நாவாய் ஒப்பந்தம் - IV

 


டவுனிங் தெருவில் (Downing Street) அவருடைய அறையில் தான் இருந்தார் லார்ட் ஹோல்டுஹர்ஸ்ட். தன்னுடைய பெயர் தாங்கிய சீட்டை ஹோம்ஸ் அவருக்கு அனுப்பியதும் அவர் உடனேயே எங்களைப் பார்க்க சம்மதித்தார். மிகுந்த மரியாதையுடன் எங்களை வரவேற்ற அவர், கணப்பு இடத்தின் இருபுறமும் போடப்பட்டிருந்த வசதியான நாற்காலிகள் இரண்டில் எங்களை அமரச் செய்தார். சற்றே மெலிந்த உயரமான உருவத்தைக் கொண்ட அவர் எங்கள் இருவருக்கும் இடையில் நின்றுகொண்டார். புத்தி கூர்மையையும் ஆழ்ந்த சிந்தனையையும் பறைசாற்றும் அவருடைய முகத்தைப் பார்க்கும் போது அரிதாகவேக் காணக் கிடைக்கின்ற உண்மையிலேயே உன்னதமான உயர்குடிப் பிரபுக்களில் ஒருவராகத் தெரிந்தார்.

"உங்கள் பெயர் எனக்குப் பரிச்சயமான ஒன்று தான், மிஸ்டர். ஹோம்ஸ். நீங்கள் வந்திருக்கும் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதையும் என்னால் யூகிக்க முடிகிறது. உங்கள் ஆர்வத்தைத் தூண்டும் படி இந்த அலுவலகத்தில் ஒரே ஒரு விஷயம் தான் நடந்துள்ளது. நீங்கள் யாரின் சார்பாக இந்த விசாரணையில் இறங்கியுள்ளீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?" என்றார் லார்ட் ஹோல்டுஹர்ஸ்ட்.

"மிஸ்டர். பெர்சி பெல்ப்ஸின் சார்பாக".

"ஆ... என் மருமகன்! அவன் என் மருமகனாய் இருப்பதனாலேயே அவனுக்கு எந்த வித சலுகையையும் காட்ட முடியாத சூழலில் நான் இருக்கிறேன், மிஸ்டர். ஹோம்ஸ். நடந்த அந்த சம்பவம் அவனுடைய வாழ்விலும் வேலையிலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தான் என் அனுமானம்".

"ஆனால் அந்த ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால்?"

"ஆ... அப்படியெனில் நிலைமை வேறாக இருக்கும்".

"உங்களிடம் ஒன்றிரண்டு கேள்விகள் கேட்க விரும்புகிறேன், லார்ட் ஹோல்டுஹர்ஸ்ட்".

"என்னால் முடிந்த பதில்களைத் தருவதற்குத் தயாராய் இருக்கிறேன்".

"இந்த அறையில் தான் நீங்கள் பெர்சி பெல்ப்ஸிடம் ஆவணத்தை நகலெடுக்கும் வேலையைக் கொடுத்தீர்களா?"

"ஆம்".

"அப்படியெனில் நீங்கள் பேசியதை ஒட்டுக் கேட்கும் வாய்ப்பு இல்லை".

"அந்தப் பேச்சுக்கே இடமில்லை".

"ஆவணத்தை நகலெடுக்கும் வேலையை யாரிடமாவது கொடுக்கப்போவதை வேறு யாரிடமாவது சொன்னீர்களா?"

"இல்லவே இல்லை".

"நிச்சயமாய்?"

"ஆணித்தரமாய்".

"ஹூம்… நீங்களும் சொல்லவில்லை … மிஸ்டர். பெல்ப்ஸும் சொல்லவில்லை என்றால் வேறு யாருக்கும் இந்த ஆவணத்தைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படியென்றால் திருடன் தற்செயலாகத்தான் அந்த ஆவணத்தைப் பார்த்திருக்கிறான். அதை எடுப்பதற்கான வாய்ப்பு இருப்பதை பார்த்ததும் எடுத்துக்கொண்டுவிட்டான்".

