையைத் திருப்பிக் கொண்டாள் அவள்”.
"மனித உடல் இவ்வளவு உயரத்திலிருந்து விழும் போது கிட்டத்தட்ட மணிக்கு இருநூறு மைல் வேகத்தை எட்டுமாம். அந்த வேகத்தில் தரையில் மோதினால் உள்ளிருக்கும் உறுப்புகள் அநேகமாய் வெடித்துவிடுமாம். இதயத்திலிருந்து இரத்தத்தை சுமந்து செல்லும் aorta இருதயத்திலிருந்து பிடுங்கிக் கொள்ளுமாம். ஆனாலும் இதயம் அதன் பின்னரும் சில நொடிகள் தொடர்ந்து துடித்துக்கொண்டிருக்குமாம். இதயம் வெளியேற்றும் இரத்தம் மூளைக்குச் செல்ல வழியில்லாததால் மூளை சில நொடிகளிலேயேத் தன் செயல்களை நிறுத்திக்கொள்ளுமாம், மண்டை ஓடு வெடித்து மூளை சிதறாமல் இருந்தால். அதிர்ஷ்டமிருந்தால் சாவு ஒரு சில வினாடிகளில் வந்து விடுதலைக் கொடுக்கும். அவளுக்கு அந்த அதிர்ஷ்டமில்லை".
தூரத்தில் விரித்திருந்த பார்வை சட்டென்று குவிந்து இவளைப் பார்க்க, இவளின் வெளிறிய முகமும், குறுகி உறைந்த உருவமும் அவள் கண்களில் பட்டாலும் அவள் மூளையில் பதிந்ததாகத் தெரியவில்லை. முழங்கால்களில் கைகளை ஊன்றித் தலையைக் கவிழ்ந்து ஆழ சில முறை மூச்சை இழுத்தவள் தலையை உதறிக்கொண்டு நிமிர்ந்து இவளைப் பார்த்தாள்.
அவள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் இவளை பாறையோடு பாறையாய் உறைய வைத்தது. பாறை சூட்டில் வியர்க்க ஆரம்பித்திருந்த இவளின் உடல் இப்போது சில்லிட்டிருந்தது. போட்டிருந்த ஸ்வெட்டரை இழுத்து இறுக்கினாள். இவள் இருப்பதையே மறந்தவள் போல் எதிரில் அமர்ந்திருந்தவளின் பார்வை எங்கோ தூரத்தில் வெறித்திருந்தது.
"அடர்ந்த காட்டு மரங்கள் அவள் விழுந்த வேகத்தை மட்டுப்படுத்தின. அனிச்சையாய்க் கைகளை நீட்டிக் கிடைத்தக் கிளையைப் பிடித்து விழுவதை நிறுத்த முயன்ற அவளால் என்ன செய்தும் அவள் உடல் மரங்களின் கிளைகளில் மோதி நொறுங்கும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இயற்பியலும் புவிஈர்ப்பு விசையும் மரக்கிளைகளும் அவளுடைய இளம் உடலை வளைத்து, நெளித்து, முறுக்கி, நொறுக்கிப் போட்டன. அவளுடைய வலது தோள் அவள் கிளைகளைப் பிடித்து நிறுத்தப் பார்த்த வேகத்தில் மூட்டிலிருந்து மொத்தமாய் கழன்று விட்டிருந்தது. இடது கையோ தோளிலிருந்து பிய்ந்து போய் அக்குளின் அடியில் சிக்கிய கிளையின் தயவால் மொத்தமாய் அறுந்துவிழாமல் தோல் இழையில் தொங்கிக்கொண்டிருந்தது. இடது கன்னத்தில் குத்திய முறிந்த கிளையொன்று வலது பக்கமாய் வெளியேறி அவள் வலது கண்ணைப் பெயர்த்தெடுத்திருந்தது. நீட்டிய கிளைகளிலும் முறிந்த கொப்புகளிலும் சிக்கிய அவள் முடி விழுந்த வேகத்தில் மண்டை ஓட்டின் தோலோடு சேர்ந்து உரிந்துவிட்டிருந்தது. உடைந்த விழா எலும்புகள் இடது நுரையீரலைத் துளையிட்டிருந்தன. முதுகுத்தண்டு இடுப்புக்குக் கீழே இரண்டாய் உடைந்துவிட்டிருந்ததால் அவள் கால்களை அவளால் உணர முடியவில்லை. ஆனால் தப்பிய ஒற்றைக் கண்ணால் பார்க்க முடிந்தது. இத்தனை இடிபாடுகளுக்கும் இடையே சிக்கிய அவளுடைய இதயம் மட்டும் சின்னக் கீறல் கூட இல்லாமல் அதிசயமாய்த் துடித்துக் கொண்டிருந்தது உடைந்த அவள் உடலை ஒட்டவைக்கும் அவசரத்துடன். விழுந்த வேகத்தில் மூர்ச்சையான அவள் மயக்கம் தெளிந்ததும் இரத்தம் உறைந்த ஒற்றைக் கண்ணை லேசாய்த் திறந்துப் பார்த்தது, காட்டுப் பூனை போன்ற ஏதோ ஒன்று அவள் கையைக் கடித்து இழுத்துக்கொண்டிருப்பதை".
