மழைச்சாமி
இராமநாதபுர மாவட்டத்தின் ஒரு வறண்ட கிராமத்தின் ஒரு காய்ந்த பகல் பொழுதில், பிரசவித்த களைப்பில் ஒரு தாயும், பிறந்த களைப்பில் ஒரு ஆண் சிசுவும் உறங்க ஆரம்பித்தனர்.
மழை பெய்யத் தொடங்கியது.
‘என் மவன் பொறந்த நேரம் நல்ல நேரமய்யா’, என பிள்ளையைப் பெற்றவனும், ‘மூணுக்கப்புறம் இதாவது பையனாப் பொறந்ததே’, என பெற்றவளின் மாமியார்க்கிழவியும் சந்தோஷித்தனர்.
அதன் பின் அந்தக் கிராமத்தில் தினமும் மழை பெய்தது. நாள் தவறாமல், வாரம் தவறாமல், மாதம் தவறாமல், வருடம் தவறாமல் நான்கு வருடங்களாய் சத்தமில்லாமல், சலனமில்லாமல், அமைதியாய், அளவாய், நிச்சயமாய் இரவிலும், எப்போதேனும் பகலிலும் பெய்தது.
சட்டென அந்தக் கிராமம் செழித்துப்போனது. அவன் பிறந்த நேரம் என அந்தக் கிராமம் அவனைக் கொண்டாடியது. அவனுக்கென வைத்த பெயர் மறந்து, ‘யப்பா, சாமி, அப்பு’, என அடைமொழி சொல்லியே அவன் அழைக்கப்பட்டான்.
நான்கு வயதாகியும் வாய் திறந்து வார்த்தை பேசாததால் அவனை அழைத்துக்கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வேண்டிக்கொள்ளச் சென்றாள் அவனைப் பெற்றவள்.
அன்று அந்தக் கிராமத்தில் மழை பெய்யவில்லை. மதுரையில் பெய்தது.
‘என்னய்யா, உன் மவன் மழையையும் கூடவே கூட்டிட்டுப் போய்ட்டான் போலருக்கு’, என பெற்றவன் செல்லமாகக் கேலி பேசப்பட்டான்.
இரு தினங்கள் கழித்து அவர்கள் திரும்பியதும் மறுபடியும் மழை பெய்யத்தொடங்கியது.
பெற்றவளின் வேண்டுதல் நிறைவேறவில்லை.
மகளையும் பேரப்பிள்ளைகளையும் பார்த்துப்போக வந்த பெரியவர் மருமகனிடம், ‘ஏய்யா, உன் மவன் மழையை சீலப்பைல முடிஞ்சு இடுப்புல சொருகி வச்சிருக்கானாம்ல. கொஞ்சம் எங்கூரு பக்கம் அவன அனுப்பி வையேன், சாமி’, என்று கூற, ‘அதென்னவோ தெரியாது, மாமா. ஆனா அவன் பொறந்த நேரம் நல்ல நேரம். ராசியான பையன். வேணுமின்னா நாலு நாளைக்கு எல்லாரையும் கூட்டிப் போங்க’, என ஐவரும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
பல வாரங்கள் கழித்து, ‘யப்பா, ஒரு போகம் நல்ல அறுப்பு எடுத்தோம்யா உன் மவன் புண்ணியத்துல’, என்றபடி ஐவரும் கொண்டு வந்து விடப்பட்டனர்.
அந்த ஒரு மாதமும் இங்கே மழை பெய்யவில்லை.
வாய் மொழிப் பேச்சாய் அவன் சட்டென சுற்று வட்டாரத்தில் பிரபலமாய் போனான். மழை வேண்டுபவர்கள் அவனை பெற்றவனிடம் வந்து வேண்டி அவனை அழைத்துச் சென்றனர். உடன் அவன் தாயும் சென்றாள்.
‘மழைச்சாமி வருது’, என அவன் போகும் ஊர்களில் அவனை வணங்க ஆரம்பித்தனர்.
