எங்கே செல்லும் இந்தப் பாதை? (சிறுகதை)
' எங்கே செல்லும் இந்தப் பாதை ? யாரோ யாரோ அறிவார் ?' பாடல் வரிகள் அவள் மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தன லூப்பில் . சற்று ஏற்றமாக செல்லத் தொடங்கிய அந்த மலைப்பாதையில் நடப்பதற்கு சற்று சிரமமாகத் தான் இருந்தது . இதுவரை மலை வாசஸ்தலங்களுக்கு சென்றதில்லையாதலால் எல்லாமே அவளுக்குப் புதிதாக இருந்தது . கண்ணுக்கெட்டிய தூரம் வரைத் தெரியும் பச்சையும் எப்போதும் காற்றில் கலந்திருக்கும் குளிரும் மனதிற்கும் உடலிற்கும் இதமாய் இருந்தபோதிலும் அவள் ஏற்கனவே எடுத்துவிட்டிருந்த முடிவை அவைகள் மாற்றவில்லை . சட்டென்று வீசிச்சென்றச் சில்லிட்டக் காற்று அவள் போட்டிருந்த ஸ்வெட்டரையும் மீறி அவளை லேசாய் நடுங்கச் செய்தது . ' ஜாக்கெட்டைப் போட்டு வந்திருக்கலாமோ ?' என்று அவளுக்குத் தோன்றிய சிந்தனை அவளைப் புன்னகைக்கவைத்தது . ' சாகப்போகிறவள் குளிராமல் சாக வேண்டுமாம் ! ' என்று அவளையே அவள் கேலி செய்துகொண்டு நடந்தாள் . எடுத்து வைத்த அடுத்த அடியில் சட்டென்று விரிந்தது அவளை மூச்சுவிட மறக்கச் செய்த மலைக்காட்சி . ...