வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி
இது நடந்து ஒரு வாரம் ஆகியிருக்கும். நேந்திரம்பட்டிக்குள் ஒரு மோட்டார் வண்டி நுழைந்தது,
பளபளவென்று பச்சைக் கலரில்,
மரகதம் போல் ஜொலித்துக்கொண்டு. பொடிசுகள் பட்டாளம் 'ஹேய்,
கேய்', என்று கத்திக்கொண்டு அதன் பின்னால் ஓடி வர,
அந்த வண்டி நேரே காருடுவின் வீடாகிவிட்ட அந்த ஓட்டு வீட்டின் முன் போய் நின்றது. காருடுவின் உடன் வந்திருந்த அதே உதவியாளர் சடக்கென்று மோட்டார் வண்டியின் முன் சீட்டில் இருந்து இறங்கி பின் கதவைத் திறந்து பிடிக்க,
'வெள்ளக்கார தொர'
ஒருவர் வண்டியில் இருந்து கோட்டும் பூட்டும் (boot) போட்டுக்கொண்டு இறங்கினார். வண்டி சத்தம் கேட்டு வேகமாக வெளியில் வந்த காருடு ஐயா 'வெள்ளக்கார தொர'யைப் பார்த்ததும் பரபரவென்று முன்னால் வந்து பணிந்து கும்பிடு போட்டார். தஸ்ஸு புஸ்ஸு என்று இங்கிலிபீஸில் (English) அவரிடம் 'தொர'
ஏதோ சொல்ல அவர் சொன்னதை எல்லாம் தலையாட்டி ஆமோதித்தார் காருடு ஐயா. சுற்றிலும் இன்னொரு முறை பார்த்த 'தொர'
வீட்டுக்குள் செல்ல,
பின்னாடியே சென்றார் காருடு ஐயா.
இதற்குள் 'தொர'யும் மோட்டார் வண்டியும் வந்திருக்கும் செய்தி ஊருக்குள் தீயாய் பரவிவிட,
என்னமோ ஏதோவென்று போட்டது போட்டபடி ஓடி வந்தது நேந்திரம்பட்டி. காருடுவின் வீட்டின் முன் நிற்கும் வண்டியை ஆவலாக சுற்றிப் பார்த்த கூட்டம்,
வீட்டின் வாசலில் கொஞ்சம் பணிவான தூரத்தில் தனக்குள் சலசலத்துக் கொண்டு கூடி நின்றது.
"ஏன்யா,
தொர சுத்தி சுத்திப் பாத்துட்டு ஏதோ சொன்னாரே காருடு ஐயா கிட்ட. என்ன விசயம்?"
என்று உதவியாளரிடம் கேட்டது ஒரு குரல். ஏற்கனவே அவர் ஊருக்குள் வந்து சென்ற உரிமை.
"இல்ல,
அன்னிக்கிப் பாத்தது போலவே இன்னிக்கும் இருக்கு ஊருன்னு சொன்னாரு", என்று மொழிபெயர்த்து பதில் சொன்னார் உதவியாளர். 'தொர'யுடன் வருடக்கணக்காக இருப்பதால் இங்கிலிபீஸு பேசத்தான் தெரியாது என்றாலும் 'தொர'
பேசுவது நன்றாகவேப் புரியும் உதவியாளருக்கு.
"அடியாத்தி,
வீட்டை ஜப்தி பண்ண வந்த அதே தொரயா இவரு?"
"ஆமாம்".
"இன்னும் ஞாபகத்துல வச்சிருக்காரு!"
"பின்ன?"
கூட்டம் இப்படியாகத் தனக்குள்ளே அதிசயித்துக்கொண்டிருக்க,
ஊரின் சிறுவர்கள் மட்டும் என்ன சொல்லியும் கேட்காமல் வீட்டின் வாசற்கதவின் இருபக்கமும் முண்டிக்கொண்டு உள்ளே எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். காருடு ஐயாவை விட வயதில் இளையவராகத் தெரிந்த 'தொர'யை நாற்காலியில் அமர வைத்து,
காருடு ஐயா அவர் முன் லேசாகக் குனிந்து நின்று கைகளைக் கட்டிக்கொண்டுப் பேசுவதை ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டு நின்றார்கள். அந்தச் சிறுவர்களில் ஒருவன்,
இருப்பவர்களிலேயே ரொம்ப சூட்டிகையானவன்,
சடக்கென்று வீட்டுக்குள் புகுந்து 'வெள்ளக்கார தொர'
முன்பு நின்றான்,
வெறும் கோவணத்தோடு.
காருடுவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்த 'தொர'
பேசுவதை நிறுத்திவிட்டு அந்தச் சிறுவனைப் பார்த்தார்,
லேசான புன்சிரிப்போடு.
'இங்கே வா'
என்று கையசைத்து அவனை அருகில் அழைத்த 'தொர'
அவனிடம் இங்கிலிபீஸில் ஏதோ கேட்க,
அவனுக்கு என்ன ஏதென்று புரியும் முன்பே காருடு அவருக்குப் பதில் சொன்னார். அவர் சொன்னதில் 'தம்புடு'
என்ற வார்த்தை மட்டும் அவனுக்குப் புரிந்தது. அவனுடைய பெயரைக் கேட்டிருக்கிறார் என்று அவன் நினைத்துக் கொண்டான்.
'தம்புடு'
என்பதில்லை அவன் பெயர். ஆனால் காருடு அவனைப் பார்த்ததில் இருந்து அவனை அப்படித்தான் கூப்பிடுகிறார். காருடு ஊருக்குள் வந்ததில் இருந்து அவரின் பின்னாலேயே ஒட்டிக்கொண்டான் தம்புடு. காலையில் கண் விழித்ததும் ஓடிவிடுவான் ஓட்டு வீட்டுக்கு. வீட்டின் கதவு மூடியிருந்தால் வாசலிலேயே அமர்ந்திருப்பான். காருடு கதவைத் திறந்ததும் உள்ளே செல்வான். அவர் தயாராக வைத்திருக்கும் சொம்பை எடுத்துக் கொண்டு ஓடுவான் பால்காரரிடம். நுரைக்க நுரைக்கக் கறந்த பசும்பாலை அவன் வாங்கி வருவதற்கும் தேநீர் போட காருடு தயாராக இருப்பதற்கும் சரியாக இருக்கும்.
காருடு தேநீர் போடுவதை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பான். முதல் நாள் தேநீர் தயாரானதும் ஒரு லோட்டாவில் கொஞ்சமேக் கொஞ்சம் ஊற்றி அவனிடம் நீட்டினார் காருடு. அவன் ஆவலாய் கைநீட்டும் போது,
"பல் தேய்ச்சியா?"
என்று காருடு கேட்க,
இவன் இல்லையென்று தலை அசைத்தான்.
லோட்டாவை நீட்டிய கையைப் பின்னிழுத்துக் கொண்டு,
"போ. போய் பல் தேய்ச்சிட்டு வா. இனிமே பல் தேய்க்காம இங்க வரக்கூடாது,
தெரியுதா?"
என்று அவனிடம் கூற,
சரியென்று தலையாட்டிவிட்டு ஓட்டமாய் ஓடினான் வீட்டிற்கு,
பல் தேய்க்க. அவன் எல்லாம் முடித்து வருவதற்குள் தேநீர் ஆறிவிட்டது. ஆனாலும் அப்படி ஒரு ருசியை அவனுடைய ஏழு வயது வாழ்நாளில் அவன் அனுபவித்தது இல்லை. மறுநாளில் இருந்து சேவல் கூவும் முன் இவன் எழுந்து பல் தேய்த்து,
முகம் கழுவித் தயாராகி,
பொழுது புலரும் போது சரியாக ஓட்டு வீட்டின் முன் போய் நின்று விடுவான்.
அந்த முதல் நாளில் இருந்து காருடுவிற்கு இவன் தான் எல்லாமுமாகிப் போனான். 'தம்புடு' என்று அவனை அழைக்க ஆரம்பித்த அவர்,
அவனிடம் அவன் பெயரைக் கேட்கவும் இல்லை,
அவனும் சொல்லவும் இல்லை. ஊர்க்காரர்களிடம் அவனைக் குறித்துப் பேசும் போதும் கேட்கும் போதும் அவனை காருடு 'தம்புடு'
என்றே குறிப்பிட்டுச் சொல்ல,
இப்போது ஊருக்குள்ளும் அவனை அநேகம் பேர் 'தம்புடு'
என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
'டம்பூடூ?'
