'போகுமிடம் வெகு தூரமில்லை' - திரை விமர்சனம்


 

திரையரங்கிற்குச் சென்றுத் திரைப்படம் பார்த்து வெகுநாட்களாகிவிட்ட நிலையில் நேற்று 'போகுமிடம் வெகு தூரமில்லை' திரைப்படத்தை அது ஏதேனும் ஒரு OTT தளத்தில் வெளியாகும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று விடாமல் திரையரங்கிற்குச் சென்று பார்க்கத் தூண்டியது எதுவென்று யோசித்துப் பார்த்ததில் விடை ஏதும் கிடைக்கவில்லை. ஒருவேளை தற்செயலாய் பார்க்க நேர்ந்த நடிகர் கருணாஸின் பேட்டியாக இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. காமெடியனாகவும் அதன்பின் அரசியல்வாதியாகவும் அவரைப் பற்றி அறிந்ததுதான். அவரை முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கும் கதை என்னவாக இருக்கும் என்ற ஒரு curiosity 'போகுமிடம் வெகு தூரமில்லை' ட்ரெய்லரைப் பார்க்கத் தூண்டியது. அது கொண்டு நிறுத்திய இடம் திரையரங்கம்.

இதற்குள் ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துவிட்டிருக்கும் 'போகுமிடம் வெகு தூரமில்லை' திரைப்படத்திற்கு. அதில் அதன் கதையும் தொட்டுக்காட்டப்பட்டிருக்கும். அமரர் ஊர்தி ஓட்டுநர் குமார் (விமல்) தன் மனைவியை பிரசவத்திற்காக தன் செலவுத் தகுதிக்கு மீறிய மருத்துவமனையில் தன் தாத்தாவின் பொறுப்பில் (இருவருக்கும் வேறு யாரும் இல்லாததால்) விட்டுவிட்டு சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ஒரு பிரேதத்தை, அவ்வப்போது நின்றுவிட்டு தள்ளிவிட்டு ஓடும், தன் அமரர் ஊர்தி வேனில் கொண்டு செல்கிறான். லாரி மோதி உயிரிழக்க இருக்கும் ஒரு குழந்தையைக் காப்பாற்றப் போய் முகம் நசுங்கி இறக்கும் அந்தப் பெரியவருக்கு ஊரில் இரண்டு குடும்பங்கள். இரண்டு குடும்பங்களும் உடல் அவரவர் வீட்டுக்கு வரவேண்டும் என்றும் இரண்டு குடும்பத்து ஆண் பிள்ளைகளும் தான் தான் கொள்ளி வைக்க வேண்டும் என்றும் போட்டி போட்டுக்கொண்டு ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். அமரர் ஊர்தி செல்லும் வழியில் lift கேட்டு ஏறிக்கொள்கிறார் கூத்துக் கலைஞரான நளின மூர்த்தி (கருணாஸ்). பிரேதம் ஊர் போய் சேர்வது தான் மீதிக் கதை. 

நெடுஞ்சாலை இரவுப் பயணமும் காத்திருக்கும் இழவு வீடுகளில் நடக்கும் 'இங்கயா? அங்கயா?' விவாதங்களும் பிரச்னைகளும் நடக்கவிருக்கும் சம்பவங்களுக்குக் கட்டியம் கூறுவது போல் சற்று மெல்லிய சுருதியிலேயே ஆரம்பிக்கின்றன. நள்ளிரவில் நேரும் சில சம்பவங்களை அப்போதைக்கு எதிர்கொள்ளும் ஒரு சிறிய வேகத்தடையைப் போல் அமரர் ஊர்தி கடந்து சென்றாலும் விடிந்ததும் அவை விஸ்வரூபமெடுத்து பாதையை வேற்று வழி (literally!) திருப்பிவிடுகின்றன. இங்கே வேகமெடுக்கும் கதையை தொய்ந்துவிடாமல் இறுதிவரைக் கொண்டு சென்று க்ளைமாக்சில் பார்வையாளர்களை கண்கலங்க வைத்து தான் வெளியே அனுப்புகிறார் இயக்குநர் மைக்கேல். காதல், சண்டைஎன்று  யதார்த்தத்தை மீறாமல் heroism-திற்கும் இடம் கொடுக்காமல் அவற்றையும் அளவோடு தொட்டுச் சென்று, பிராதான சாலையில் (கதையிலும்) இருந்து ஒரு diversion எடுத்தாலும் மீண்டும் நெடுஞ்சாலைக்குக் கொண்டு வந்துவிடுகிறார் இயக்குநர்.    

