ஆயிஷா (முத்துக் குளிக்க வாரியளா?)

 


தமிழில் பதின்ம வயதினரை (teenagers) மையமாகக் கொண்டு எழுதப்படும் கதைகளும் புத்தகங்களும் மிக மிக அரிதாகவேக் கண்ணில் படுகின்றன. அப்படி அரிதாகக் கண்ணில் பட்ட புத்தகம் இரா. நடராசன் எழுதிய 'ஆயிஷா'.

மொத்தம் இருபத்தி நான்கு பக்கங்களே கொண்ட மிகச் சிறிய புத்தகமாக இருந்தாலும் பேசு பொருள் சற்று கனமானதுதான்.

பத்தாம் வகுப்பில் படிக்கும் மாணவி ஆயிஷாவைப் பற்றியும் அவளுடைய ஆசிரியையைப் பற்றியுமான கதையாக விரிந்தாலும் இன்னொருபுறம் அது நம்முடைய கல்விச் சூழலைப் பற்றிய வலிமிகு விமர்சனமாகவே இருக்கிறது.

கல்விக் கூடங்களில் காலெடுத்து வைக்கும் குழந்தைகள் ஒவ்வொருவரும் எத்தகைய அறிவினைச் சுமந்து வருகிறார்கள், அந்த அறிவை நமது கல்வி அமைப்பு கூர் தீட்டி வாள் சுழற்ற பயிற்சி அளிக்காமல் எப்படி மழுங்கடித்து மதிப்பெண் எனும் உறைக்குள் திணிக்கிறது என்பதாக கதையோட்டத்தின் ஊடவே சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.

கதை கொஞ்சம் melodramatic ஆன ஒன்று தான். ஆரம்ப வரிகளை வாசிக்கும் போதே முடிவு என்னவாக இருக்கும் என்று ஊகித்துவிடக்கூடிய கதையோட்டம் தான். ஆனாலும் வாசித்து முடிக்கையில் மனம் கனப்பதைத் தடுக்க இயலாமல்தான் போகிறது.

ஏப்ரல் 2005-ல் வெளியான இதன் முதல் பதிப்பு ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகியிருப்பதிலிருந்தேத் தெரிந்து கொள்ளலாம் ஆயிஷாவின் மேல் உள்ள அபிமானத்தை. இந்தப் புத்தகம் ஏற்படுத்தியத் தாக்கத்தால் இதன் ஆசிரியர் அதன் பின் 'ஆயிஷா நடராசன்' என்றே அறியப்படுகிறார்.

பின் அட்டையில் டாக்டர் ஆர். ராமானுஜம் இப்படிக் கூறுகிறார்...

இந்தக் கதையில் வரும் ஆயிஷா அவ்வளவு சுலபமாக எதையும் நம்பிவிடமாட்டாள். கேள்விகளைக் கேட்டு பூரணமாக விளக்கம் தேடுபவள். ஆயிஷாவின் அறிவுத்தாகம் ஆசிரியர்களுக்கு எரிச்சலைத்தான் ஊட்டுகிறது. தாகம் இருந்தாலும் கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகள் எத்தனையோ. அவர்களுக்கும் இந்தக் கதையில் வரும் ஆசிரியை போன்ற உறுதுணை கிடைக்க வேண்டும்.

எல்லா ஆசிரியர்களும் எல்லாக் குழந்தைகளுக்கும் என்றென்றும் உறுதுணையாக இருக்கட்டும் இன்றைய மின்னணு திரைகளுக்கு முன் ஒடுங்கிப் போன நம் மாணவர்கள் அனைவருக்கும்.


புத்தகம்: ஆயிஷா - ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை
ஆசிரியர்: இரா. நடராசன்
பதிப்பகம்: Books For Children, Imprint of Bharathi Puthakaalayam, Chennai - 600018


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PIPER (பொதிந்திருக்கும் பவளங்கள்)

ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - V

ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - II