வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி (குறுநாவல்)

 

இரண்டு



சித்திரை மாதம், 1948

நேந்திரம்பட்டி. 

கிராமத்துக்கும் குக்கிராமத்துக்கும் இடையிலான ஒரு பட்டி. வெளியுலகத் தேவையோ தொடர்போ தேடாத ஊர். இந்தியா சுதந்திரம் பெற்றதையே கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து சேதி தெரிந்து, "நம்ம நாட்டுக்கு சொதந்திரம் கெடச்சிடுச்சாம்லய்யா? ரொம்ப சந்தோசம், சாமி", என்று பேசிவிட்டு வயக்காட்டுக்குச் சென்ற மக்கள் வாழும் இடம். வருடம் ஒரு முறை (சில சமயம் அதுவும் இல்லாமல்) அங்கே வரும் தெருக்கூத்துக்காரர்களும், அவ்வப்போது நடக்கும் திருமணங்களும், விழும் சாவுகளும் மட்டுமே நேந்திரம்பட்டியின் விசேஷங்கள். அப்படிப்பட்ட ஊர் ஒன்றில் புதிதாய் ஒரு ஜட்கா வண்டி, அதுவும் மூட்டை முடிச்சுகளோடு வந்து நின்றால் அது எப்பேர்ப்பட்ட நிகழ்வாக இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

பார்த்தாயிற்றா?

அந்தக் கற்பனையோடு இந்தக் காட்சியையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

ஜல் ஜல் என்று ஊருக்குள் நுழைந்த ஜட்கா வண்டி (வழக்கமாக மாட்டு வண்டியில் தான் சலங்கை கட்டியிருக்கும். ஆனால் இந்தக் குதிரை வண்டி ஜட்காவில் கொத்து கொத்தாய் சலங்கை கட்டியிருந்தது) நேரே நேந்திரம்பட்டியின் ஒரே ஓட்டு வீட்டின் முன் போய் நின்றது. வருடக்கணக்காகப் பூட்டிக் கிடைக்கும் வீடு அது. அந்த வீட்டு 'பெருந்தனக்காரர்' ( 'பெருந்தனக்காரர்என்றதும் ஏதோ ஜமீன் வகையறா என்று நீங்கள் நினைத்துக் கொள்ளக்கூடாது. கூரைக் குடிசைகளுக்கு மத்தியில் இருக்கும் ஒரே ஓட்டு வீட்டுக்குச் சொந்தக்காரர் என்பதால் அப்படியாப்பட்ட பெயர்) 'வெள்ளக்கார தொர' (கலெக்டர்) ஒருவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் (வரி கணக்கீட்டுத் தகராறு) அந்த வீட்டை அந்தத் தொரையிடம் ஜப்தி கொடுக்க வேண்டியதாகிவிட்டது. காலையில் 'தொர' வந்து நிற்பதற்கு முன் இரவோடு இரவாக சுமக்க முடிந்ததை மட்டும் சுமந்து கொண்டு குடும்பத்தோடு நேந்திரம்பட்டியை விட்டுச் சென்ற அந்தப் பெருந்தனக்காரரோ அவரது குடும்பத்தினரோ அதன் பின் வரவும் இல்லை; அவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவலும் இல்லை.   

 காலையில் டவாலி சகிதம் வந்து நின்ற 'வெள்ளக்கார தொர' வீடு காலியாக இருப்பதைப் பார்த்து ஒரு கணம் திகைத்தாலும் சுதாரித்துக்கொண்டு டவாலியை விட்டுக் கதவிலேயே இருந்த சாவியைக் கொண்டு வீட்டைப் பூட்டச் சொல்லி சாவியை வாங்கிக் கொண்டார். பூட்டிய கதவில் ஓர் அச்சடித்த பேப்பரையும் ஒட்டச் சொன்னார். அதை ஓட்டுவதற்கு முன் அதிலிருந்த விவரங்களைக் கூடி நின்ற ஊர் மக்களிடம் உரக்கப் படிக்கச் சொன்னார். அதன்படி அந்த வீடு, வரி பாக்கிக்காக ஜப்தி செய்யப்படுவதாகவும், அது இனி ஆங்கிலேய அரசுக்குச் சொந்தம் என்றும், பூட்டிய கதவை ஊர்மக்களோ வீட்டின் உரிமையாளரோ அவரின் வாரிசுகளோ அல்லது வேறு யாருமோ திறக்கக்கூடாது என்றும், மீறினால் அரசாங்க ஆணையை மீறிய குற்றத்திற்கு தண்டனை வழங்கப்படும் என்றும் சத்தமாக வாசித்தார் டவாலி