ஒரு ஊரில், எல்லையில் அவனை நிற்க வைத்து பூஜை செய்யத் தொடங்க, சட்டெனத் திரும்பி ஓடிப்போனான். பதறிப் போய் அந்த ஊர் மனிதர்கள் அவன் பின்னால் ஓடியும் அவனைப் பிடிக்க முடியவில்லை. காணாமலே போனான்.
அவன் வீடும் கிராமமும் மருண்டுவிட்டது. நாலாபக்கமும் ஆட்கள் அனுப்பப்பட்டனர். அவன் கிடைக்கவில்லை.
அதன் பின் அந்தக் கிராமத்தில் தினமும் மழை பெய்யவில்லை. எப்போதாவது பெய்யும் போது, ‘மழைச்சாமி பக்கத்துல இருக்கான் போல’, என்று பேசிக்கொண்டனர்.
பன்னிரெண்டு வருடங்கள் கழித்து ஒரு நாள் அவன் திரும்பி வந்தான். நேரே தன் வீட்டிற்குச் சென்று, கதவைத் தட்டி உள்ளே சென்று அலுமினியத் தட்டெடுத்து விறகடுப்பின் முன் அமர்ந்தான். அடையாளம் கண்டுகொண்ட அவன் தாய் அழுதுகொண்டே அவனுக்கு தட்டில் பழைய சாதம் இட்டாள்.
தினமும் மழை பெய்யத் தொடங்கியது அந்தக் கிராமத்தில்.
அவன் திரும்பி வந்த செய்தி காட்டுத்தீயாய் பரவ, சனங்கள் அவனைக் காணக் குவியத் தொடங்கினர்.
‘பூஜ புனஸ்காரமெல்லாம் எதும் செய்யமாட்டோம்யா. நாலு வருசமா பொட்டு மழையில்லை சாமி. கொஞ்சம் வந்துட்டுப் போங்கய்யா’, என வேண்டத்தொடங்கினர்.
சில சமயங்களில் இந்த வேண்டல்களுக்கு இணங்கினான். வேண்டியவர்களுடன் சென்று அவர்கள் ஊரில் சில தினங்கள் தங்கி வந்தான்.
அவனைக் காண வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தது. புதிதாய் இரண்டு மினி பஸ் தடங்கள் தொடங்கப்பட்டன அந்தக் கிராமத்திற்கு.
அவனைப் பற்றிய செய்தி யாரோ ஒருவர் எழுதிய கடிதத்தால் (அலைபேசிகளும் Whatsapp-ம் அந்த கிராமத்தின் கற்பனைக்குக் கூட எட்டாத காலம் அது) பிரபல வாரப் பத்திரிக்கை ஒன்றுக்கு சென்றது. அவனைப் பற்றிய செய்தி சேகரிக்க நிருபர்கள் அனுப்பப்பட்டனர்.
மறுவாரம் அந்தப் பத்திரிக்கையில், ‘மழைச்சாமி?!’ என்ற தலைப்பில் அவனைப் பற்றிய கட்டுரை வெளியாகியது. ‘மழைச்சாமி நிஜமாகவே மழைக்கு சாமியா என்று தெரியவில்லை. ஆனால் அவன் இருக்கும் இடத்தில் தினமும் மழை பெய்கிறது’, என்பது அந்தக் கட்டுரையின் கடைசி வாக்கியமாய் இருந்தது.
அரசு அதிகாரி ஒருவரின் கண்ணில் இந்தக் கட்டுரை பட்டு அது முதல்வரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. முதல்வர் அதைப் படித்துவிட்டு, ‘இது சோதித்துப் பார்க்கவேண்டிய விஷயம். உண்மையா இல்லையா என்பதை ஆதாரபூர்வமாய் கண்டறியுங்கள்’, என்று உத்தரவிட, அரசாங்கக் குழு ஒன்று அந்தக் கிராமத்தில் முகாமிட்டது.
