ஆடலரசன் GENE KELLY

 அலுத்து சலித்த ஒரு நாளின் முடிவில், அனைத்து வேலைகளையும் முடித்த நேரத்தில், சிறு எரிச்சலும் பெரும் ஆயாசமும் உடலையும் மனதையும் அழுத்தும் வேளையில், கியாரண்டியாக நம்மைப் புன்னகைக்க வைக்க ஒருவர் இருக்கிறார் – GENE KELLY.

1940களும் 1950களும் ஹாலிவுட்டில் 'ம்யூஸிக்கல்' எனும் வகைத் திரைப்படங்கள் கொடி கட்டிப் பறந்த காலம். இந்தக் காலத்தில் அந்த வகைத் திரைப்படங்களின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் GENE KELLY என்று அறியப்பட்ட EUGENE CURRAN KELLY.

Tap dance-ஐயும் Classic Ballet-வையும் இணைத்து இவர் உருவாக்கிய நடன அமைப்புகளும் (choreography), ஆடிய நடனங்களும் அவருடைய திரைப்படங்களை வெற்றி பெறச் செய்ததது மட்டுமல்லாமல், ஆண் நடனக் கலைஞர்களின் மீது மக்கள் கொண்டிருந்த பார்வையையும் மாற்றியது.

‘நடனம் என்பது பொதுவாக ball room-களிலும் கோட்டு சூட்டுகளிலும் சீமான்களாலும் சீமாட்டிகளாலும் ஆடப்படுவது’ என்ற எண்ணம் பரவலாக அந்தக் காலகட்டத்தில் இருந்திருக்கலாமோ என்ற யூகத்தை, GENE KELLY-ன் நடனங்கள் உடைத்தெறிய முக்கிய காரணியாக இருந்திருக்கலாம் என்பது அவருடைய நடனங்களைப் பார்த்தால் புரியலாம்.

ஒரு சாமான்யனின் உடையில், அன்றாட வாழ்க்கை சூழலில், நாள்தோறும் நடந்து செல்லும், கடந்து செல்லும், வாழ்ந்து செல்லும் physical settings- சிலேயே அவரது நடனங்கள் அமைந்திருந்தது, பார்வையாளர்களால் அவரின் நடனங்களும், அவரும் அங்கீகரிக்கப்படுவதற்கு மிக முக்கிய காரணங்களாயின.

“All of my dancing came out of the idea of the common man”,
என்று Gene Kelly அவருடைய நடனங்களைப் பற்றி விளக்கியிருக்கிறார்.

1951-ன் Honorary Academy Award(Oscar) அவருடைய பன்முகத்தன்மைக்கும், குறிப்பாய், “for his brilliant achievements in the art of choreography on film”, ஆகியவற்றுக்கும் வழங்கப்பட்டது.

குழுவாகவும், மற்றவர்களுடனும், நாயகிகளுடனும் அவர் வடிவமைத்த, ஆடிய நடனங்கள் ஏராளம் எனினும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இந்த நடனங்கள் ஒரு விசேஷக் காரணமாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.

நடனக் கலைஞர்கள், இருப்பதிலேயே மிகக் கடினமான நடனம் ஒரு partner-உடன் ஆடுவது அல்ல, ஒரு prop-உடன் ஆடுவது என்றுக் கூறக் கேள்வி. அப்படி ஒரு prop-உடன் மட்டுமல்லாது, அருகில் இல்லாத partner-உடனும் Gene Kelly ஆடியிருக்கும் நடனங்கள் இவை.

5. SUMMER STOCK (1950)


இரு சகோதரிகளையும் ஒரு நடன-நாடகக் குழுவையும் மையமாகக் கொண்ட கதை.

காலிக் கொட்டகை ஒன்றில் தனித்திருக்கும் Gene Kelly அங்குமிங்கும் விசிலடித்துக்கொண்டே நடக்கும் போது காலில் மிதிபட்டு முனகுகிறது தரையில் சரியாகப் பொருத்தப்படாத மரப்பலகை ஒன்று. அந்த கிரீச் சத்தத்தையே நடனத்தின் இசைக்குறிப்பாக எடுத்துக் கொண்டு நடனமாட ஆரம்பிக்கும் Gene Kelly விரைவில் அருகில் கிடைக்கும் செய்தித்தாளைத் துணைக்கு இழுத்துக் கொண்டு ஆடும் அந்த உற்சாக ஆட்டம், நம் உள்ளிருக்கும் சிறுபிள்ளை சேட்டை ஆசையைத் தூண்டி புன்னகைக்க வைக்கும்.