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன் ஒட்டப்பட்ட அந்த ஆணை அந்தக் கதவிலிருந்து பிய்ந்து போய் எத்தனையோ ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திரம் கிடைத்து, ஆங்கிலேய அரசு என்ற ஒன்று இனிமேல் இல்லை என்று ஆனபின்னும் அன்று டவாலி வாசித்த வாசகங்கள் நேந்திரம்பட்டி மக்களின் மனதில் ஒட்டி விட்ட படியால் இன்னமும் கூட பூட்டியே கிடந்தது வீடு. இப்படி ஒரு கதையைக் கொண்ட அந்த வீட்டின் முன் ஜட்கா வண்டி வந்து நின்றதும் மறுபடியும் அந்த ஓட்டு வீட்டின் முன் கூடியது நேந்திரம்பட்டி.

வண்டிக்காரர் அருகில் அமர்ந்திருந்த ஒருவர் படக்கென்று குதித்து வண்டியின் பின்னால் சென்று கொக்கியில் மாட்டியிருந்த கம்பியைத் தூக்கிவிட்டு உள்ளே இருந்தவர் இறங்க ஒரு கையை நீட்டினார். வந்திருப்பது யாரென்று முதலில் முகம் பார்க்கும் ஆவலில் முண்டியடித்து முன்னுக்கு வந்தது கூட்டம். நீட்டிய கையைப் பிடித்துக் கொண்டு வண்டியின் படியில் கால் வைத்து இறங்கிய அந்த உருவத்தைப் பார்த்ததும் கூட்டத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. சராசரிக்கும் சற்றுக் குறைவான உயரம். மாநிறத்துக்கு நிறையவே மட்டுப்பட்ட நிறம். வெள்ளைப் பஞ்சக்கச்ச வேஷ்டி. தொடை வரை நீண்ட முழுக்கை சட்டை. தோளில் அங்கவஸ்திரம். தலையில் வெள்ளைத் தலைப்பாகை. அதன் அடியில் சீராக வெட்டப்பட்ட நரைத்த முடி. மழமழவென்று சவரம் செய்த முகம். கால்களில் வார் வைத்தத் தோல் செருப்பு. ஆகிருதி இல்லாத ஒடிசலான உடல். கறுப்புக் கயிற்றில் கோர்க்கப்பட்ட வட்ட பிரேம் கண்ணாடி (அந்தக் காலத்து முட்டைக் கண்ணாடி தான் இந்தக் காலத்து ஹாரி பாட்டர் ஸ்டைல்). மிகச் சாதாரண தோற்றம் கொண்ட அந்த மனிதரின் கண்களில் மட்டும் ஒரு கூர்மை அவ்வப்போது எட்டிப்பார்த்துச் சென்றது. அறுபதுக்கும் எழுபதுக்கும் இடைப்பட்ட ஏதோ ஒரு வயதில் இருந்த அந்த மனிதர் அந்த வயதின் சுவடு கொஞ்சமும் இல்லாமல் வண்டியிலிருந்து மிடுக்காக இறங்கினார்.