என்றார் துரை அவன் தோளில் சிநேகமாய்த் தட்டி.
லேசானக் கூச்சத்துடன் தலையசைத்தான் தம்புடு.
அடுத்து அவர் ஏதோ இங்கிலிபீஸில் கேட்க,
அவன் காருடுவின் முகத்தைப் பார்த்தான்.
"பள்ளிக்கூடம் போயி படிக்கிறயான்னு கேக்குறாரு", என்று காருடு மொழிபெயர்த்தார்.
வேகவேகமாக சரியென்று தலையாட்டினான்.
மறுபடி துரை காருடுவிடம் ஏதோ சொல்ல காருடுவும் 'சரி சரி'
என்று தலையசைத்தார்.
கடைசியாக இவனிடம் மறுபடி ஏதோ சொல்ல,
காருடு உடனடியாக,
"நல்லா படிச்சு உங்க நாட்டுக்கு நல்லது செய்யணும்னு சொல்றாரு", என்று மொழிபெயர்த்தார்.
அவன் மீண்டும் வேகவேகமாய்த் தலையாட்டினான்.
துரையும் காருடுவும் வெளியே வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் உதவியாளர் ஓடி வந்தார். அவரை அருகில் அழைத்த துரை அவரிடம் ஏதோ சொல்ல,
அதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டார் உதவியாளர்.
இதற்குள் நேந்திரம்பட்டி மொத்தமும் கூடிவிட்டிருந்தது. வயக்காடு,
அங்கு, இங்கு என்று வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் சேதி சென்று சேர,
எல்லோரும் வந்து சேர்ந்துவிட்டார்கள் ஓட்டு வீட்டின் முன்.
உதவியாளரிடம் பேசி முடித்த துரை ஊர் மக்களை பார்த்து அருகில் வரும்படி சைகை செய்தார். கூட்டம் கொஞ்சம் முன்னேறி வந்தது. சிறுவர்களும் கூட்டத்துடன் சேர்ந்து கொண்டார்கள். துரை உதவியாளரைப் பார்த்து சைகை செய்ய,
அவர் கூட்டத்தைப் பார்த்துப் பேசினார்.
"காருடு ஐயா உங்க ஊருக்கு வந்திருக்கறது உங்களுக்கு ரொம்ப நல்லது. எல்லா விவரமும் தெரிஞ்சவரு. நாலஞ்சு பாஷை பேசுறவரு. உங்களுக்கு என்ன விவரம் தேவைன்னாலும் அவரைக் கேட்டுக்கோங்க. அவரு மூலமா உங்க பிள்ளைங்களை எல்லாம் நல்லாப் படிக்க வைங்க. நீங்களும் காருடு ஐயாவும் ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் பார்த்துக்கணும்னு துரை உங்ககிட்ட சொல்லச் சொல்றாரு", என்று உதவியாளர் சொல்லி முடிக்கவும் கூட்டத்திலிருந்துக் கலவையான குரல்கள் ஒலித்தன.
துரை ஒருமுறை எல்லோரையும் பார்த்து இருகை கூப்பி வணங்கினார். பின்னர் காருடுவைப் பார்த்து ஒரு முறை வணங்கினார். விடுவிடுவென்று நடந்து மோட்டார் வண்டியில் போய் ஏறிக்கொண்டார். உதவியாளர் அவசர அவசரமாக ஓடி முன்னால் ஏறிக்கொள்ள,
வண்டி புழுதிக் கிளப்பி மறைந்தது.
கூட்டம் சலசலத்துக் கொண்டு பிரிந்தது. காருடு வீட்டினுள் சென்று கதவைப் பூட்டியிருந்தார். மூடிய கதவைப் பார்த்துக் கொண்டு நின்ற தம்புடு என்ன செய்வது என்று தெரியாமல்,
பேசிக் கொண்டே சென்ற பெரிய மனிதர்கள் சிலருடன் சென்றான்.
"அடேங்கப்பா! நெசமாவே பெரிய மனுசனாத்தான் இருக்கணும் காருடு ஐயா. தொரையே நேர்ல வந்து பார்த்துட்டுப் போறாரு!"