ஏறத்தாழ ஒரு மாதம் கழித்து அவர்கள் சமர்ப்பித்த அறிக்கை, அந்தக் கிராமத்தில் தினமும் இரவில் மழை பெய்வதாகவும், மழைச்சாமி என்று அழைக்கப்படுபவன் அந்தக் கிராமத்தில் இல்லாத நாட்களில் மழை பெய்வதில்லை என்றும், அவன் போகும் இடத்தில் மழை பெய்கிறதென்றும், இது மேலும் தீவிரமாய் ஆராயப்படவேண்டிய ஒன்று என்றும் கூறியது.
முதல்வரின் நேரடி உத்தரவின் பேரில் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று மழைச்சாமியை சந்தித்தது. தங்கள் நோக்கத்தையும் முதல்வரின் உத்தரவையும் எடுத்துரைத்துத் தங்களுடன் ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டது. சில பரிசோதனைகள் செய்யவேண்டுமென்றும், தங்களுடன் மழைச்சாமி சென்னைக்கு வரவேண்டுமென்றும் அந்தக் குழு கேட்டுக்கொண்டதன் பேரில் மழைச்சாமி தன் தாயுடன் சென்னை கிளம்பினான்.
மழைச்சாமியின் சென்னை வருகை பற்றி நாளேடுகள் செய்தி வெளியிட, அவனைக் காண மக்கள் இரயில் நிலையத்தில் குவியத் தொடங்க, விஷயம் அவனுடன் வரும் அரசு அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டு, செங்கல்பட்டில் இறங்கி, மழைச்சாமியை வேறு மார்க்கமாக சென்னைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் பாதுகாவலில் வைக்கவேண்டியதாயிற்று.
சென்னையில் தினமும் பெய்த மழை மழைச்சாமி அங்கிருப்பதை உறுதி செய்ய, வெளி மாநிலங்களிலிருந்து மழைச்சாமியைப் பற்றி விசாரணைகள் வரத் தொடங்கின. ஆந்திராவிலிருந்தும், கர்நாடகாவிலிருந்தும், பீகாரிலிருந்தும் கோட்டைக்கு செய்திகள் அனுப்பப்பட்டன.
மழைச்சாமியைப் பற்றி ஆங்கில நாளேடுகளில் வெளியான செய்திகள் பிரதமரின் கண்ணிலும், ஜனாதிபதியின் கண்ணிலும் பட்டு, பிரதமரின் ஒப்புதலுடன், ஜனாதிபதியின் நேரடி பார்வையின் கீழ் பிரத்யேகக் குழு ஒன்று அமைக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டது.
மாநிலக் குழுவும் மத்தியக் குழுவும் தனித்தனியே பரிசோதனைகள் நிகழ்த்த வேண்டுமென்றும் ஒருவர் முடிவை மற்றவர் அறியக்கூடாதென்றும் தீர்மானிக்கப்பட்டு சோதனைகள் நிகழ்த்தப்பட்டன.
சாதாரணக் கண்காணிப்பிலிருந்து இரத்தத்தையும் மூளையின் செயல்பாட்டையும் ஆராய்வது வரை எல்லா சோதனைகளும் செய்யப்பட்டன. ஒரு மாத தீவிர ஆராய்ச்சிக்குப் பின் இரு குழுக்களும் தங்களின் அறிக்கைகளை சமர்ப்பித்தன. இரண்டு அறிக்கைகளும் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், முதல்வருக்கும் அனுப்பப்பட்டன. இரண்டு அறிக்கைகளும் ஒரே முடிவுகளையே சொல்லியிருந்தன.
மழைச்சாமி தூங்கும் போது மழை பெய்கிறதென்றும், தூங்கும் போதெல்லாம் மழை பெய்கிறதென்றும், தூங்கும் போது மழை பெய்யத் தவறுவதில்லையென்றும், அவன் உடலிலோ செயலிலோ மற்ற மனிதரிடமிருந்து எவ்விதமும் மாறுபடவில்லையென்றும், அவன் இது வரை ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையென்றும், அவனுக்குப் பேசும் திறன் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய முடியவில்லையென்றும் அந்த அறிக்கைகள் தெரிவித்தன.
நீண்ட விவாதத்திற்குப் பின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஒப்புதலுடன் இரு அறிக்கைகளையும் தமிழக அரசு மக்களின் பார்வைக்கு வெளியிட்டது.