இறங்கியவர் கூடி நின்ற கூட்டத்தை நிறுத்தி நிதானமாகப் பார்த்தார், ஒவ்வொரு முகத்தையும் நினைவில் நிலை கொள்ளச் செய்வதை போல். சுற்றிலும் பார்த்தவர் பின் ஓட்டு வீட்டைப் பார்த்தார். மெல்லிய ஒரு பெருமூச்சுடன் சட்டைப் பாக்கெட்டில் இருந்து ஒரு சாவியை எடுத்தார். கூட்டம் கலவையான உணர்வுகளில் சலசலத்தது. அதைக் கொஞ்சமும் கவனத்தில் கொள்ளாமல் அவர் வீட்டின் கதவைத் திறந்தார். வருடக்கணக்காக உபயோக்கிப்படாமல் இருந்த பூட்டு ரொம்பவே முரண்டு பண்ணியது. டக்கென்று உடன் வந்திருந்த உதவியாளர் முன்னாடி சென்று சாவியை கொஞ்சம் பலமாக இப்படியும் அப்படியுமாக அசைத்து ஆட்டித் திருப்பி கதவைத் திறந்து கொடுத்தார். அங்கவஸ்திரத்தின் ஒரு பகுதியால் மூக்கை மூடிக் கொண்டு வலது கால் எடுத்து வைத்து உள்ளே சென்றார் வந்தவர்.

சாமான்களை இறக்க வண்டிக்கு அருகில் வந்த உதவியாளரை சுற்றிக் கொண்டது கூட்டம்.

"ஏன் சாமி? யாரு அவரு?"

"பெரிய மனுசனாட்டம் இருக்காரு!"

"இங்கேயா இருக்கப் போறாரு?"

"இந்த வீடு இப்ப அவருதா?"

- என்று நாலாப்பக்கம் இருந்தும் கேள்விகள் வந்து விழுந்தன.

"வந்திருக்கறது காருடு ஐயா. பட்டணத்துல வெள்ளக்கார கலெக்டரு தொரக் கிட்ட ரொம்ப வருஷமா வேலை பார்த்தவரு. அவருக்கு எல்லாமே காருடு ஐயா தான். ஐயா கிட்ட யோசனை கேக்காம தொர எந்த வேலையும் செய்யமாட்டாரு. இப்பதான் தொரங்க எல்லாம் இங்கேருந்து அவங்க நாட்டுக்குப் போய்ட்டாங்கல்ல. கலெக்டரு தொரையும் இப்ப அவங்க நாட்டுக்குப் போறாரு. அவருகிட்ட இத்தனை வருசம் வேலை செஞ்சதுக்காக அவங்க அரசாங்கத்துக்குச் சொந்தமான இந்த வீட்டை காருடு ஐயாவுக்கு சன்மானமா குடுத்திருக்காரு", என்று உதவியாளர் விவரம் சொல்லி முடிக்கவும் காருடு ஐயா வெளியே வரவும் சரியாக இருந்தது

உதவியாளர் சட்டென்று அவரிடம் ஓடினார். காருடு அவரிடம் ஏதோ சொல்ல அவர் தலையாட்டிவிட்டு கூடியிருந்தவர்களிடம் வந்தார்.

"வீட்டை சுத்தம் பண்ண ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு காருடு ஐயா கேக்குறாரு", என்றார்.

"அது ஒண்ணும் பெரிய சோலியே இல்ல. காருடு ஐயாவ சித்த அங்கிட்டு திண்ணைல ஒக்காரச் சொல்லுங்க. நிமிசத்துல முடிச்சிரலாம்", என்று ஊர்ப் பெரியவர் சொல்லி வாய் மூடும் முன் கூட்டம் அனிச்சையாக ஒவ்வொரு வேலைக்காகப் பிரிந்தது. சிலர் திறக்கப்பட்ட வீட்டுக்குள் நுழைந்து உள்ளே கிடந்த பழைய தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியே ஒரு பக்கமாக ஒதுக்கினர். பெண்கள் சிலர் பிள்ளைகளை ஏவி அவரவர் வீட்டிலிருந்து துடைப்பங்களையும் குச்சிமாறுகளையும் எடுத்துவர சொன்னார்கள். பரபரவென்று சுத்தம் செய்யும் வேலை மும்முரமானது.

"வாங்கய்யா, இங்கிட்டு வந்து இப்பிடி உக்காருங்க", என்று அவரை இருப்பதிலேயே பெரிய திண்ணையாகப் பார்த்து ஊர்ப் பெரியவர் அழைத்துச் செல்லப் பார்க்க, காருடு லேசாய்த் தலையை ஆட்டி, "ஊரை சுத்திப் பார்க்கணும்", என்று சொன்னார்.

