வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி

 ஏழு



குசலனூர் ஜமீன்தார் நன்றிக் கடன் தீர்க்க, பள்ளிக்கூடமும் வாத்தியார் ஒருவருக்கு தன்னுடைய வாழ்நாள் பரியந்தம் மாத சம்பளம் கொடுக்கவும் ஏற்பாடு செய்துவிட்டார். இன்றைக்கு அந்தப் பள்ளிக்கூடம் நேந்திரம்பட்டியின் இரண்டு மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்று.

தம்புடுவுக்கு பதினோரு வயது ஆகும் போது காருடு இறந்து போனார். அவர் இறுதி சடங்கை தம்புடுதான் செய்யவேண்டும் என்று நேந்திரம்பட்டிப் பெரியவர்களிடம் முறைப்படி தகவல் தெரிவித்து, அவர்களின் சம்மதத்தையும் வாங்கிவிட்டிருந்தார். அவர் காரியங்கள் எல்லாம் முடிந்து ஒரு வாரம் ஆனதும் பக்கத்து டவுனிலிருந்து வக்கீல் ஒருவர் நேந்திரம்பட்டிக்கு வந்தார். வந்தவர் நேரே தம்புடுவின் வீட்டை விசாரித்துக் கொண்டு சென்று அவன் பெற்றோரிடம் காருடு எழுதிவைத்துவிட்டுச் சென்ற உயிலை வாசித்துக் காட்டினார். அதன் படி நேந்திரம்பட்டியில் இருக்கும் ஓட்டு வீடும் அவர் விட்டுச் சென்றிருக்கும் கணிசமான பணமும் தம்புடுவுக்குப் போய்ச் சேர வேண்டும் என்றும், அந்தப் பணத்தை அவன் படிப்புக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்றும் எழுதி வைத்திருந்தார் 'வரதப்ப காருடு' என்னும் 'வாத்துடு காருடு'.

அந்தப் பணத்தில் படித்து நேந்திரம்பட்டியின் முதல் கலெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற என் தம்புடு தாத்தாவுக்கு இன்று எண்பது வயது.

என் சிறு வயது முழுதும் அவரிடம் நேந்திரம்பட்டியின் கதையையும், வாத்துடு காருடுவின் வாழ்வையும் கேட்டு வளர்ந்தவன். எங்கள் குடும்பம் மொத்தமும் கலெக்டர் படிப்பையும் உத்தியோகத்தையும் குத்தகைக்கு எடுத்தது போல், அப்பா, அம்மா, அத்தை, மாமா, என் அக்கா, என் அண்ணா, என் அத்தையின் இரண்டு மகன்கள் என்று எல்லோரும் கலெக்டர்களாக நாடு முழுதும் பரவி இருக்க, நான் மட்டும் தப்பிப் பிறந்தவன் போல் ஐபிஎஸ் முடித்து போலீஸ் வேலையில் சேர்ந்தேன். என் குடும்பம் மொத்தமும் அடைந்த ஏமாற்றம் என் தம்புடு தாத்தாவின் குழந்தைத்தனமான குதூகலத்தில் மறைந்து போனது. சரியாக பன்னிரண்டு வருடங்கள் போலீஸ் சர்வீஸில் இருந்துவிட்டு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டேன், டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிப்பதற்காக.

"அந்தக் காலத்துல இந்த டிடெக்டிவ் ஏஜென்சி எல்லாம் இல்லடா, பேராண்டி. இருந்திருந்தா நான் கலெக்டர் ஆகாமல் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிச்சு அதுக்கு 'வாத்துடு டிடெக்டிவ் ஏஜென்சி'ன்னு பேரு வச்சிருப்பேன்", என்று தம்புடு தாத்தா சொல்லி நான் கேட்காத நாள் கிடையாது.

இது தாங்க, 'வாத்துடு டிடெக்டிவ் ஏஜென்சி' வந்த கதை. இப்போது போட்டாச்சா மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு?

இனி யாரும் என்னிடம் கேட்காதீர்கள், "அது என்ன, சார்,  'வாத்துடு டிடெக்டிவ் ஏஜென்சி'?" என்று.

அப்பாடா. முடிந்தது. முதலில் இந்தக்  கதையை என் கிளையண்ட்டுக்கு அனுப்பி மீதமிருக்கும் பீஸை வாங்க வேண்டும்.

வர்ட்டா?

பிகு: தம்புடு தாத்தா கலெக்டராக இருந்த போது ஒரு நாள் அவருடைய செக்ரட்டரி அவரிடம் ஏதோ பிரச்னையைப் பற்றி அங்கலாய்த்துவிட்டு , "What to do, Sir?" என்று சொல்ல, அப்போது அவருக்குப் பொறி தட்டியதாகக் கூறினார், 'வெள்ளக்கார தொர' காருடுவிடம் வரிக்கு வரி "What to do, காருடு?", "What to do, காருடு?" என்று சொல்லியிருக்கிறார் என்று.

முற்றும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி (குறுநாவல்)

'போகுமிடம் வெகு தூரமில்லை' - திரை விமர்சனம்

வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி (குறுநாவல்)