வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி


ஐந்து




பொழுது பலபலவென்று விடிவதற்கும் தம்புடு கத்துவதற்கும் சரியாய் இருந்தது. உறக்கத்திலிருந்து எழுந்தவர்கள் முழித்தும் முழிக்காமலும், கொல்லையில் இருந்தவர்கள் கழுவியும் கழுவாமலும் அரக்க பரக்க ஓடி வந்தார்கள், கையில் கிடைத்ததைத் தூக்கிக் கொண்டு.

"திருடன்! திருடன்!'

"விடாத! பிடி!"

என்று ஊரே ஒரே 'ஹே!ஹே!' என்று சத்தமானது

தேநீருக்குப் பால் வாங்க சொம்பைத் தயாராக வைத்துக் கொண்டு தம்புடுவிற்காகக் கதவைத் திறந்த காருடுவுக்கு இந்த அல்லோலகல்லோலத்தில் தான் அன்று விடிந்தது.

இந்த விபரீதத்தை எதிர்பார்க்காதத் திருடன் ஒரு கணம் திகைத்து நின்றான். காருடு வீட்டின் முன் இருந்த முற்றம் நேந்திரம்பட்டியின் ஜனத்தால் நிறைந்துவிட்டது. முன்னேறி முன்னால் சென்று தப்பிக்க முடியாது என்று தெரிந்து வந்த வழியே (அது எந்த வழியோ!) 'திரும்பி' ஓடப் பார்த்தான். ஆனால் அவனுக்குப் பின்னால் தம்புடு நின்று கொண்டிருந்தான்ஒரு வினாடி தயங்கிய திருடன், சின்னப் பையன் தானே என்று அவனிடம் இப்படியும் அப்படியுமாக பாச்சா காட்டிவிட்டுக் கிடைத்த இடைவெளியில் தம்புடுவைத் தாண்டி விட்டான். இப்போது நேந்திரம்பட்டிக் கூட்டம் அவனுக்குப் பின்னால். அது ஆவேசமாக அவனை சுற்றி வளைக்கப் பார்க்க, 'சிக்கினால் சின்னாபின்னம்' என்னும் உயிர் பயத்தில் திருடன் ஓட, இன்னும் நாலு எட்டு வைத்து விட்டால் தப்பிவிடலாம் என்ற நிலையில், அவனை நோக்கி இன்னொரு கூட்டம், "திருடன்! விடாத பிடி! எங்கடா ஓடுவ?" என்று ஆவேசமாய்க் கத்திக்கொண்டு ஓடி வந்தது.

இனி தப்பியோட வாய்ப்பே இல்லை என்று புரிந்து போய் அப்படியே நின்று விட்டான் திருடன். புதிதாய் வந்தவர்கள் அவன் பிடரியைப் பிடித்து உலுக்கினார்கள். தாட்டியமாக இருந்த ஒருவன் அவனை நாலு போடு போட்டான்.

"எங்கடா? எங்கடா வச்சிருக்க?" என்றபடி திருடனின் வேட்டியை உருவி கோவணத்தோடு நிற்க வைத்தான். அவனிடம் இவன் தேடுவது இல்லை என்றதும் இன்னும் ஓங்கி அடித்தான்.

"சொல்லுடா, எங்க வச்சிருக்க?" என்றான்.

இதற்குள் நேந்திரம்பட்டிப் பெரியவர்கள் முன்னாடி வந்து நின்றார்கள்.

"! நிறுத்துப்பா. என்ன ஏதுன்னு வெவரம் இல்லாம இப்பிடி போட்டு அடிக்கிற. மொதல்ல நீங்க யாருன்னு தகவல் சொல்லுங்க", என்று அதட்டினார்கள்.

அடித்தவன், "திருடிட்டு வந்து நிக்கிறான். அவனை அடிக்காம பின்ன கொஞ்ச சொல்றீகளா?" என்றான் குரலின் ஸ்ருதியைக் குறைக்காமல்.

