வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி

ஆறு



 

தம்புடுவின் குரல் வீட்டினுள் இருந்து ஓங்கி ஒலித்தது. காருடு வீட்டு வாசலில் தான் அவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். தம்புடுவின் குரல் அவர்களுக்குத் தெளிவாகக் கேட்டது. சட்டென்று பேச்சு அத்தனையும் நின்றது.

"நகை கிடைச்சுடுச்சு!" என்று மறுபடியும் ஓங்கி ஒலித்த தம்புடுவின் குரல் இப்போது முற்றத்தில் இருக்கும் அனைவருக்கும் கேட்டது. மொத்த சனமும் காருடு வீட்டு வாசல் முன் வந்துக் குவிந்தது. எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சியும் நிம்மதியும் வந்து அப்பிக்கொள்ள, திருடனின் முகம் மட்டும் இருண்டு துவண்டது.

கையில் ஒரு சிறிய துணி மூட்டையோடு வெளியே வந்த தம்புடு, நேரே அதை காருடுவிடம் கொடுத்தான். ஒன்றும் புரியாமல் மூட்டையை வாங்கியவரின் கண்களை உற்றுப் பார்த்து, "ஜமீன்தாருகிட்ட குடுத்து இந்த நகை தானா திருடுபோனதுன்னு பார்க்கச் சொல்லுங்க", என்றபடி காருடுவின் கைகளில் அந்த மூட்டையை ஒப்படைத்தான்.

அதை வாங்கிய காருடு ஜமீன்தாரிடம் அதைக் கொடுப்பதற்குக் கையை நீட்ட, அதற்குள் அவர் அவசர அவசரமாக மூட்டையை காருடுவின் கைகளில் இருந்து பிடுங்காத குறையாக வாங்கினார். வாங்கிய வேகத்தில் மூட்டையைப் பிரிக்கப் போக, காருடு அவர் கைகளை அழுத்தி அவரைத் தடுத்தார்.

"ஐயா, வீட்டுக்குள்ள போய் கதவை மூடிட்டுப் பிரிச்சிப் பாருங்க", என்றார், மூட்டையைப் பிடித்திருந்தக் கைகளை விடாமல்.

அவரை ஏறிட்டுப் பார்த்த ஜமீன்தார், சரியென்று தலை அசைத்துவிட்டு காருடுவின் வீட்டுக்குள் சென்றுக் கதவை சாத்தினார்.

அவர் கதவை மூடவும் தம்புடு காருடுவிடம், "மரத்துல இருந்துச்சு", என்று கிசுகிசுத்தான்.

"சாவி?" என்றார் காருடு, அவரும் கிசுகிசுப்பான குரலில்.

"அதையும் எடுத்துட்டேன்", என்றான் தம்புடு.

இதற்குள் எல்லோரும் தம்புடுவைச் சூழ்ந்து கொண்டார்கள்.

"டேய், தம்புடு! எப்பிடிடா கண்டுபிடிச்ச?"

"எங்கடா இருந்துச்சு?"

"வீட்டுக்குள்ளயா ஒளிச்சு வச்சிருந்தான்?"

"உனக்கு எப்பிடிடா தெரிஞ்சுச்சு?" என்று சரமாரியாகக் கேள்விகள் அவனைத் துளைத்தன.

"காருடு ஐயா சொல்லித்தான் கண்டெடுத்தேன்", என்று மொத்தமாக எல்லோருக்கும் சேர்த்து பதில் சொன்னான்.

"டேய், தம்புடு!" என்றார் காருடு உள்ளுக்குள் ஏற்பட்ட அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு. எங்கே உள்ளே நடந்ததை வெளியே சொல்லித் தன் மானம் மரியாதையை எல்லாம் தொலைத்து விடுவானோ என்று பயந்து.

"என்னங்கய்யா, நீங்க தான் சொன்னீங்க?" என்று அவன் அடுத்த வார்த்தை தொடர்வதற்குள் ஜமீன்தார் கதவைத் திறந்து முகத்தில் பெரும் நிம்மதியுடன் வெளியே வந்தார். வந்தவர் நேராக காருடுவிடம் சென்று அவர் கைகளைப் பிடித்துக்கொண்டார்.