சட்டென்று நிறுத்தி இவள் கண்களை நேரே உற்று நோக்கினாள் அவள். உறைந்து அமர்ந்திருந்தவளைத் துளைத்துச் சென்றது அவள் பார்வை.
"கடலில் சுறாக்கள் மட்டுமல்ல, காட்டின் வேட்டை மிருகங்களும் இரத்தத்தின் வாடையை நெடுந்தூரத்திலிருந்து அறியக்கூடியவை என்று அன்று அவள் தெரிந்துகொண்டாள். உணர்ச்சியின்றி உடைந்துத் தொங்கும் அவள் கால்களில் இருந்த ஷூக்களை ஏதோ விலங்கு அவள் கால்களை அடையும் அவசரத்தில் குதறிக்கொண்டிருக்க, அவள் இடது கையைக் கவ்வியபடி அந்தக் காட்டுப்பூனை ஓடிவிட,
மரம் ஏறத் தெரிந்த அத்தனை மாமிச உண்ணிகளும் ஆளுக்கொரு பாகமாய் பங்கு பிரித்தன அவளை. துடித்து அனுப்ப இரத்தம் எதுவும் பாக்கி இல்லாமல் ஒரு வழியாய் அவள் இதயம் நின்று அவள் இறப்பதற்கு ஒரு யுகம் ஆனது".
கேட்டுக்கொண்டிருந்தவள் பாறையிலிருந்து சரிந்ததையோ, அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு ஓங்கரித்துக் குமட்டுவதையோ அவள் சில வினாடிகள் கழித்து தான் உணர்ந்தாள். அவள் அமர்ந்திருந்த கல்லில் இருந்து எழுந்து இவளிடம் வருவதற்குள் இவள் சுதாரித்து எழுந்தாள் அடித்தொண்டையில் கசக்கும் பித்தத்தை உணர்ந்தபடி. இதயம் துடிக்கும் வேகத்தில் நெற்றிப்பொட்டில் இரத்த நாளம் ஒன்று விண்விண்ணென்றுத் தெறித்தது இவளுக்கு. மலை உச்சியின் அந்தி சாயும் பொழுதிலும் வியர்வை வெள்ளமாய் வடிந்து உடல் சில்லிட்டது. மனதில் தோன்றிய ஏதோ உறுத்தல் ஒன்று வார்த்தைகளாய் உருப்பெற முடியாமல் இம்சித்தது இவளை இத்தனைக்கும் நடுவில்.
இவளை நோக்கி வருபவளை கைநீட்டி நிறுத்தினாள். அந்தக் கணத்தில் அகப்பட்டது சிக்காமல் நழுவிக்கொண்டிருந்த அந்த எண்ணம்.
"உனக்கு எப்படித் தெரியும் இவையெல்லாம்? என்ன, கதை சொல்கிறாயா?
யாரோ வந்தாளாம்,
விழுந்தாளாம், இந்தக் கோரங்கள் அத்தனையும் நடந்ததாம். நீ பக்கத்தில் இருந்து பார்த்தாயோ? உன் வயதென்ன, என் வயதென்ன? நீ சொல்லும் கதைகளை நம்ப நான் ஒன்றும் முட்டாளில்லை. யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? இப்படி ஒரு பொய்க் கதையை சொல்லி என்ன ஆகப்போகிறது உனக்கு? யார் நீ? என்ன வேண்டும் உனக்கு? எதற்காக இப்படிக் கட்டுக்கதைகள் சொல்லித் திரிகிறாய்?"
வார்த்தைகள் தெளிவாய் வந்தன. காதில் விழுந்த வார்த்தைகள் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீண்டு, பொய்யையும் புரட்டையும் கையும் களவுமாய்ப் பிடித்துவிட்ட தைரியத்தில் ஆணித்தரமாய் வந்தன கேள்விகள்.
"கட்டுக்கதை இல்லை", என்றாள் எதிரில் நிற்பவள். இவள் கேட்ட கேள்விகளும் முன்வைத்தக் குற்றச்சாட்டுகளும் அவளிடத்தில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. அமைதியுடனும் லேசானப் புன்னகையுடனும் பார்வையை சற்றும் அகற்றாமல் இவளையேப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
"என்னது? கட்டுக்கதை இல்லையா? ஹூம் … அவ்வளவும் நிஜமோ?"
ஆமென்றுத் தலையசைத்தாள்.