"ஊரு என்னங்கய்யா ஊரு? இந்தா, இவ்வளவு தான், நாலு தெரு", என்றபடி ஊர்ப் பெரியவர் அவரை அழைத்துச் சென்றார். உடன் சிலர் செல்ல, ஒரு சிறுவர் பட்டாளமும் ஓட்டமும் நடையுமாக முன்னும் பின்னுமாகச் சென்றது.

'நாலு தெரு' என்று சரியாகத் தான் சொல்லியிருந்தார் பெரியவர். தெருவின் கோடியிலேயே வயக்காடு ஆரம்பித்தது. வீடு வீடிற்குத் திண்ணையும் பின்கட்டில் மரமுமாக அந்தச் சித்திரை மாதத்திலும் பசேலென்று இருந்தது நேந்திரம்பட்டி.

ஊரைப் பார்த்து முடித்துத் திண்ணையில் வந்து அமர்ந்தார் காருடு ஐயா. "பள்ளிக்கூடம் இல்லையா?" என்று கேட்டார் பொத்தாம் பொதுவாக, நீட்டிய மோர் லோட்டாவை வாங்கிக் கொண்டே.

"அதெல்லாம் இல்லீங்க. அப்பிடியே இருந்தாலும் வாத்தியாரு வேணும்மில்ல?" என்றது ஒரு குரல்.

'ம்', என்று தலையாட்டிக்கொண்டார் காருடு ஐயா.

மோரைக் குடித்து முடித்து சற்று நேரம் ஊரைப் பற்றியும் அதன் மக்களைப் பற்றியும் விவரம் கேட்டுக் கொண்டிருந்த காருடு ஐயாவிடம் உதவியாளர் வந்து, "ஐயா, வரலாமுங்க", என்று கூற, காருடு ஐயா எழுந்து அவரின் வீட்டிற்குச் சென்றார். கொஞ்ச நேரத்திற்கு முன் பார்த்த வீடா என்று நினைக்கும் படி வீடு பளிச்சென்று சுத்தம் செய்யப்பட்டு வாசலில் நீர் தெளித்துக் கோலமிட்டு, வண்டியில் வந்த சாமான்கள் எல்லாம் உள்ளே வைக்கப்பட்டு காருடுவின் வருகைக்காகக் காத்திருந்தது. அதுவரை ஓடியாடி வீட்டை சுத்தம் செய்தவர்கள் துண்டிலும் முந்தானையிலுமாக முகங்களைத் துடைத்துக்கொண்டு வெளியே பவ்யமாய் நின்றார்கள்.

வீட்டினுள் நுழைந்த காருடு சில நிமிடங்களில் வெளியே வந்தார். உதவியாளரிடம் சில நிமிடங்கள் பேச, அவர் பவ்யமாய் தலையாட்டிவிட்டு ஜட்கா வண்டியில் வந்த வழியே கிளம்பினார். அவர்கள் சற்று தூரம் போகும் வரைப் பார்த்துக்கொண்டு நின்ற காருடு ஐயா, கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்துப் பேசினார்.

"எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இனிமே கடைசி வரைக்கும் இங்க தான் இருக்கப் போறேன். இது தான் என் வீடு, இது தான் என் ஊரு", என்றபடி இரு கை கூப்பினார் கூடியிருந்தவர்களைப் பார்த்து.

சிலிர்த்துப் போனது நேந்திரம்பட்டி. இப்படிப்பட்ட ஒரு மனிதர் அந்த ஊரில் குடியிருக்க வந்தது அவர்கள் பாக்கியம் என்று ஆளாளுக்குப் பேசிக்கொண்டு, பாதியில் விட்டுவந்த வேலைகளைத் தொடரச் சென்றார்கள்.

இப்படியாக நேந்திரம்பட்டியின் குடிமகன் ஆனார் காருடு ஐயா.

தொடரும்…


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'போகுமிடம் வெகு தூரமில்லை' - திரை விமர்சனம்

வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி (குறுநாவல்)