வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி

நான்கு அன்று வழக்கத்தை விட சீக்கிரமே முழிப்பு வந்துவிட்டது தம்புடுக்கு . அவன் அம்மா கூட இன்னும் எழுந்திருக்கவில்லை . சத்தம் காட்டாமல் வெளியே வந்து காலை வேலைகளை முடித்து பல் தேய்த்து முகம் கழுவி காருடு வீட்டின் முன் போய் நின்றான் . இன்னும் இருட்டாகவே இருந்தது . சேவல் கூவுவதற்கும் காருடு ஐயா விழிப்பதற்கும் சரியாக இருக்கும் . கிழக்கு வானத்தைப் பார்த்தான் தம்புடு . ' இந்தா , இப்பத்தேன் , வெளுத்துடுவேன் ', என்பதாக இருந்தது அது . தம்புடு தான் வழக்கமாக அமரும் இடத்தில் போய்க் குத்துக்காலிட்டு உட்கார்ந்தான் . இதற்காகவே ஒரு சப்பட்டைக் கல்லை இழுத்துக் கொண்டு வந்து போட்டிருந்தான் . தெருவென்று இருந்தால் எதிர் எதிரே வீடுகள் இருக்கும் ஊருக்குள் . நேந்திரம்பட்டியின் மற்ற வீடுகளெல்லாம் அப்படித்தான் . ஆனால் அந்த ஓட்டு வீடு மட்டும் கொஞ்சம் ஒதுங்கி இருந்தது . முன்னால் முற்றம் போல் திறந்த வெளி கொஞ்சமும் , அதன் எல்லை போல் இரண்டு வேப்ப மரங்களும் நிற்கும் அந்த வீட்டின் முன் . வீட்டின் பின்புறம் கிணற்றடியும் ...