வெளியிடப்பட்ட அறிக்கைகளை சர்வதேச தூதரகங்களில் அப்போது பதவியில் இருந்த தூதர்கள் அவரவர் நாடுகளுக்கு அவற்றை அனுப்பி வைக்க, இந்த அறிக்கைகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அந்தந்த நாடுகளின் பத்திரிக்கைகளில் வெளியாக, சட்டென உலகம் கலகலத்துப் போனது.
ஒவ்வொரு நாட்டிலிருந்தும் விஞ்ஞானிகள் குழுக்கள் சென்னையை நோக்கிப் படையெடுக்க, யாருக்கும் தெரியாமல், காவல் தளர்த்தப்பட்ட மழைச்சாமி, தன் தாயுடன் தன் கிராமத்திற்குத் திரும்பியது தெரிய வந்தது. அத்தனை குழுக்களும் அவன் கிராமம் நோக்கி விரைய, பதறிப் போன தமிழக அரசு மழைச்சாமியைப் பாதுகாக்க சிறப்புக் காவல் படையொன்றை அனுப்பி வைத்தது. எந்தக் குழுவும் மழைச்சாமியின் சம்மதமின்றி அவனை சந்திக்க அனுமதிக்கக் கூடாதென்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
எந்தக் குழுவையும் சந்திக்க மழைச்சாமி மறுக்காததால் ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனியே நேரம் ஒதுக்கப்பட்டது. ஜீன் சீக்குவென்சிங் முதல் எலெக்ட்ரோ என்செஃபலோகிராம் வரை அத்தனை பரிசோதனைகளையும் செய்வதற்கு மழைச்சாமியிடம் அனுமதி வாங்கப்பட்டது.
இந்தச் சோதனைகள் அனைத்தையும் செய்ய அந்தக் கிராமம் உகந்த இடமல்ல என்றும், சோதனைக் கருவிகள் அனைத்தும் தத்தம் நாட்டில் இருப்பதாலும், தங்களுடன் மழைச்சாமி தங்கள் நாட்டிற்கு வரவேண்டுமென்று ஒவ்வொரு குழுவும் மழைச்சாமியிடம் கோரிக்கை விடுக்கும் செய்தியறிந்து மழைச்சாமியை தேசியச் சொத்தென அறிவிக்கக் கோரி ஒரு குழு சென்னையில் முதல்வரை சந்தித்தது.
ஆந்திராவும் கர்நாடகாவும் பீகாரும் மழைச்சாமியை சில மாதங்களேனும் தங்களிடம் அனுப்பி வைக்கவேண்டுமென மறுபடி மறுபடி வேண்டுகோள் விடுத்தன.
வறட்சியின் பிடியில் சிக்கிச் சீரழியும் ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஐக்கிய நாடுகள் சபையின் செக்ரெட்டரி ஜெனெரலை சந்தித்து மழைச்சாமியைப் பற்றி விவாதித்தது. இந்தப் பிரதிநிதிகளையும் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் குழு ஒன்று மழைச்சாமியை சந்திப்பதென்றும், மழைச்சாமி இணங்கினால் அந்தக் குழு அவனை ஆப்பிரிக்க நாடுகளுக்கு அழைத்துச் செல்வதென்றும் தீர்மானிக்கப்பட்டு, எலும்புகளின் கூடுகளாய் நடமாடும் ஆப்பிரிக்க மக்களின் புகைப்படங்களோடு அந்தக் குழு மழைச்சாமியை நாடிச் சென்றது.
சோதனைகள் ஒரு புறம் நடக்கட்டுமென்றும், அபூர்வ ஆற்றலை மழைச்சாமி வீணாக்கக்கூடாதென்றும், தங்களுடன் தங்கள் நாடுகளுக்கு மழைச்சாமி வரவேண்டுமென்றும் அந்தக் குழு மழைச்சாமியை வேண்டியது.