இரண்டு வீடுகளில் நடக்கும் உரிமைப் போராட்டங்கள் சிந்தி சிதறி சுற்றத்தார் மீதும் ஊரார் மீதும் தெறித்து சூட்டைக் கிளப்பும் இடங்களில் எந்தக் கமர்ஷியல் பொறிக்குள்ளும் சிக்காமல் பக்குவமாய் கதாபாத்திரங்களையும் கதையையும் கையாண்டிருக்கிறார் மைக்கேல். ஒரு கிராமத்து இழவு வீட்டின் ஏற்பாடுகளை அப்பட்டமாய்க் கண் முன் நிறுத்தியதில் இயக்குநருக்கு மட்டுமல்லாது அதற்குப் பங்களித்தவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் கண்டிப்பாய் சொல்ல வேண்டும். 

இப்படித்தான் நடக்கக்கூடும் என்று கதையின் திருப்பத்தை யூகித்திருந்தாலும், திரையில் கதையின் ஓட்டத்தில் அது நடக்கும் போது ஒரு கணம் மூச்சடைத்துத்தான் போகிறது.  To still shock when you are expecting to be shocked is the mark of a craftsman who has absolute and total control over his subject! Well done, Michael!

ஆனாலும் அடிநாதமான ஒன்றிலிருந்து இயக்குநரின் பிடி நழுவியிருப்பது முதல் பிரேமிலிருந்து தெரிந்துவிடுகிறது - விமலின் நடிப்பு. அமரர் ஊர்தி ஓட்டும் இளைஞன், housing board அடுக்குமாடி வீடு போல் ஒன்றில் குடியிருப்பவன், தாத்தாவின் வளர்ப்பில் வளர்ந்தவனின் பாவனைகளும் உடல்மொழியும் இன்னும் raw-வாக இருந்திருந்தால் பொருந்தியிருக்கும் என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.  

எல்லாப் பக்கமும் பிரச்னைகள் சூழ்ந்து, திரும்பிய திசைகள் அனைத்தும் கதவுகள் அடித்து மூடப்பட, வாழ்வைத் தொலைத்து நிற்கும் இளைஞனின் despair and desperation அவர் கண்களிலிருந்தும் உடலிலிருந்தும் வழிந்தோடி நம்மை வந்தடையாமல் இருப்பது குமாரிடமிருந்து கொஞ்சம் எட்டியே நிற்க வைக்கிறது நம்மை. ஒருவேளை கருணாஸின் 'நளின மூர்த்தி'க்கு contrast-ஆக இருக்க வேண்டும் என்பதற்காக குமாரின் portrayal-ஐ கொஞ்சம் restrained-ஆக பாந்தமான பாணியில் அமைத்துக் கொண்டாரோ என்றும் யோசிக்கத் தோன்றுகிறது. 

கருணாஸ் - 'நளின மூர்த்தி'. "உசிரக் குடுத்து நடிச்சாலும் ஒரு பய பாக்க மாட்றானுவ", என்று புலம்பும் அந்த 'உலக மகா கலைஞன்'ஐ பெருந்திரையில் பார்ப்பது தான் அவனுக்குச் செய்யும் மரியாதையாக இருக்க முடியும். 

இயக்குநர் மைக்கேலின் அடுத்த படைப்பை நினைத்தால் தான் சற்று கவலையாக இருக்கிறது. இந்த முதல் முயற்சியில் இருக்கும் தெளிவும் துணிவும் அடுத்தடுத்த படைப்புகளில் தொடருமா அல்லது இவருக்கு முன் முதல் படைப்பில் சிகரம் தொட்டு அடுத்தடுத்த படைப்புகளில் சறுக்கிய பிற இளம் இயக்குநர்களைப் போல் இவரும் collection எனும் கைவிலங்கு கைகளில் பூட்டப்பட்டு boxoffice-ன் கைதியாகி நிற்பாராவென்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.   

எது எப்படியாகிலும் இயக்குநர் திரு. மைக்கேல் K. ராஜா அவர்களே, தமிழ் திரையுலகிற்கு தங்கள் வரவு நல்வரவாகுக! தங்களின் அடுத்த முயற்சிகளுக்கு தமிழ் திரை ரசிகர்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்!  

Looking forward to your next offering!




    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி (குறுநாவல்)

வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி (குறுநாவல்)