நாவாய் ஒப்பந்தம் - III

 


மிஸ்டர் ஜோசப் ஹாரிசன் எங்களை ரயில் நிலயத்திற்குக் கொண்டு விட்டதும் நாங்கள் லண்டனுக்கு போர்ட்ஸ்மவுத் (Portsmounth) ரயிலில் திரும்பினோம். ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த ஹோம்ஸ், க்ளாப்ஹம் (Clapham) ஜங்க்ஷனை அடையும் வரை மௌனமாய் இருந்தார்.

"லண்டனுக்கு இந்த மாதிரி உயரே செல்லும் ரயில் தடங்கள் ஒன்றினில் பயணிப்பது என்பது எப்போதுமே ஒரு சந்தோஷமான சமாச்சாரம், வாட்சன்", என்றார்.

வெளியேத் தெரியும் அழுக்குப் படிந்தக் கட்டிடங்களின் காட்சியைப் பார்த்து ஹோம்ஸ் ஏதேனும் விளையாட்டாய் சொல்லுகிறாரோ என்று நினைத்தேன். என் முகபாவனையைப் பார்த்துவிட்டு அவரே விளக்கமளித்தார்.

"அந்தக் கூரைகளுக்கு மேல் உயர்ந்து நிற்கும் அந்தத் தனித் தனிக் கட்டிடங்களைப் பாரும்".

"உறைவிடப் பள்ளிகள்".

"இல்லை, வாட்சன். அவைகள் வெறும் உறைவிடப் பள்ளிகள் அல்ல, அவை கலங்கரை விளக்கங்கள். எதிர்காலத்தின் நம்பிக்கைச் சுடர்கள் அங்கிருந்து தானே தோன்றப்போகின்றன!" என்றவர், "அந்த பெல்ப்ஸ் மனிதன் குடிப்பதில்லை என்று நினைக்கிறேன்", என்றார்.

"நானும் அப்படித் தான் நினைக்கிறேன்".

"எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. பாவம்! பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறான் அவன். நம்மால் கரை சேர்க்க முடியுமா என்றுத் தெரியவில்லை. அந்தப் பெண் மிஸ். ஹாரிசனைப் பற்றி என்ன நினைக்கிறீர்?"

"திடமான குணமுள்ளவள் போல் தோன்றுகிறாள்".

"ஆம். நல்ல மாதிரி என்று நினைக்கிறேன். நான் தவறாக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. அவளும் அவள் சகோதரனும் மட்டும் தான் அவர்கள் பெற்றோர்களுக்குப் பிள்ளைகள். அவர்களுடைய தந்தை நார்தம்பர்லாண்டில் (Northumberland) ஒரு இரும்புத் தொழிற்சாலை வைத்திருக்கிறார். பெர்சி அங்கே ஏதோ விஷயமாக சென்றிருந்த போது அவளைப் பார்த்திருக்கிறான். திருமண விருப்பத்தையும் தெரிவித்திருக்கிறான். பெர்சியினுடைய பெற்றோரைப் பார்ப்பதற்காக இங்கே வந்திருக்கிறாள் மிஸ். ஹாரிசன். துணைக்கு அவள் சகோதரனும் வந்திருக்கிறான். வந்த இடத்தில் இந்த சம்பவம் நடைபெறவும், பெர்சியைக் கவனித்துக்கொள்ள இங்கேயேத் தங்கிவிட்டாள் அவள். வந்த இடம் மிகவும் வசதியாகப் போய்விட்டதால் அவள் சகோதரன் ஜோசப் ஹாரிசனும் அவளுடனேயேத் தங்கிவிட்டான். தனியாக சில விசாரணைகள் மேற்கொண்டேன் இவர்களைப் பற்றி. இனியும் விவரங்கள் சேகரிக்க வேண்டும். இன்றைய தினம் முழுதும் விசாரணைகளுக்கானது". 

"என் பிராக்டிஸ் -", என்று நான் ஆரம்பித்தேன்.

"ஓ! என்னுடைய கேஸ்களை விட உம்முடைய கேஸ்கள் சுவாரஸ்யமாக இருந்தால் - ", என்றார் ஹோம்ஸ் சற்றே எரிச்சலான தொனியில்.

"இப்போது நோயாளிகளும் நோய்களும் அவ்வளவாக இல்லாத காலமாதலால் என்னுடைய பிராக்டிஸ் நான் இல்லாமல் ஒன்றிரண்டு நாட்களுக்குத் தாராளமாய் இருக்கும் என்று சொல்ல வந்தேன்", என்றேன்.

"சபாஷ்!" என்றார் எரிச்சல் தணிந்து முகமலர்ச்சியுடன். "அப்படியெனில் இருவரும் சேர்ந்தே செல்வோம் மிஸ்டர். ஃபோர்ப்ஸைப் பார்ப்பதற்கு. கேஸை எந்தப் பக்கம் இருந்து அணுக வேண்டும் என்று அவர் ஏதேனும் குறிப்புகள் தரலாம்".

"ஏதோ தடயம் உங்களிடம் இருப்பதாகக் கூறினீர்கள்?"

"ஹூம் … ஒன்றல்ல, பல தடயங்கள் இருக்கின்றன. ஆனால் அவை எந்த அளவு உபயோகமானவை என்பதை விசாரணைகள் மூலம் தான் உறுதிப்படுத்த முடியும். குறிக்கோளில்லாதக் குற்றத்தைத் துப்பு துலக்குவது தான் மிகவும் கடினமான ஒன்று. ஆனால் இந்தக் குற்றம் அப்படிப்பட்டதல்ல. இந்தத் திருட்டினால் யாருக்கு லாபம்? பிரெஞ்சுத் தூதர், ரஷியத் தூதர், அப்புறம் யார் இதை இவர்கள் இருவரில் ஒருவருக்கு விற்கிறார்களோ அவர்கள், கடைசியாக லார்ட் ஹோல்ட்ஹர்ஸ்ட்".

"லார்ட் ஹோல்ட்ஹர்ஸ்ட்!"

"சில சமயங்களில் ஒரு அரசியல்வாதி இம்மாதிரியான ஒரு ஆவணம் சந்தர்ப்பவசமாகக் காணாமல் போனால் மிகவும் வருந்த நேராத நிலையில் இருக்கலாம்".

"லார்ட் ஹோல்ட்ஹர்ஸ்ட் போல் ஒரு நேர்மையான அரசியல்வாதியா?"

"அதுவும் ஒரு சாத்தியம் தான், வாட்சன். எதையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. இன்றைக்கு அந்த நேர்மையான அரசியல்வாதியை நேரில் சந்தித்து அவரிடமிருந்து ஏதேனும் தகவல்கள் கிடைக்கிறதாவென்று பார்ப்போம். நான் ஏற்கனவே சில விசாரணைகளை முடுக்கிவிட்டிருக்கிறேன்".

"அதற்குள்ளாகவா?"

"வோக்கிங் ஸ்டேஷனிலிருந்து எல்லா மாலை நாளிதழ்களுக்கும் இந்தத் தந்திகளை அனுப்பிவிட்டேன். இந்த விளம்பரம் அவை எல்லாவற்றிலும் இன்று வெளிவரும்", என்றபடி ஒரு நோட்டுப்புத்தகத்திலிருந்துக் கிழித்தத் துண்டுக் காகிதத்தைக் காட்டினார்.    

அதில் பென்சிலால் எழுதியிருந்தது.

"£10 சன்மானம். மே 23-ஆம் தேதி இரவு 10.15 மணிக்கு வெளியுறவுத் துறை அலுவலகத்தின் சார்ல்ஸ் தெரு வாசலிலோ அதற்கு அருகிலோ வாடிக்கையாளரை இறக்கிவிட்ட வாடகை வண்டியின் எண்ணைத்  தருவோருக்கு. தொடர்பு: 221B  பேக்கர் தெரு."

"திருடன் வாடகை வண்டியில் தான் வந்தான் என்று உறுதியாக நம்புகிறீர்களா?"

"இல்லையென்றாலும் பாதகமில்லை. மிஸ்டர். பெல்ப்ஸ் சொன்னது போல் அறையிலோ அல்லது வெளியே உள்ள பாதைகளிலோ ஒளிவதற்கு இடமே இல்லையென்றால் திருடன் நிச்சயம் வெளியே இருந்து தான் வந்திருக்கவேண்டும். அப்படி வந்திருந்தால், அப்படி ஒரு மழை நாளில் தரையில் எந்த விதத் தடமும் அவன் விட்டுச் செல்லவில்லையென்றால், அவன் வண்டியில் தான் வந்திருக்க வேண்டும் என்பது சரியான ஊகமாகவே இருக்கவேண்டும். திருட்டு நடந்த சில நிமிடங்களிலேயே அந்த வெளிர் பழுப்புத் தரையை அவர்கள் சோதனை செய்தார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்".

"அப்படிப் பார்க்கும் போது வண்டியில் வந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தான் தோன்றுகிறது".