புகைப்படங்களைப் பார்த்த மழைச்சாமி தன் தாயுடன் அந்த ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்ல சம்மதிக்க, தோன்றிய யோசனை ஒன்றை செயலாக்க அனுமதி வேண்டி சென்னை சென்றது பிரெஞ்சுக் குழு.
பிரெஞ்சுக் குழுவின் கோரிக்கை தமிழக அரசின் பரிசீலனையில் இருக்கும் போது அவர்களுக்குத் தோன்றிய அதே யோசனை ஆங்கிலேயக் குழுவிற்கும் தோன்ற, அதை செயல்படுத்த அனுமதி கிடைக்காதென அனுமானித்து சேகரித்த சாம்பிள்களுடன் சட்டென அந்தக் குழு லண்டன் திரும்பியது.
மழைச்சாமி இல்லாமல் மேலும் சோதனைகள் செய்ய இயலாததால், செய்த சோதனைகளை ஆராய்ந்து முடிவறிய குழுக்கள் அவரவர் நாடு திரும்பின.
தாயகம் திரும்பியதும் மழைச்சாமியை அனுப்பி வைப்பதாய் ஆந்திராவிற்கும் கர்நாடகாவிற்கும் பீகாருக்கும் தமிழக அரசு உறுதி கூறியது.
ஏறத்தாழ இரண்டு வருடங்கள் கழித்து ஆங்கிலேயக் குழு மழைச்சாமியை க்ளோனிங் செய்ய அவர்கள் எடுத்த முயற்சி வெற்றிபெற்றுவிட்டதென்றும் இரண்டு பெண்கள் தற்போது மழைச்சாமியின் க்ளோன் கருக்களை சுமந்து கொண்டிருப்பதாகவும் இருவரும் ரகசிய இடங்களில் பாதுகாப்புடன் இருப்பதாகவும் செய்திகள் வெளியிட்டதும் சட்டென்று ஒரு சர்வதேச சட்ட பூகம்பம் வெடித்தது.
இந்திய அரசு தன் சட்ட நிபுணர்களை முடுக்கி விட, தி ஹேகில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் பிரிட்டன் மீது இந்தியா வழக்கு தொடர்ந்தது. மழைச்சாமி தங்கள் நாட்டுப் பிரஜை என்றும், மழைச்சாமியை க்ளோன் செய்ய பிரிட்டன் மழைச்சாமியிடம் அனுமதி பெறவில்லை என்றும், அறிவுசார் சொத்து உரிமைகள் அடிப்படையிலும், க்ளோன் கருக்கள் குழந்தைகளாய் பிறந்ததும் தங்களிடம் ஒப்படைத்து விடவேண்டும் என்றும் இந்தியா வாதிட்டது.
இச்சூழ்நிலையில் மழைச்சாமி வெளிநாட்டிலிருப்பது ஆபத்து என்றெண்ணிய இந்திய அரசு, எத்தியோப்பியாவிலிருந்த மழைச்சாமியை தக்க பாதுகாப்புடன் அழைத்து வந்து சென்னையில் தமிழக அரசிடம் ஒப்படைத்தது.
உறுதி கூறியிருந்த மொழியை நிறைவேற்றும் பொருட்டு விசேஷ காவல் படையுடன் மழைச்சாமியை ஆந்திரா அனுப்பி வைத்தது தமிழக அரசு.
சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தீவிரமடைந்து இந்தியாவும் பிரிட்டனும் தங்கள் தூதரகங்களை மூடுமளவு முற்றியது. குழந்தைகள் பிறக்கும் முன் வழக்கின் தீர்ப்பை வழங்க வேண்டுமென நீதிமன்றத்திடம் இந்தியா வேண்டியது.
குழந்தைகள் பிறக்கும் தேதியை பிரிட்டனிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட நீதிமன்றம் அதற்கு முன் தீர்ப்பளிப்பதாய் உறுதி கூறியது. தீர்ப்பை எழுத ஒரு வாரமேனும் தங்களுக்கு அவகாசம் வேண்டுமென்பதால் இரு நாடுகளும் தமது முடிவு வாதங்களை விரைவில் சமர்பிக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டது சர்வதேச நீதிமன்றத்தின் மூவர் பெஞ்ச்.
நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று குழந்தைகள் பிறக்கும் நாளுக்கு பதினைந்து தினங்களுக்கு முன் முடிவு வாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது இரு நாடுகளின் வக்கீல்களிடத்தும் துண்டுச் சீட்டு ஒன்று நீட்டப்பட்டது. எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக இரண்டு பெண்களுக்கும் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், இரண்டு பெண்களும் இரண்டு குழந்தைகளையும் பிரசவித்துவிட்டதாகவும், இரண்டு குழந்தைகளும் நலமாய் இருப்பதாகவும், இரண்டு குழந்தைகளும் தூங்கும் போது மழை பெய்யவில்லை என்றும் அது குறிப்பிட்டது.
சீட்டைப் பார்த்துவிட்டு இரு நாட்டு சட்ட நிபுணர்களும் இடைவேளை கேட்க, ஒரு மணி நேர அவகாசம் வழங்கியது நீதி மன்றம்.
அவகாசம் முடிந்து கூடிய நீதிமன்றத்தில் உரையாற்றிய இந்திய வல்லுநர் தாங்கள் வழக்கை வாபஸ் வாங்குவதாக அறிவிக்க, பிரிட்டனும் அதை ஏற்றுக்கொண்ட படியால் வழக்கை தள்ளுபடி செய்தது சர்வதேச சட்ட நீதிமன்றம்.
ஆந்திராவின் ஒரு மூலையிலிருந்த மழைச்சாமியிடம் இந்தச் செய்தி எட்டிய அன்றிரவு தூங்குமுன் தன் தாயிடம் மழைச்சாமி, “நான் ஊமையில்லை”, என்று சொல்லிவிட்டு தூங்கப்போனான். மறுநாள் அவன் கண்விழிக்கவில்லை.
செய்தி காட்டுத்தீ போல் பரவ, சகல மரியாதைகளுடன் மழைச்சாமியை அவன் சொந்தக் கிராமத்திற்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தது ஆந்திர அரசு. தமிழக அரசின் சகல அரசு மரியாதைகளுடனும் மழைச்சாமிக்கு அவன் கிராமத்தில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.
க்ளோன் செய்யப்பட்ட குழந்தைகளில் ஒரு குழந்தை பிறந்த சில தினங்களில் ‘சடன் இன்ஃபன்ட் டெத் சின்ட்ரோம்’ல் (Sudden Infant Death Syndrome - SIDS) இறந்துவிட, இன்னொரு குழந்தையைப் பெற்றவள் அதை வளர்க்கமுடியாதென்று மறுத்துவிட, செய்தியறிந்த மழைச்சாமியின் பெற்றோர் அந்தக் குழந்தையைத் தங்களிடம் சேர்த்துவிடவேண்டுமென்று வேண்டினர் தமிழக அரசை.
ராசய்யா என்று பெயர் சூட்டப்பட்டு, மழைச்சாமியின் கதை கேட்டு வளர்ந்த அந்தக் குழந்தை நான்கு வயதில், “மழைச்சாமி யாரு?” என்று கேட்டது.
சில வருடங்களில் மழைச்சாமியின் வாழ்க்கை வரலாறாக மாறி மேலும் மேலும் மெருகேற்றப்பட்டு அந்தக் கிராமத்திலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் பாடலாகப் பாடப்பட்டது. தலைமுறைகள் செல்லச்செல்ல தமிழ்நாடும், இந்தியாவும், உலகமும், மெல்ல மெல்ல மழைச்சாமியை மறந்து போனது.
சவுதி அரேபியாவின் Empty Quarter எனப்படும் பாலைவனத்தின் பெடோய்ன் மக்களின் கூடாரத்தில் ஒரு காய்ந்த பகல் பொழுதில், பிரசவித்த களைப்பில் ஒரு தாயும், பிறந்த களைப்பில் ஒரு பெண் சிசுவும் உறங்க ஆரம்பித்தனர்.
மழை பெய்யத் தொடங்கியது.
கருத்துகள்
கருத்துரையிடுக