"இந்தாப்பா எங்கூரு எல்லையில நிக்கிற நீ. கேக்கறதுக்குப் பக்குவமா பதில் சொல்லு. தெரிஞ்சுதா?" என்று அவனை அடக்கினார்கள்.

", பெச்சா! கொஞ்சம் சும்மா இரு. பெரியவங்க கேக்குறாங்கல்ல. அடக்கிப் பேசு. ஐயா காதுக்குப் போச்சு வம்பாப் போகும், பாத்துக்க", என்று அவன் ஆளுகளுக்குள் இருந்து ஒரு குரல் ஒலித்தது.

'ஐயா' என்ற வார்த்தையைக் கேட்டதும் சற்று அடங்கினான் பெச்சா. வந்தவர்களில் ஒருவன் முன்னுக்கு வந்தான்.

"ஐயா, வணக்கமுங்க! நாங்க குசலனூரு ஜமீன் ஆளுங்க. ஜமீன் ஐயா பொண்ணு கல்யாணத்துக்கு மாப்பிள்ள வீட்டு சீரு வந்த நகையை இவன் திருடிட்டு ஓடி வந்துட்டான். தொரத்திட்டு நாங்க வரதுக்குள்ள இங்க ஊருக்குள்ள நுழைஞ்சிட்டான். ஆனா பாருங்க, நகை எதுவும் அவங்கிட்ட இல்ல. என்ன பண்ணான்னு தெரியலை. கேட்டாலும் சொல்லமாட்டேங்குறான். மாப்பிள்ள சீருங்க. கிடைக்கலைன்னா பெரிய மானக்கேடாகிடும் எங்க ஜமீனுக்கு. அதான் பெச்சா கொஞ்சம் ஓங்கித் தட்டிட்டான்", என்று விளக்கமும் விவரமும் சொன்னான்.

 "அடப்பாவி! கல்யாணப் பொண்ணு மாப்பிள்ள சீரையா களவாங்குன?"

"மாப்பிள்ள வீடு கோவிச்சுக்கிட்டு போனா கல்யாணம் என்னடா ஆவுறது, படுபாவி!"

"சீரு நகையைப் போயித் திருடியிருக்கியேய்யா. நீ நல்லா இருப்பியா!" என்று நேந்திரம்பட்டி பெண்கள் கரித்துக் கொட்டினார்கள்.

"ஏய், பெண்டுகளா! நிறுத்தமாட்டீங்க? கொஞ்சம் போங்க அங்கிட்டு. அதான் விசாரிக்கிறம்ல", என்று ஆண்கள் அவர்களை ஓரம் கட்டினார்கள்.

இந்த சந்தடிகளுக்கு நடுவில் தம்புடு காருடுவிடம் அவன் பக்கத்து விவரங்களை ஒன்று விடாமல் சொல்லிவிட்டான். எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக்கொண்டார் காருடு. அதுவரை நடந்தவைகளை அமைதியாகப் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்தவர் முன்னால் வந்தார்.

"ஏய், உன் பேரென்னப்பா?" என்றார் திருடனிடம், அவனை மேலும் கீழும் பார்த்து. பார்ப்பதற்கு இளவயதாகத் தான் இருந்தான்.

தலை குனிந்து நின்றிருந்தவன் அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு மறுபடியும் தலையைக் குனிந்து கொண்டான், பதில் ஏதும் சொல்லாமல்.

"சொல்லுடா, காருடு ஐயா கேக்குறாருல்ல", என்று நேந்திரம்பட்டிக் குரல் ஒன்று ஒலிக்க, அவன் எந்த அசைவும் இல்லாமல் அப்படியே நின்றிருந்தான்.