"நான் கூறிய தடயங்களில் இதுவும் ஒன்று. நமக்குப் பின்பற்றிச் செல்ல  மேலும் இதிலிருந்து ஏதேனும் கிடைக்கலாம். அப்புறம் இருக்கவே இருக்கிறது அந்த அழைப்பு மணி - இது தான் இந்தக் கேஸின் மிக தனித்துவமான அம்சம். அந்த அழைப்பு மணி ஏன் ஒலிக்கவேண்டும்? திருடன் வேண்டுமென்றே அதை ஒலித்தானா? இல்லை அந்தத் திருடனுடன் இருந்த மற்றொரு நபர் திருட்டை தடுக்க வேண்டி மணியை இழுத்தார்களா? இல்லை அது தற்செயலாய் நிகழ்ந்ததா? இல்லை - ?" என்ற ஹோம்ஸ் மறுபடி ஆழ்ந்த அமைதியில் மூழ்கினார். அவரின் ஒவ்வொரு மனநிலையையும் செய்கையையும் நன்கறிந்த எனக்கு அவருக்கு வேறு ஏதோ ஒரு சாத்தியக்கூறு தோன்றிவிட்டது என்று தெரிந்தது.

ஸ்டேஷனை அடைந்த போது மதியம் மூன்று இருபது ஆகிவிட்டபடியால் அவசரமாய் உணவை முடித்துக்கொண்டு ஸ்காட்லாண்ட் யார்ட் சென்றடைந்தோம். ஹோம்ஸ் ஏற்கனவே ஃபோர்ப்ஸ்க்கு நாங்கள் வருவதாய் தகவல் அனுப்பிவிட்டபடியால் அவர் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார். சிறிய உருவத்தினரான அவர் முகத்தில் ஒரு கடுகடுப்புடன் எங்களை வரவேற்றார்.

"உங்கள் துப்பறியும் முறைகளைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், மிஸ்டர். ஹோம்ஸ். போலீஸிடமிருந்து எல்லாத் தகவல்களையும் நீங்கள் வாங்கிக் கொண்டு பின் நீங்களே கேஸை முடித்துவிட்டு எங்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவீர்கள்", என்றார் குரலில் எரிச்சலுடன். 


"நீங்கள் நினைப்பதற்கு மாறாக என்னுடைய கடந்த ஐம்பத்தி மூன்று கேஸ்களில் நான்கில் மட்டும் தான் என்னுடைய பெயர் சம்பந்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள நாற்பத்தி ஒன்பதில் எல்லாப் புகழும் போலீஸைத்தான் அடைந்துள்ளது. உங்களின்  இளவயதினாலும்  அனுபவமின்மையினாலும் உங்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் தொழிலில் நீங்கள் முன்னேற வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் என்னுடன்  இணைந்து வேலை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், எனக்கு எதிராய் அல்ல", என்றார் ஹோம்ஸ்.

சட்டென்று தன்னுடைய போக்கையும் தொனியையும் மாற்றிக் கொண்ட ஃபோர்ப்ஸ், "ஏதேனும் குறிப்பு கிடைத்தால் நன்றாய் இருக்கும். இதுவரையும் எதுவும் கிடைக்கவில்லை இந்தக் கேஸில்", என்றார்.

  "இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்?"

"அலுவலக உதவியாளர் டான்ஜி பின்தொடரப்பட்டார். ராணுவத்தை விட்டு அவர் நற்பெயருடனேயே விலகியுள்ளார். அவருக்கு எதிராய் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அவருடைய மனைவி அப்படியல்ல. இந்த விஷயத்தைப் பற்றிக் கூடுதல் விவரங்கள் அந்தப் பெண்மணிக்குத் தெரிந்திருக்கலாம் என்பது என் சந்தேகம்".

"அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்தீர்களா?"

"பெண் போலீஸ் ஒருவரை அனுப்பினோம். நன்றாகக் குடிக்கும் பழக்கம் உண்டு மிஸஸ். டான்ஜிக்கு. முழு போதையில் அவர் இருந்த போது இரு முறை இந்தப் பெண் போலீஸ் அவருடைய வாயைக் கிளறியும் எதுவும் சிக்கவில்லை".

 

"அவர்கள் வீட்டிற்குக் கடன்காரர்கள் வந்ததாகக் கேள்விப்பட்டேன்".

"ஆம். ஆனால் கடனெல்லாம் பைசல் செய்துவிட்டார்கள்".

"அதற்கான பணம் எங்கிருந்து வந்தது?"

"அதில் எதுவும் பிரச்னை இல்லை. அவருடைய ஓய்வூதியம் வரவேண்டிய பாக்கி இருந்தது. அதிலிருந்து தான் கொடுத்துள்ளார்கள். மற்றபடி அவர்களிடம் பணம் புரள்வது போல் தெரியவில்லை".