அவர் ஏதோ சொல்ல வாய் எடுப்பதற்குள் காருடு, "ஐயா, எல்லாம் சரியா இருக்குங்களா? சந்தோசம். போய் முதல்ல நல்ல படியா பொண்ணு கல்யாணத்த நடத்துங்க. நேரம் போயிட்டு இருக்கு", என்றார்.

காருடு பேசிய இந்த அவகாசத்தில் ஜமீன்தார் சுதாரித்துக் கொண்டார்.

"காருடு ஐயா, உங்களுக்கும் இந்த நேந்திரம்பட்டிக்கும் குசலனூரு ஜமீனும் ஜமீன்தாரும் நன்றிக் கடன் பட்டிருக்கோம். நீங்க செஞ்ச இந்த உதவிக்கு என்ன, எப்பிடி கைம்மாறு செய்யப்போறோம்னு தெரியலை. என் பொண்ணு கல்யாணம் இப்ப உங்க உதவியால் தான் நடக்கப்போகுது", என்று நேந்திரம்பட்டிப் பெரியவர்களைப் பார்த்துக் கைகூப்பினார்.

"ஐயோ! என்னங்கய்யா நீங்க பெரிய வார்த்தை எல்லாம் பேசிகிட்டு", என்று பதறினார்கள் அவர்கள்.

"தம்பி, இங்க வா", என்று கைநீட்டி தம்புடுவை அழைத்தார் ஜமீன்தார்.

அவர் முன் சென்று நின்றான் தம்புடு.

"உன் பேரென்ன?"

"தம்புடு".

"எங்க, எப்பிடி கண்டுபிடிச்ச நகையை?"

"மரத்து மேல இருந்துச்சு", என்றான் தம்புடு.

"மரத்து மேலயா? அங்க ஏறிப் பார்க்கணும்னு உனக்கு எப்பிடி தோணுச்சு?"

"எனக்குத் தோணலைங்க. காருடு ஐயா தான் பார்க்கச் சொன்னாரு".

"அங்க ஏறி ஏன் பார்க்கச் சொன்னார்?"

"அது பாருங்க, நடந்தது இது தான். அப்படியே சொல்லிடுறேன்", என்றவன் காருடுவை ஒரு பார்வை பார்த்தான். அவர், 'என்னடா சொல்லப்போற?' என்று மிரண்டு போய் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

"எல்லாரும் வெளியே பேசிட்டு இருந்தாங்க. அப்போ காருடு ஐயா என்னையக் கூப்புட்டாரு. கூப்புட்டு, காலைல நடந்தது என்ன, நான் என்ன பார்த்தேன்னு என்னைய மறுபடி ஒரு தரம் சொல்லச் சொன்னாரு. நான் காலையில வாய்ப்பாடு சொல்லிப் பார்த்துக்கிட்டு இருந்தேன்னு ஆரம்பிச்சு திருடனப் பார்த்து கத்துனது வரைக்கும் எல்லாத்தையும் சொன்னேன். அப்ப அவரு, 'நில்லு, நில்லு, திருடனை சரியா எந்த இடத்துல பார்த்த?'ன்னு கேட்டாரு. அதுக்கு நான், 'உங்க வீட்டு சுவர் ஓரமான்னு', சொன்னேன். 'அவன் அங்க வந்து நின்னதைப் பார்த்தியா?'ன்னு கேட்டாரு. நான் இல்லைன்னு சொன்னேன். அப்ப அவரு கொஞ்சம் யோசிச்சாரு", என்றவன் சற்று நிறுத்தி சுற்றி இருந்த முகங்களைப் பார்த்தான். எல்லோரும் ஆவலாய் அவன் அடுத்து சொல்லப் போவதையே எதிர்பார்த்திருந்தார்கள். காருடு மட்டும் ஒரு வித புரியாத முக பாவத்தோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"ம், அப்புறம் என்ன ஆச்சு?" என்று ஒரு குரல் அவனை தொடரச் சொன்னது.