"நாலஞ்சு பாஷை வேற தெரியும்னு சொல்றாங்க!"
"புள்ளைகள படிக்க வைக்கணுமாம்ல. பள்ளிக்கூடத்துக்கும் வாத்தியாருக்கும் எங்க போறது?"
"அதான் காருடு ஐயா பார்த்துக்குவாருன்னு தொரையே சொன்னாரே!"
"எப்பேர்ப்பட்ட மனுஷன்யா! அவரு பேரு கூடத் தெரியலியே நமக்கு!"
"பேரா?
அதான் காருடு. அதான அவரு பேரு?"
"அட,
அது பேரு இல்லப்பா. 'ஐயா'ன்னு சொல்ற மாதிரி தான் அது. நம்ம மூலை வீட்டுக் கல்யாணத்துல பொண்ணு வீட்டு சொந்தக்காரங்க சிலரு இப்பிடி பேசிக்கிட்டாங்க,
நெனவில்லை?"
"ஆமாமா. ஞாபகம் இருக்கு".
"அப்ப,
காருடு அவரு பேரு இல்லையா?"
"இல்லை".
"இப்பப் பேரைத் தெரிஞ்சி என்னத்துக்கு?
நாம காருடுன்னேக் கூப்புட்டாப் போகுது".
"அட,
கூப்புடறதுக்கு இல்லப்பா. ஒரு தகவல் தெரிஞ்சுக்கத்தான். நம்ம ஊரு சனம்ன்னு ஆகிட்டாரு. பேரு கூடத் தெரியலைன்னா எப்பிடி?"
"கேக்குறதுக்கும் ஆளில்லையே!"
"அவரு பேரு வாத்துடு காருடு", என்றான் தம்புடு ஊடுவாரியாக.
"டேய்,
தம்புடு! என்னடா சொல்ற?"
"ஆமாம்,
அவரு பேரு வாத்துடு காருடு".
"டேய்,
ஒனக்கு எப்பிடிடா தெரியும்?"
"தொர அவருகிட்ட பேசறப்போ,
வரிக்கு வரி அப்பிடித்தான் கூப்புட்டாரு அவரை".
"நல்லாக் கேட்டியாடா?
இது என்னடா பேரு?"
"நல்லாக் கேட்டேன். அப்பிடித்தான் கூப்புட்டாரு".
"எனக்கென்னமோ இவன் சொல்றது நம்பிக்கையில்லை".
"நான் சரியாத்தான் சொல்றேன்", என்று ஓங்கிப் பேசினான் தம்புடு.
"பையன் சொல்றது சரியா இருந்தாலும் இருக்கும். அவன் தான வீட்டுக்குள்ள இருந்து எல்லாத்தையும் கேட்டுகிட்டு இருந்தான்".
"எனக்கு இன்னும் நம்பிக்கையில்ல".
"அவரு தான் நாலஞ்சு பாஷை பேசுவாராம்ல! அந்த பாஷைல ஏதாவது ஒண்ணுல இருக்கற பேரா இருக்கும்".
"எப்பிடியோ இருக்கட்டும். அதையே அவரு பேருன்னு வச்சிக்கிடலாம். ஆனா அவரு காதுபட இதை பேசிடக் கூடாது. சின்னப் பையன் பேச்ச நம்பி நாம ஏதாவது பேச,
அது எசகுபிசகா வேற ஏதாவது அர்த்தமாகி ஏடாகூடமாகிடக் கூடாது. அதனால இந்தப் பேரு நமக்குள்ளேயே இருக்கட்டும். என்ன நாஞ்சொல்றது?"
என்று காருடுவிற்கும் என் வருங்காலத்து ஏஜென்சிக்கும் அன்று நாமகரணம் ஆயிற்று.
‘அது சரி, ரெண்டுத்துக்கும் என்னங்க சம்பந்தம்,
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட மாதிரி?'
என்று உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. நான் தான் முதலிலேயே சொன்னேனே,
இது பெரிய கதை என்று. விருப்பமிருந்தால் மேலே வாசியுங்கள். இல்லையென்றால் இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். ஆனால் இன்னொரு முறை என்னிடம்,
'இது என்ன சார் இப்பிடி ஒரு பேரு?'
என்று கேட்டீர்களோ…
கருத்துகள்
கருத்துரையிடுக