"ஐயா, நீங்க தான் காருடு ஐயாங்களா? எங்களுக்கும் சேதி எட்டுச்சுங்க உங்களப் பத்தி. பெரிய மனுசரு, நீங்களே சொல்லுங்கய்யா என்ன பண்ணறதுன்னு. நாளப் பொழுது விடிஞ்சா கல்யாணம். மாப்பிள்ள வீட்டுக்காரங்க எல்லாம் இன்னிக்கி பொழுது சாய வந்துடுவாங்க. வண்டி கட்டிட்டதா ஏற்கனவே தகவல் வந்துடுச்சு. சீரு நகையைப் போடாம பொண்ணு அந்நேரம் இருந்தா", பெச்சாவால் பேச்சை முடிக்க முடியவில்லை

"யப்பா, ஒன் பேரென்ன?" என்று காருடு பெச்சாவைக் கேட்டார்.

"பெரியசாமிங்க. ஆனா எல்லாரும் பெச்சான்னு தான் கூப்புடுவாங்க".

"யப்பா, பெச்சா, கொஞ்சம் பொறுமையா இரு. ஆளப் புடிச்சாச்சில்ல. கேப்போம் அவங்கிட்ட", என்றவர் திருடனிடம் திரும்பினார்.

"ஏண்டாப்பா, பேரைக் கூட சொல்லமாட்டேங்குற. திருடிட்டு வந்தவன் தப்பிச்சுப் போயிருந்தா திருடுனது உனக்கு உபயோகப்படும். நீதான் மாட்டிக்கிட்டியேப்பா. அப்புறம் நகையை வச்சு என்ன பண்ணப்போற? எங்க வச்சிருக்கன்னு சொல்லிடு. மேல மேல அடிவாங்காமயாச்சும் இருப்ப", என்று அவனிடம் பதவிசாக எடுத்துப் பேசினார்.

அவனோ குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தான்.

"காது கேக்குதாடா?" என்று ஒரு குரல் கேட்டது.

தலையை நிமிர்த்தியவன் 'கேட்கும்' என்பதாக தலையசைத்தான்.

"வாய் பேசுவல்ல? ஊமையா?" என்று இன்னொரு குரல் கேட்டது.

'இல்லை' என்பதாகத் தலை அசைத்தவன் 'தண்ணி' என்று ஒற்றை வார்த்தைப் பேசி அதை உறுதிப் படுத்தினான்.

"யாராச்சும் கொஞ்சம் தண்ணி குடுங்க அவனுக்கு", என்று சொல்லிய காருடு கொஞ்சம் கூட்டத்திலிருந்து தள்ளிச் சென்றார். காலையில் தேநீர் குடிக்காமல் போனது அவருக்கு லேசான எரிச்சலை உண்டாக்கியிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் தலைவலி வந்துவிடும் அறிகுறிகள் வேறு தோன்றி அவரை மேலும் எரிச்சலடைய வைத்தன.

'சே, ஒரு சாயா குடிக்காம் பட்டில்லா. பரஞ்ஞித் தொலையாம் பாடும் இல்லா, பட்டி', என்று வாய்க்குள் முணுமுணுத்தார். எரிச்சல் உச்சத்தை அடையும் போதும் கோபம் வரும் போதும் அவருக்குத் தெரிந்த மற்றொரு  பாஷையில் அவருக்கு அவரே இப்படிப் பேசிக்கொள்வது அவரது பழக்கம். அன்று வந்து விழுந்தது மலையாளம். எந்நேரம் எந்த மொழி வரும் என்று அவருக்கேத் தெரியாது.   

பேச்சும் சத்தமும் கூட ஆரம்பித்தது. இருபக்கக் கூட்டமும் பொறுமை இழக்க ஆரம்பித்தது. காருடு ஒரு முடிவுக்கு வந்தவர் போல் கூட்டத்தின் நடுவில் வந்தார்.

"டேய், அப்பா! திருடா! கடைசியாக் கேக்குறேன். நகையை என்ன பண்ணன்னு சொல்லிடு. இல்லன்னா உன் பாடு கஷ்டம் தான். டவுனு போலீஸ் ஸ்டேஷனுக்குத் தான் போக வேண்டியதாகும். என்ன சொல்ற?" என்றார் காருடு திருடனைப் பார்த்து.

அவன் தொங்கப்போட்ட தலையை நிமிர்த்தக்கூட இல்லை. அதற்குள் குசலனூர் ஆட்கள், "போலீசா? அதெல்லாம் எதுக்குங்க? கூட நாலு தட்டு தட்டுனா தானா சொல்லிட்டுப் போறான்", என்பதாக ஆளாளுக்குப் பேசினார்கள்.

"இந்தப் பயல எங்கிட்ட விடுங்க, பத்து நிமிஷம் போதும்", என்று பெச்சா ஒரு பக்கம் எகிற, காருடு எல்லோரையும் பார்த்துப் பேசினார்.

"இங்க பாருங்க, நீங்க தட்டுற தட்டுக்கு, சொல்லணும்ன்னா அவன் எப்பவோ சொல்லியிருப்பான். அது மட்டுமில்ல, விசாரிக்கிறேன்னு நீங்க ஓங்கி நாலு போட, ஏதாவது அவனுக்கு ஆச்சுன்னா அப்புறம் அது வேற மாதிரி பிரச்னை ஆகும். முந்தி மாதிரி இல்ல இப்ப. புதுசா அரசாங்கமும், புதுசு புதுசா சட்ட திட்டமும் வந்திடுச்சு. அதுக்கும் போலீஸ்காரன் தான் வருவான். வந்து உங்க ஜமீன் ஐயாவைத் தான் விசாரிப்பான். பொண்ணு கல்யாணத்தப்ப போலீசு, விசாரணைன்னு, இதெல்லாம் தேவையான்னு பாத்துக்கோங்க. நீங்க தட்டுற தட்டை போலீஸ் தட்டி விசாரிக்கட்டும். பய சொல்லித்தான் தீரணும். நகையும் கிடைச்சுடும், பிரச்னையும் வராது", என்று பொறுமையாக விளக்கிச் சொன்னார்.

குசலனூர் ஆட்கள் அவர்களுக்குள் கூடிப் பேசினார்கள். காருடுவின் பேச்சில் இருந்த நியாயத்தை அவர்களால் மறுக்க முடியவில்லை. மாப்பிள்ளை வீட்டார் வரும் முன் நகை கிடைத்துவிடவேண்டும் என்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்தது. அதற்காக என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்வதற்குத் தயாராக இருந்தார்கள் அவர்கள்.

வண்டிகள் கட்டிக்கொண்டு  திருடனை போலீஸ் டேசனுக்குக் கொண்டு செல்வது என்று முடிவாயிற்று. கையும் காலும் கட்டப்பட்டு ஓரமாய் உட்கார வைக்கப்பட்டான் திருடன். குசலனூர் ஆட்கள் அவனைச் சுற்றிக் காவலுக்கு நின்றார்கள்.

நேந்திரம்பட்டி ஊர்ப் பெரியவர்கள் சிலரும் காருடுவும் அவர் வீட்டுக்குள் சென்றார்கள் மேலும் விவரங்களை கலந்தாலோசிக்க. அது ஜமீன் பிரச்னை என்பதால் நேந்திரம்பட்டி அதில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க போலீசிடம் போவது ஒன்று தான் சரியாக இருக்கும் என்று ஒரு வழியாக முடிவானது. டவுனுக்கு காருடுவுடன் யார் யார் போவது என்றும் முடிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்க, கூடிக் கொண்டே போகும் தலைவலியும் எரிச்சலும் காருடுவை பொறுமை இழக்க வைத்தன. வீட்டை விட்டுக் கிளம்பி இந்தப் பிரச்னையை சீக்கிரம் போலீசிடம் இறக்கி வைத்துவிட்டால் தேவலை என்ற நினைப்பு ஒன்று தான் காருடு மனதில் சுழன்று கொண்டிருந்தது.  

