வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி

 

நான்கு



அன்று வழக்கத்தை விட சீக்கிரமே முழிப்பு வந்துவிட்டது தம்புடுக்கு. அவன் அம்மா கூட இன்னும் எழுந்திருக்கவில்லை. சத்தம் காட்டாமல் வெளியே வந்து காலை வேலைகளை முடித்து பல் தேய்த்து முகம் கழுவி காருடு வீட்டின் முன் போய் நின்றான். இன்னும் இருட்டாகவே இருந்தது. சேவல் கூவுவதற்கும் காருடு ஐயா விழிப்பதற்கும் சரியாக இருக்கும். கிழக்கு வானத்தைப் பார்த்தான் தம்புடு. 'இந்தா, இப்பத்தேன், வெளுத்துடுவேன்', என்பதாக இருந்தது அது.

தம்புடு தான் வழக்கமாக அமரும் இடத்தில் போய்க் குத்துக்காலிட்டு உட்கார்ந்தான். இதற்காகவே ஒரு சப்பட்டைக் கல்லை இழுத்துக் கொண்டு வந்து போட்டிருந்தான். தெருவென்று இருந்தால் எதிர் எதிரே வீடுகள் இருக்கும் ஊருக்குள். நேந்திரம்பட்டியின் மற்ற வீடுகளெல்லாம் அப்படித்தான். ஆனால் அந்த ஓட்டு வீடு மட்டும் கொஞ்சம் ஒதுங்கி இருந்தது. முன்னால் முற்றம் போல் திறந்த வெளி கொஞ்சமும், அதன் எல்லை போல் இரண்டு வேப்ப மரங்களும் நிற்கும் அந்த வீட்டின் முன். வீட்டின் பின்புறம் கிணற்றடியும் அதை ஒட்டி ஒரு வேப்ப மரமும் இருக்கும். எந்த அக்னி நட்சத்திர வெயிலுக்கும் இந்த மரங்களின் அடியில் குளுகுளுவென்று இருக்கும்.

முன்னால் இருக்கும் வேப்ப மரங்கள் ஒன்றின் அடியில் தான் கல்லை இழுத்துப் போட்டிருந்தான் தம்புடு. இப்போது அதில் அமர்ந்து மரத்தில் வாகாய் சாய்ந்து கொண்டான். என்ன பாடத்தை சொல்லிப் பார்ப்பது என்று யோசித்தான்.

வாத்துடு காருடுவின் (அவன் மனதில் அப்படித்தான் கூப்பிட்டான் ஒவ்வொரு முறையும்) வீட்டிற்கு 'வெள்ளக்கார தொர' வந்து போய் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகி விட்டன. துரை வாத்துடு காருடுவிடம் என்ன சொல்லிவிட்டுப் போனாரோ தெரியவில்லை. பள்ளிக்கூடமும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தருவதுமே  வேலை என்பதாக ஆகிவிட்டார் வாத்துடு காருடு.

பக்கத்து ஊர்களில் எதில் எதிலெல்லாம் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன என்று தெரிந்து வைத்திருந்தார். ஆனால் அந்த பள்ளிகளுக்கெல்லாம் பிள்ளைகள் பல மைல் தூரம் தினந்தோறும் நடந்து சென்று படித்து வரவேண்டும். பெற்றோர்கள் யாரும் அவ்வளவு தொலைவு பிள்ளைகளை அனுப்பத் தயாராக இல்லை. காருடுவுக்கும் அதற்கு மனமில்லை. பார்த்தார் வாத்துடு காருடு. நேந்திரம்பட்டியிலேயே ஒரு பள்ளி ஆரம்பித்துவிடுவது என்று முடிவு செய்தார். ஊர் மக்களைக் கூட்டிப் பேசி, ஓர் இடம் தேர்ந்தெடுத்து அதில் ஒரு கீற்றுக் கொட்டகை போடப்பட்டது. வாத்தியார் என்ற ஒருவரை வேலைக்குத் தனியாக அமர்த்தி அவருக்கு சம்பளம் தங்குமிடம் எல்லாம் கொடுக்கும் அளவுக்கு நிறைய பிள்ளைகளோ அவ்வளவு பெரிய பள்ளியோ அது இல்லாததால், வாத்துடு காருடுவே பாடங்கள் சொல்லிக் கொடுப்பது என்றும் முடிவானது. 

கொட்டகை சடசடவென்று தயாராகிவிட, நேந்திரம்பட்டி பிள்ளைகள் எல்லோரும் அந்தப் புதுப் பள்ளிக்கு மகிழ்வோடு அனுப்பிவைக்கப்பட்டார்கள். மதிய உணவிற்குப் பின் பிள்ளைகள் தங்கள் வேலைகளைப் பார்க்கப் போகலாம். ஆனால் காலையில் எல்லோரும் கண்டிப்பாய் பள்ளிக்கு வந்துவிடவேண்டும். முதலில் பாடங்கள் வாய் வழியாகவும் செவி வழியாகவுமே கற்றுக் கொடுக்கப்பட்டன. இப்போது தான் சில நாட்களாக எழுதுவதற்கு ஆரம்பமாயிருக்கின்றது. சிலேட்டோ அதில் எழுதுவதற்கு கடல் குச்சியோ, சாக்கு கட்டியோ இல்லாததால் மணலைப் பரப்பி அதில் மரத்திலிருந்து ஒடித்த குச்சியையோ அல்லது சிறு கல்லையோ வைத்து எழுதப் பழகிக் கொண்டிருக்கிறார்கள் பிள்ளைகள்.

தரையில் எழுதிப் பார்க்கும் அளவு இன்னும் பொழுது விடியவில்லை. மனப்பாடமாக கணக்கு வாய்ப்பாடு சொல்லிப் பார்க்க முடிவு செய்தான் தம்புடு. படிக்கும் பாடங்களிலேயே அவனுக்குப் பிடித்தது கணக்குப் பாடம் தான். எவ்வளவு படித்தாலும் அவனுக்கு அலுக்காததும் அது தான். மற்ற பிள்ளைகளையும் மனதில் கொண்டு வாத்துடு காருடு கணக்குப் பாடத்தை கொஞ்சம் மெதுவாகவே தான் சொல்லிக் கொடுத்தார். ஆனால் தம்புடுவுக்கு அது சலிப்பாக இருந்தது. அவன் கற்கும் திறனைப் புரிந்து கொண்டு காருடு அவனுக்கு மட்டும் ஏழாம் வாய்ப்பாடு வரை சொல்லிக் கொடுத்திருந்தார். தினமும் அவரிடம் காலையிலும் மாலையிலும் அவன்  இரண்டிலிருந்து ஏழு வரை வாய்ப்பாட்டை ஒப்பிக்கவேண்டும். பிசிறில்லாமல் சொன்னால் எட்டாம் வாய்ப்பாடு சொல்லித்தருவதாக காருடு சொல்லியிருந்தார். அதனால் மனதுக்குள் இரண்டாம் வாய்ப்பாட்டை சொல்ல ஆரம்பித்தான்.

ஓரண்ட ரெண்டு
ஈரண்ட
நாலு
மூவிரண்ட
ஆறு
நாலிரண்ட எட்டு
ஐரெண்ட
பத்து
ஆறிரண்ட
பன்னெண்டு
ஏழிரண்ட

அவன் பார்வையின் விளிம்போரத்தில் ஏதோ அசைவு தட்டுப்பட்டது. காருடு ஐயாவின் வீட்டு வாசலின் மேல் பார்வையைப் பதித்து மரத்தின் அடியில் இருட்டோடு இருட்டாக அமர்ந்திருந்தவனுக்கு ஓட்டு வீட்டின் வலது சுவர் ஓரமாக ஏதோ அசைவது போல் பட்டது. தலையை மட்டும் லேசாகத் திருப்பினான் தம்புடு. இப்போது அவன் முழு பார்வையும் சுவற்றின் பக்கம் திரும்பியது. அவன் பார்த்த போது எந்த அசைவும் அவனுக்குத் தெரியவில்லை. இருட்டுக்கு பழகியிருந்த அவன் கண்கள் சுவரையே வெறித்தபடி இருந்தன.

சட்டென்று அசைந்தது ஓர் உருவம், சுவரின் மறைவில் இருந்து. மெல்ல எட்டிப் பார்த்த அது, ஊருக்குள் இன்னும் யாரும் கண் விழிக்கவில்லை என்பதை உறுதி செய்வது போல் இரண்டு எட்டு முன்னே வைத்து சுற்றி முற்றி பார்த்தது. மரத்தின் அடியில் இருட்டோடு இருட்டாக வெறும் கோவணத்தோடு கல்லின் மீது அமர்ந்திருந்த தம்புடு அந்த உருவத்தின் கண்களுக்குத் தென்படவில்லை. யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட அந்த உருவம் இன்னும் கொஞ்சம் முன்னால் வந்து காருடுவின் வீட்டை நன்றாகப் பார்த்தது. பார்த்துக் கொண்டிருந்த தம்புடுவுக்குப் புரிந்துவிட்டது, அந்த உருவம் நேந்திரம்பட்டியைச் சேர்ந்தது அல்ல என்று. என்ன செய்வதென்று யோசித்தான். லேசாகத் தலையைத் தூக்கி வானத்தைப் பார்த்தான். நேந்திரம்பட்டி விழித்தெழும் நேரம் என்று அது சொன்னது.

கத்தினான் பாருங்கள் ஒரு கத்து!

"திருடன்! திருடன்! காருடு வீட்ல திருடன்!"

தொடரும்… 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி (குறுநாவல்)

'போகுமிடம் வெகு தூரமில்லை' - திரை விமர்சனம்

வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி (குறுநாவல்)