"பின்ன எங்கிட்ட சொன்னாரு, 'தம்புடு, திருடன் இருட்டோடே இருட்டா இங்க வந்திருக்கான். வர வழியில அவன் நகையை எங்கயும் ஒளிச்சு வைக்க வாய்ப்பில்லை. இருட்டுக்குள்ள எங்கேன்னு ஒளிச்சு வைப்பான்? அப்பிடியே வச்சாலும் அப்புறம் அதை வச்ச இடம் அடையாளம் கண்டுபிடிச்சு எங்கன்னு போய் மீட்டெடுப்பான்? அதுனால அவன் நகையை இங்க தான் எங்கயோ ஒளிச்சு வச்சிருக்கணும்'ன்னு சொல்லிட்டு மறுபடியும் யோசனை பண்ணார். யோசிச்சிட்டு கேட்டாரு, 'கிணத்துல எதாச்சும் விழுந்த மாதிரி சத்தம் எதுவும் உனக்குக் கேட்டுச்சா'ன்னு. நான் இல்லைன்னு சொன்னேன். 'எனக்கும் கேக்கலை'ன்னு சொன்னாரு. 'அப்ப அவன் கெணத்துக்குள்ள போடலை நகையை. அப்பிடியே சத்தம் காட்டாம போட்டாலும், மறுபடியும் வந்து அதை எப்பிடி எடுப்பான்? அதுனால நகை கெணத்துக்குள்ளயும் இல்லை. குழி தோண்டி புதைக்கறதுக்கும் நேரமும் இல்லை, சந்தர்ப்பமும் இல்லை' அப்பிடின்னுட்டு வெளியே பின்கட்டுக்குப் போய் பார்த்தாரு. புதுசா எங்கயும் மண்ணு பொரட்டிப் போடலை. அப்புறம் சொன்னாரு, 'டேய் தம்புடு, அப்ப அவன் அந்த நகையை மரத்துல தான்டா ஒளிச்சு வச்சிருக்கணும். வேற எங்கயும் அது இருக்கறதுக்கு வாய்ப்பில்லை. மரத்துல வச்சா எடுக்கறதும் லேசு. இது மாதிரி ஒரு ராத்திரி வந்து இருட்டோடே இருட்டா மரத்துல ஏறி எடுத்துட்டுப் போயிடலாம். அதுனால நீ மரத்துல ஏறிப் பாரு ஏதாச்சும் இருக்கான்னு'. அப்ப நான் சொன்னேன், 'நான் ஏறிப் பார்க்குறேன். நீங்க முன்னாடிப் போய் பேசிட்டு இருங்க. நகை கிடைச்சா சொல்லிக்கலாம். இப்ப நீங்க எதுவும் சொல்லவேண்டாம்'ன்னு. அது படியே காருடு ஐயா உங்ககிட்ட வந்து பேசிட்டு இருந்தாரு. நான் மரத்துல ஏறிப் பார்த்தேன். அவரு சொன்ன மாதிரியே நகை இருந்துச்சு. எடுத்துட்டு வந்தேன். இதான் நடந்தது", என்று நீளமாக சொல்லி முடித்தான் தம்புடு.

சில கணங்கள் அங்கே நிசப்தம் நிலவியது. அதன் பின் சட்டென்று அது கலைந்து ஆளாளுக்குப் பேசினார்கள்.

"அடேங்கப்பா! காருடு ஐயா என்னமா யோசனை பண்ணிருக்காரு?"

"வெவரம் தெரிஞ்ச ஆளுன்னு சும்மாவா தொர சொல்லிருப்பாரு?"

"போலீசு கூட இவ்வளவு வெரசா (விரைவாக) நகையைக் கண்டுபிடிச்சிருப்பாங்களா?"

"வெள்ளக்கார தொர கிட்ட வேலை பார்த்த புத்தி".

"அனுபவமய்யா, அனுபவம். அம்புட்டும் அனுபவம்".

"அதான் நாலெழுத்து படிச்சவங்களுக்கும் படிக்காதவங்களுக்கும் வித்தியாசம்".

ஜமீன்தார் மறுபடியும் காருடுவின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

"காருடு ஐயா, போலீஸ்காரன் மாதிரி யோசிச்சு நகையை மீட்டெடுத்துருக்கீங்க. உங்களுக்கு எப்பிடி நன்றி சொல்லறதுன்னேத் தெரியலை", என்று நா தழுதழுத்தார்.

"எங்கூருக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டிக் குடுத்து வாத்தியார் சம்பளம் போட்டுக் குடுத்து உங்க நன்றியைச் சொல்லுங்க", என்றான் தம்புடு சடக்கென்று.