"தம்புடு!" என்று வெளியில் இருந்தவனைக் கத்தி அழைத்தார் காருடு. உள்ளே வந்தவனை, "பூட்டு சாவின எத்துடா!", என்றார் குறையாத எரிச்சலுடன்.

தம்புடு ஒரு கணம் திடுக்கிட்டுப் பார்த்தான், காருடு என்ன சொல்கிறார் என்று. இங்கும் அங்குமாகக் கவனத்தைப் பிரித்துக் கொண்டிருந்த காருடு, "பூட்டு சாவின எத்துடா, சீக்கிரம்!" என்றார் மறுபடியும்.

அவர் அப்படிச் சொல்வதற்கும் வெளியே ஒரு சலசலப்பு ஏற்படுவதற்கும் சரியாக இருந்தது. ஒன்றும் புரியாமல் தலையைச் சொரிந்த தம்புடு காருடுவின் வீட்டு சாவியை அவர் வழக்கமாக வைக்கும் இடத்திலிருந்து எடுத்தான். ஜல் ஜல் என்ற சத்தத்தோடு வில் வண்டி ஒன்று வந்து நிற்பதும் தம்புடு காருடு வீட்டு சாவியை வாகாகத் தரையில் வைத்து முன்பக்கம் உதைத்தால் யார் மேலாவது பட்டு விடும் என்பதால் பின்வாசல் வழியே பலங்கொண்ட மட்டும் ஓங்கி உதைப்பதும் ஒரே நேரத்தில் நடந்தனநூல் கயிறு கட்டிய அந்தச் சிறிய ஒற்றைச் சாவி, தம்புடுவால் உதைக்கப்பட்டு, உதைவாங்கிய வேகத்தில் ஏதேதோ புரியாத தெரியாத  இயற்பியல் விதிகளின் படி, பறந்து சென்று, கிணற்றில் விழாமல் தப்பி, அதன் அருகில் இருந்த மரத்தின் கிளையொன்றில் போய்ச் சிக்கிக்கொண்டு லேசாய் ஊசலாடியது

உடன் இருந்தவர்கள் வண்டிச் சத்தம் கேட்டு வெளியே சென்று விட, காருடுவும் அவர்களின் பின்னேயேப் போக எத்தனிக்கும் போது ஏதோ பொருந்தாத அசைவு ஒன்று அவர் ஓரக்கண் பார்வையில் பட, அது என்னவென்றுப் பார்க்கத் தலையைத் திருப்பும் போது சரியாக அவர் கண்ணில் பட்டது தம்புடு சாவியை உதைத்த உதை. அவன் என்ன செய்கிறான் என்று புரியாமல் ஒரு கணம் திகைத்து நின்ற காருடு, "டேய், தம்புடு! என்னடா செய்ற?" என்றார் அதிர்ச்சியுடன்.

"நீங்க சொன்னதத் தான்", என்றான் தம்புடு.

"நான் சொன்னதையா? நான் என்னடா சொன்னேன்?"

"பூட்டு சாவிய எத்துடான்னு நீங்க தான சொன்னீங்க இப்ப?"

"பூட்டு சாவிய எத்த சொன்னேனா? வீட்டைப் பூட்ட சாவிய எடுன்னு தானடா சொன்னேன்".

"இல்லை. பூட்டு சாவிய எத்துன்னு தான் சொன்னீங்க".

"டேய், 'எத்து'ன்னா 'எடு'ன்னு அர்த்தம்டா".

"ம் எந்த பாஷைல?"

"கன்னடத்துல".

தம்புடு இடுப்பில் இரண்டு கைகளையும் ஊன்றி நெற்றியைச் சுருக்கிக் கொண்டு காருடுவை முறைத்தான்.

அந்த ஒரு கணத்தில் காருடுவுக்கும் தம்புடுவுக்கும் இடையில் இருந்த சமன்பாடு சட்டென்று மாறியது.