"மிஸ்டர். பெல்ப்ஸ் காபிக்காக அழைப்பு மணியை ஒலித்தபோது இவர் ஏன் அதற்கு பதிலளித்தார் என்று ஏதேனும் சொன்னாரா?"

"அவருடைய கணவர் மிகவும் களைத்து இருந்ததால் சற்றே அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டித் தான் வந்ததாகச் சொன்னார்".

"அதில் உண்மை இருக்க வாய்ப்பிருக்கிறது. சற்று நேரம் கழித்து பெல்ப்ஸ் சென்று அவரைப் பார்த்தபோது அவர் உட்கார்ந்தபடியேத் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறினார். ஆக மொத்தம் இந்த இருவருக்கும் எதிராக வேறு எதுவும் இல்லை அந்தப் பெண்மணியின் பழக்கவழக்கங்களைத் தவிர", என்ற ஹோம்ஸ் தொடர்ந்தார், "அந்தப் பெண் ஏன் அன்றிரவு போலீஸ்காரரின் கவனத்தை ஈர்க்கும் அளவு அவ்வளவு அவசரமாய் அலுவலகத்தை விட்டு வெளியேறினார் என்று கேட்டீர்களா?"

"வழக்கத்தை விட அதிகத் தாமதமாகிவிட்டதால் விரைந்து வீட்டிற்கு செல்ல என்று கூறினார்".

"அவருக்குப் பின் இருபது நிமிடங்கள் கழித்து நீங்களும் மிஸ்டர். பெல்ப்ஸ்ம் கிளம்பியும் அவருக்கு முன்னால் நீங்கள் இருவரும் அவர் வீட்டை அடைந்துவிட்டீர்கள் என்பதை சுட்டிக் காட்டினீர்களா?"

"அரசுப் பேருந்திற்கும் அமர்த்தப்பட்ட வாடகை வண்டிக்கும் இருக்கும் வித்தியாசம் அது என்கிறார் அவர்".

"வீட்டிற்கு வந்ததும் ஏன் பின்கட்டிற்கு ஓடினார் என்பதைத் தெளிவுபடுத்தினாரா?"

"அங்கே தான் கடன்காரர்களுக்குக் கொடுப்பதற்கான பணத்தை வைத்திருந்ததாகக் கூறினார்".

"ஹும் ... எல்லாவற்றிற்கும் விடை வைத்திருக்கிறார் அந்தப் பெண்மணி", என்ற ஹோம்ஸ், "அவர் வெளியே வரும் போது வழியில் யாரையேனும் பார்த்ததாகக் கூறினாரா?"

"போலீஸ்காரரைத் தவிர வேறு யாரையும் பார்க்கவில்லை என்றார்".

"நிரம்பவேத் தெளிவாக அவரை குறுக்கு விசாரணை செய்திருக்கிறீர்கள். வேறு என்ன செய்தீர்கள்?"

"கோரோட்டையும் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறோம் இந்த ஒன்பது வாரங்களாக. ஆனால் அவருக்கு எதிராகவும் எதுவும் கிடைக்கவில்லை இதுவரை".

"வேறு ஏதேனும்?"

"இந்தக் கேஸில் மேலும் முன்னேறிச் செல்ல வேறு ஆதாரங்கள், தடயங்கள் என்று எவையும் இல்லை ".

"அந்த அழைப்பு மணி எப்படி ஒலித்தது என்று உங்களுக்கு ஏதேனும் ஊகம் இருக்கிறதா?"

"அதைப் பற்றி சுத்தமாய் எனக்கு எந்த யோசனையும் வரவில்லை, மிஸ்டர். ஹோம்ஸ். ரொம்பவேத் துணிந்தத் திருடனாய் இருக்கவேண்டும் அப்படி அந்த மணியை ஒலிப்பதற்கு".

"விசித்திரமான செயல் என்று ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்", என்று கூறிய ஹோம்ஸ், "மிக்க நன்றி நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்திற்கும். திருடனை உங்கள் கையில் ஒப்படைக்க முடிந்தால் என்னிடம் இருந்து உங்களுக்குத் தகவல் வரும். வாரும், வாட்சன்", என்று விடைபெற்றுக் கிளம்பினார்.

"இப்போது எங்கே போகிறோம்?" என்று கேட்டேன் ஸ்காட்லாண்ட் யார்டை விட்டு வெளியே வந்தபடி.

"காபினட் அமைச்சரும் வருங்கால பிரதமருமான லார்ட் ஹோல்டுஹர்ஸ்ட்டை நேரில் சென்று விசாரிக்கப் போகிறோம்", என்றார் ஹோம்ஸ்.

தொடரும் …





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PIPER (பொதிந்திருக்கும் பவளங்கள்)

ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - V

ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - II