வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி (குறுநாவல்)

இரண்டு சித்திரை மாதம் , 1948 நேந்திரம்பட்டி . கிராமத்துக்கும் குக்கிராமத்துக்கும் இடையிலான ஒரு பட்டி . வெளியுலகத் தேவையோ தொடர்போ தேடாத ஊர் . இந்தியா சுதந்திரம் பெற்றதையே கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து சேதி தெரிந்து , " நம்ம நாட்டுக்கு சொதந்திரம் கெடச்சிடுச்சாம்லய்யா ? ரொம்ப சந்தோசம் , சாமி " , என்று பேசிவிட்டு வயக்காட்டுக்குச் சென்ற மக்கள் வாழும் இடம் . வருடம் ஒரு முறை ( சில சமயம் அதுவும் இல்லாமல் ) அங்கே வரும் தெருக்கூத்துக்காரர்களும் , அவ்வப்போது நடக்கும் திருமணங்களும் , விழும் சாவுகளும் மட்டுமே நேந்திரம்பட்டியின் விசேஷங்கள் . அப்படிப்பட்ட ஊர் ஒன்றில் புதிதாய் ஒரு ஜட்கா வண்டி , அதுவும் மூட்டை முடிச்சுகளோடு வந்து நின்றால் அது எப்பேர்ப்பட்ட நிகழ்வாக இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் . பார்த்தாயிற்றா ? அந்தக் கற்பனையோடு இந்தக் காட்சியையும் இணைத்துக் கொள்ளுங்கள் . ஜல் ஜல் என்று ஊருக்குள் நுழைந்த ஜட்கா வண்டி ( வழக்கமாக மாட்டு வண்டியில் தான் சலங்கை கட்டியிருக்கும் . ஆனால...