ஒரு கணம் விக்கித்துப் போன ஜமீன்தார் பின்னர் அவனைப் பார்த்து கடகடவென்று சிரித்தார்.

"டேய் தம்புடு! நீ பெரிய ஆளுடா. பொழைக்கத் தெரிஞ்சவன்", என்றார்.

"பொழைக்கறதுக்குத் தான் பள்ளிக்கூடம் கேக்கறது", என்றான் பதிலாக.

"காருடு ஐயா, இவன் ஒருத்தன் போதும் உங்களுக்கும் இந்த ஊருக்கும்", என்றவர் சிரித்துக்கொண்டே, "கல்யாணம் முடியட்டும். பார்க்கலாம்", என்று பொதுவாக சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.  

ஜமீன்தார் கிளம்பியதும் நேந்திரம்பட்டியும் அவரவர் வேலைக்குக் கலைந்து சென்றது. இனியும் அந்தத் தலைவலி அவர்களுக்கு வேண்டாமென்று திருடனை பெச்சாவுடனேயே அனுப்பி வைத்துவிட்டார்கள் நேந்திரம்பட்டிப் பெரியவர்கள். எல்லோரும் கிளம்பி சென்று முற்றமும் ஓட்டு வீடும் காலியானதும் காருடு தம்புடுவை அழைத்தார்.

"டேய், தம்புடு! எங்கேயிருந்துடா அவ்வளவும் உனக்குத் தோணுச்சு?" என்று கேட்டார் ஆச்சர்யத்துடன். ஏழு வயது மூளைக்குள் இத்தனை யோசனை எப்படி வந்தது என்று அவருக்குப் புரியவில்லை.

"இதுல என்ன காருடு ஐயா பெருசா இருக்கு யோசிக்க?" என்றான் அவன்.

"இல்ல, கிணறு, மண்ணு தோண்டுறதுன்னு அவ்வளவும் யோசிச்சிருக்கியே!"

"ஆமாம், எல்லாரும் ஹாய், பூய்ன்னுட்டு இருந்தாங்க. நான் ஒரு சுத்து பார்த்தேன் திருடன் நின்னுட்டு இருந்த இடம், அவன் நின்னு உங்க வீட்டைப் பார்த்ததுன்னு, கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தேன். உங்க வீட்டைக் குறிப்பு வச்சு ஞாபகம் வச்சிக்கிற மாதிரி அவன் நின்னு பார்த்த மாதிரி எனக்குத் தோணிச்சு. எதுக்குன்னு யோசிச்சேன். நகையை வச்சிட்டு மறுபடி வந்து எடுக்கறதுக்காக நோட்டம் விடுறான்னு புரிஞ்சது. அப்பிடின்னா நகை இங்க தான் எங்கயாச்சும் இருக்கணும்னு தோணிச்சு. சொன்னாப்புல, கிணத்துல எதுவும் போடற சத்தம் கேக்கலை, குழி தோண்டவும் நேரம் இல்லை. அப்ப மரத்துல தான இருக்கணும்? அங்க போய் யாரு பார்க்கப் போறாங்க? வச்சது வச்சபடி இருக்கும்ல திரும்பி வந்து எடுக்கிற வரைக்கும்? மரத்துல ஏறிப் பார்க்கலாம்னு நினைச்சுட்டு இருந்தப்ப தான் நீங்க சாவிய எத்தச் சொன்னீங்க".

"யோசனை எல்லாம் நீ பண்ணிட்டு, நான் சொன்னேன்னு ஏன்டா சொன்ன?" என்றார் காருடு.

"எல்லாம் ஒண்ணு தான, காருடு ஐயா", என்றவனை வேறு எதுவும் பேசாமல் இழுத்து அணைத்துக் கொண்டார் காருடு.

"ஐய்யே! விடுங்க, காருடு ஐயா", என்று கூச்சத்தோடு நெளிந்து கொண்டு அவர் பிடியில் இருந்து நழுவிக் கொண்டு ஓடினான் தம்புடு.

தொடரும்…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி (குறுநாவல்)

வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி (குறுநாவல்)

'போகுமிடம் வெகு தூரமில்லை' - திரை விமர்சனம்