"சரி, சரி, ஏதோ நெனப்புல ஏதோ வாயில வந்துடுச்சு. இப்ப சாவிக்கு என்னடா பண்றது?" என்றார் காருடு, தவறு செய்து மாட்டிக்கொண்ட சிறுவனைப் போல்.

"இதுக்குத் தான் ஒரு பாஷை பேசணுங்கறது", என்றான் தம்புடு பெரிய மனிதத் தோரணையோடு.

"யப்பா, சாமி, இனிமே ஒரே பாஷையிலேயே பேசறேன்டாப்பா. இப்ப சாவிக்கு என்ன வழின்னு சொல்லுடா, என் தம்புடுயப்பா".

"மரத்துல ஏறித்தான் எடுக்கணும், என்ன பண்றது? நீங்க முன்னாடி போய் பேசிட்டிருங்க. வண்டி சத்தத்தைக் கேட்டா ஜமீன் வண்டி மாதிரி தெரியுது. யார்கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம். நான் மரத்துல ஏறி எடுத்துட்டு வரேன்".

"ஜாக்கிரதையா ஏறுடா", என்றபடி வெளியே சென்றார் காருடு.

தம்புடு சொன்னது சரியாகத்தான் இருந்தது. வந்தது ஜமீன் வண்டி மட்டுமல்ல, ஜமீன்தாரும் தான். அவர்கள் ஆட்களிடம் பேசிக்கொண்டிருந்த ஜமீன்தார் பேசிமுடித்துவிட்டு நேந்திரம்பட்டிப் பெரியவர்களிடம் வந்து நின்றார். எல்லாரையும் பார்த்துக் கைகூப்பினார். பதிலுக்கு எல்லாரும் குனிந்து பவ்யமாய் வணங்க, காருடு மட்டும் நேர்ப்பார்வை பார்த்து நின்றார். அவரையும் பார்த்து வணங்கிய ஜமீன்தார், "வணக்கம். நான் குசலனூரு  ஜமீன். நடந்த விஷயமெல்லாம் எங்க ஆளுங்க உங்களுக்கு சொல்லியிருப்பாங்க. இப்ப வரைக்கும் நகை கிடைக்கலைன்னு எங்க ஆளுங்க சொன்னாங்க".

"வணக்கம். உண்மைதான். இப்பவரைக்கும் நகை கிடைக்கலை. எப்பிடி கேட்டாலும் நகை எங்க இருக்குன்னு சொல்லமாட்டேங்குறான். அதான் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாம்னு ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம்" என்றார் காருடு.

"காருடு ஐயா, நீங்க தான் இந்த யோசனை சொன்னதா எங்க ஆளுங்க சொன்னாங்க. இதை வேற எப்பிடியும் தீர்க்க முடியாதா?" என்று கேட்டார் ஜமீன்தார்.

"வேற எப்பிடித் தீர்க்கலாம்னு நீங்களே சொல்லுங்க", என்றார் காருடு.

"இது மட்டும் வேற சமயமா இருந்திருந்தா வேற மாதிரி போயிருக்கும் விஷயம். ஆனா பொண்ணு கல்யாணமாப் போயிடுச்சு", என்றார் ஜமீன்தார் பல்லைக் கடித்துக்கொண்டு.

"பொண்ணுக்குன்னு நான் செஞ்சி சேர்த்து வச்சிருக்கிற நகை எல்லாத்தையும் மொத்தமா எடுத்துட்டுப் போயிருந்தாக் கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். மாப்பிள்ளை வீட்டு சீர் நகையல்ல எடுத்துட்டு வந்துட்டான். அது இல்லாம பொண்ண எப்பிடி மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க முன்னாடி நிறுத்தறது? அந்த நகை மட்டும் கிடைக்கலன்னா"

"நகை கிடைச்சுடுச்சு!"

தொடரும்… 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி (குறுநாவல்)

வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி (குறுநாவல்)

'போகுமிடம் வெகு தூரமில்லை' - திரை விமர்சனம்