 4. COVER GIRL (1944)


குரூப் டான்சர்களில் ஒருத்தியாக இருக்கும் ஒரு இளம்பெண் ஒரு போட்டியில் கலந்து கொண்டு அட்டைப்பட மாடலாகிவிட, அதனால் அவளுடைய காதலனுடன் ஏற்படும் விரிசல் தான் கதை.

தமிழ்ப் படங்களில் நாம் பார்த்து சலித்த 'கண்ணாடியில் மனசாட்சி' காட்சி தான். ஆனால் தன் மனசாட்சியுடன் Gene Kelly, graphics துணையின்றி ஆடும் அந்த  நடனம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.


3. ANCHORS WEIGH (1945)


விடுமுறையில் இருக்கும் இரண்டு கடற்படை வீரர்களைப் பற்றிய கதை.

இதில் ஒரு நடனத்தில் Gene Kellyன் நடனப் பார்ட்னர் யார் தெரியுமா – Jerry! Jerry யார் என்று அதிகம் யோசிக்கத் தேவையில்லை - சிறுவயதில் (இப்போதும் கூட) நாம் எல்லோரும் பார்த்து ரசித்த, ரசிக்கும் Tom & Jerry கார்ட்டூனின் Jerry எலி தான்.

கம்ப்யூட்டர்கள் கனவில் கூடத் தோன்றாத காலத்தில் இந்த நடனத்தை எப்படி இயக்கி படமாக்கியிருப்பார்கள் என்று ஒரு நிகழ்ச்சியில் பார்த்த பின்னரும் இன்றும் பிரமிப்பு நீங்கவில்லை.


2. IT'S ALWAYS FAIR WEATHER (1945)


முன் சொல்லப்பட்டிருக்கும் இரண்டு நடனக் காட்சிகளையும் இயக்கிய Stanley Donen-உடன் Gene Kelly-யும் இணைந்து இயக்கிய படம்.

கால்களில் ஷூக்கள், பூட்ஸுகள், பெண்கள் என்றால் ஹை ஹீல்ஸ், அபூர்வமாய் வெறுங்காலுடன் என்று ஆடப்படும் மேற்கத்திய நடனங்களைப் பார்த்துப் பழகிய கண்களுக்கு roller skates (yes! roller skates!) மாட்டிக்கொண்டு Gene Kelly ஆடும் tap dance பற்றிக் கூற ஒன்றே ஒன்றைத் தவிர வேறு எதுவும் இல்லை - அந்த நடனத்தில் கால்களில் அவர் மாட்டியிருக்கும் roller skates அவர் வீட்டின் அருகிலிருக்கும் ஒரு கடையில் வாங்கப்பட்டு, அவர் நடனத்திற்காக எந்த விதமான alterations-ம் அதில் செய்யப்படவில்லை - என்பதைத் தவிர. ரோட்டிலும் பிளாட்பாரத்திலும் மாறி மாறி skate செய்து, கூட்டமாய் இருக்கும் மனிதர்களுக்கு நடுவில் யார் மீதும் ஒரு சிறிய உரசல் கூட இல்லாமல் அவர் ஆடியிருக்கும் நடனத்திற்கு, அந்த நடனத்தின் பார்வையாளர்கள் போல் நம்மாலும் கைத்தட்டாமல் இருக்க முடிவதில்லை.


1. SINGIN' IN THE RAIN (1952)

மழையில் ஒரு குடையுடன் Gene Kelly ஆடும் நடனத்தைப் பற்றி வார்த்தையில் விவரிப்பது மன்னிக்கமுடியாத மாபாதகமென்பதால் இது இத்துடன் இங்கு முடிக்கப்படுகிறது.



Aren't you smiling? 








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி (குறுநாவல்)

வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி (குறுநாவல்)

'போகுமிடம் வெகு தூரமில்லை' - திரை விமர்சனம்