கண்ணாடியாகும் கண்கள் - நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் (முத்துக் குளிக்க வாரியளா?)
![]() |
காவ்யா வெளியீடு |
பொதுவாகக் கவிதைகளை வாசிக்க ஏனோ மனம் விரும்பியதில்லை - புருவங்கள் கூட நரைத்த அந்த வயோதிகக் கவிஞனின் புகைப்படத்தை ஒரு புத்தகத்தின் அட்டையில் பார்க்கும் வரை. ஏதோ ஒரு புத்தகக் கண்காட்சியில் காவ்யா பதிப்பகத்தின் ஸ்டாலைக் கடந்து செல்லும் போது கால்கள் இடற வைத்தன, புகைப்படம் கூட மங்கச் செய்யாத அந்தக் கண்களின் ஒளி.
"கண்ணாடியாகும் கண்கள்" புத்தகத்தைக் கையில் எடுத்த நொடியில் புரிந்தது எனக்கான கவிஞரும் கவிதையும் இதில் தான் என்று. முன் அட்டைப் பிரித்ததும் இதயம் ஒரு கணம் நின்று தொடர்ந்தது. பக்கம் முழுவதும் நிறைந்த கருப்பு-வெள்ளைப் புகைப்படத்தின் முகத்தில் அந்த ஐந்து வரி, ஏழு வார்த்தைக் கவிதை. பத்துப் பன்னிரண்டு வரிகளுக்கு மேல் எந்தக் கவிதையுமில்லை. ஆனால் ஒவ்வொரு கவிதைக்கும் மனம் அதிர்ந்து அடங்குகிறது - தனித்திருக்கும் பொழுது பின்னிருந்து 'பே...' என்றுக் கூச்சலிடும் குழந்தை நம்மைக் குலுங்கச் செய்வது போல். புகைப்படங்களேப் பக்கங்களாய், அச்சிட்டிருக்கும் கவிதை வரிகள் கவிஞனின் மனதில் இருந்துத் தெறித்து விழும் துணுக்குகளாய் - வழிந்தோடும் வார்த்தைகளாய் - எட்டிப் பார்க்கும் எண்ணங்களாய் - புத்தகத்தைக் கையில் ஏந்தியிருப்பவரிடத்து இவைகள் ஏற்படுத்தும் அதிர்வலைகள் மண்டையோட்டினுள் முன்னும் பின்னும் முட்டி மோதி மூச்சடைக்கச் செய்பவை. நகுலன் கூறுவது போல்,
கலையை வெறும் வெள்ளைக் காகிதத்தில் அச்சடித்தக் கருப்பு வார்தைகளாய்ப் பார்த்திருப்பின் இந்த இரசாயன மாற்றங்கள் உள்ளுக்குள் உருள வாய்ப்பில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியான உண்மை.
(இதை எழுதியது 2006 ல். எனில் அது 1996 ஆக இருந்திருக்க வேண்டும்). இது திரு. ஆர். ஆர். சீனிவாசனின் பதிவு நகுலனைப் பற்றி இந்தப் புத்தகத்தின் பின் உள் அட்டையில். அவர் குறிப்பிடும் அந்தப் "பிரக்ஞையில்லாமை" ஒவ்வொரு புகைப்படத்திலிருந்தும் புகைமூட்டமாய் சூழ்ந்துகொண்டு, சுற்றி இருக்கும் சூழல் மறக்கச் செய்து அதன் ஊடாகவே நம்மையும் நகுலனின் உலகிற்குள் கொண்டுசேர்த்துவிடுகிறது. இந்தப் பயணத்தின் முழு காரணகர்த்தா என காவ்யா பதிப்பகத்தின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்வாக இதை வெளியிட்ட திரு. காவ்யா சண்முகசுந்தரம், "திரு. ஆர். ஆர். சீனிவாசனுக்கும், இந்நூலை வாங்கி உதவும் உங்களுக்கும் எங்கள் நன்றி", என்று கூறியிருக்கிறார். இந்தக் கவிதைகளை இப்படி ஒரு வாசிப்பு அனுபவமாக ஆக்கிக்கொடுத்த அவருக்கல்லவா கோடி நன்றிகள் செல்ல வேண்டும்...! கண்ணாடியாகும் கண்கள்நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்கவிதைத் தேர்வு, புகைப்படங்கள் : ஆர். ஆர். சீனிவாசன் முதல் பதிப்பு : டிசம்பர் 2006 வெளியீடு : காவ்யா, சென்னை. |
கருத்துகள்
கருத்துரையிடுக