"சரி, நிஜமென்று வைத்துக்கொள்வோம். இவையெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? யாரோ ஒரு பெண் இங்கிருந்துக் குதித்தாளாம். அவளுக்கு இதெல்லாம் நடந்ததாம். அப்புறம் அவள் இறந்துபோனாளாம். இதையெல்லாம் உன்னிடம் சொல்லிவிட்டுச் செத்தாளோ? பொய் சொல்வதற்கும் ஒரு அளவில்லை? நீ சொல்வது அத்தனையும் நிஜமென்றால், இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? சொல், உனக்கு எப்படித் தெரியும்?"
லேசாக எட்டிப் பார்க்க ஆரம்பித்தக் கோபத்தில் இவள் குரல் சற்று உயர்ந்தது. காற்று முன் நிற்பவளிடம் இவள் வார்த்தைகளைக் கொண்டு சேர்த்து விட்டுக் கலைத்துப் போட்டுப் போனது.
"நான் எப்படி இறந்தேன் என்று எனக்குத் தெரியாதா?"
சிந்தாமல் சிதறாமல் பிசிறில்லாமல் பிசகாமல் மொத்தமாய் வந்தடைந்தன வார்த்தைகள் இவளிடம்.
வார்த்தைகள் இவள் காதில் விழுந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் சலனமற்று நின்றிருந்தவள் அப்படியே பின்னடையக் கால்களை பின்னால் எடுத்து வைத்தாள் முன்னிருக்கும் உருவத்தின் மீது வைத்தப் பார்வையை அகற்றாமலேயே. கல் தடுக்கித் தடுமாறி விழப்போனவளைப் பிடிக்கத் தன்னிச்சையாய்க் கைநீட்டி வந்த முன்னிருந்தவளைப் பார்த்ததும் சடாரென்றுத் திரும்பி தலைதெறிக்க ஓடினாள். வரும்போது சற்று ஏற்றமாய் இருந்த பாதை இப்போது கீழாய் சரிந்து உதவ, வேகமெடுத்த ஓட்டத்தில், திருப்பத்தில் திரும்பி, வந்த வழியே போய் மறைந்தாள்.
"வழக்கத்தை விட உன் கதை நன்றாக வேலை செய்திருக்கிறது போலத் தெரிகிறதே", என்றப் பரிச்சயமானக் குரலைக் கேட்டுப் புன்னகையுடன் திரும்பினாள் அந்த டீன் ஏஜ் பெண். அவளை விட இரண்டு வயது பெரியவளான அவளுடைய சகோதரி மறைவாய் நின்றிருந்த இடத்திலிருந்து வெளியே வந்தாள்.
"நீ கேட்கவில்லையா நான் சொன்னது எதையும்?"
"இல்லை. இப்போது தான் வந்தேன். எப்போதையும் விட இன்று சற்றுத் தாமதமானதால் அம்மா என்னைப் பார்த்துவரச் சொல்லி அனுப்பினார்கள்".
"இன்று என் கற்பனைக்கு இறக்கைகள் முளைத்துவிட்டன போல் இருந்தது. என் கதையைக் கேட்டு எனக்கே பயம் வந்துவிட்டது".
"அப்படியென்றால் இந்தக் கதையை நன்றாக நினைவில் வைத்துக்கொள். அடுத்த முறைகளுக்கு உதவும்", என்றவள் தன் தங்கையின் தோள்களைப் பிரியமுடன் பிடித்துக்கொண்டாள்.
"இன்று என் கதை மட்டும் அல்ல, என் நடிப்பும் கூடப் பிரமாதம். நீ பார்க்காமல் போனாயே", என்றவள், "பசிக்கிறது எனக்கு. அம்மா என்ன செய்து வைத்திருக்கிறார்கள்?" என்றாள்.
"இந்த மாதிரி சமயங்களில் அம்மா உனக்குப் பிடித்தது எதையாவது தான் செய்து வைத்திருப்பார்கள் என்று உனக்குத் தெரியாதா?" என்றபடி இருவரும் கைகளைக் கோர்த்துக்கொண்டு இருள் கவியத் தொடங்கிய மலை முகட்டில் பிறந்ததிலிருந்து நடந்து பழகிய மலையின் சரிவில் நடக்க ஆரம்பித்தார்கள்.
"சாவதற்கென்று நம் ஊரைத் தேடி இப்படி மனிதர்கள் வருவது எப்போது தான் நிற்குமோ?" என்றாள் இளையவள்.
"ஹூம் … தெரியவில்லையே. அப்படி அவர்கள் வருவதை நிறுத்தும்வரை வருபவர்களை உன் கற்பனையும் கதையும் காப்பாற்றட்டும், எனதருமைத் தங்கையே, உன் கற்பனையும் கதையும் அவர்களைக் காப்பாற்றட்டும்".
மெல்லிய குரல்களை காற்று இழுத்துக் கொள்ள, வாஞ்சையாய்க் கவிழ்ந்த பனிமூட்டத்தின் நடுவே நடந்து கரைந்தன இரு உருவங்களும்.
_________
.jpg)
கருத்துகள்
கருத்துரையிடுக