"இந்த யூகங்கள் எல்லாம் என் எல்லைக்கு அப்பாற்பட்டவை, மிஸ்டர். ஹோம்ஸ்", என்றார் லார்ட் ஹோல்டுஹர்ஸ்ட் புன்னகையுடன்.

ஹோம்ஸ் ஒரு நிமிடம் சிந்தித்தார்.

"இன்னொரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் கேட்கவேண்டும்", என்றார். "இந்த ஆவணத்தின் உள்ளடக்கங்கள் வெளியே தெரியவந்தால் மோசமான சில விளைவுகள் உண்டாகும் என்று நீங்கள் அஞ்சுவதாகக் கேள்விப்பட்டேன்".

"மிக மிக மோசமான விளைவுகள்", என்றார் லார்ட் ஹோல்டுஹர்ஸ்ட் சட்டென்று இருண்ட முகத்துடன்.

"அந்த விளைவுகள் ஏதேனும் நடந்துள்ளனவா?"

"இன்னும் இல்லை".

"அந்த ஆவணம் ஃபிரெஞ்சுத் தூதரகத்துக்கோ ரஷ்யத் தூதரகத்துக்கோ சென்று சேர்ந்திருந்தால் உங்களுக்கு அது தெரியவருமல்லவா?"

"கண்டிப்பாய்".

"கிட்டத்தட்ட பத்து வாரங்கள் கடந்தபின்னும் அப்படிப்பட்ட செய்தி எதுவும் உங்களை வந்தடையவில்லை என்றால் ஆவணம் இந்த இரண்டு இடங்களிலும் சென்று சேரவில்லை என்று தானே அர்த்தம்?" என்றார் ஹோம்ஸ்.

லார்ட் ஹோல்டுஹர்ஸ்ட் பதிலுக்குத் தன் தோள்களை குலுக்கினார் இருக்கலாம் என்பதாக.

"ஒப்பந்த்தத்தைத் திருடியவன் சட்டம் மாட்டி வீட்டில் தொங்கவிடுவதற்காக அதைத் திருடவில்லை, மிஸ்டர். ஹோம்ஸ்", என்றார் லார்ட் ஹோல்டுஹர்ஸ்ட்.

"ஒருவேளை நல்ல விலை கிடைக்கட்டும் என்று காத்திருக்கிறானோ என்னவோ?" என்று கேட்டார் ஹோம்ஸ்.

"இதற்கு மேலும் அவன் காத்திருந்தால் அவனுக்கு எந்த விலையும் கிடைக்காமலேப்  போய்விடும். இன்னும் சில மாதங்களில் இந்த ஆவணத்தின் தகவல்கள் அனைத்தும் பொது வெளியில் வந்துவிடும்".

"ஆ ... இது மிகவும் முக்கியமானத் தகவல்", என்ற ஹோம்ஸ் தொடர்ந்தார், "ஒரு வேளை திருடனுக்குத் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போயிருந்தால் -"

"மூளைக் காய்ச்சலின் தாக்குதல் போல் என்கிறீர்களா?" என்றார் லார்ட் ஹோல்டுஹர்ஸ்ட் ஹோம்ஸை கூர்மையாய் ஒரு பார்வை பார்த்து.

"அப்படி நான் சொல்லவில்லை", என்று அசைக்க முடியாத அமைதியுடன் சொன்ன ஹோம்ஸ் எழுந்தார்.

"நாங்கள் விடை பெறுகிறோம், லார்ட் ஹோல்டுஹர்ஸ்ட். உங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்கு நீங்கள் நிறையவே ஒதுக்கிவிட்டீர்கள். குட் டே", என்றபடி விடைபெற்றார் ஹோம்ஸ்.

"திருடன் யாராயிருந்தாலும் அவனைக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு வெற்றி உண்டாகட்டும்", என்று வணங்கி விடைகொடுத்தார் லார்ட் ஹோல்டுஹர்ஸ்ட்.

"நல்ல மனிதர்", என்றார் ஹோம்ஸ் வெளியே வந்த பின். "ஆனால் சிறிது கஷ்ட காலத்தில் இருக்கிறார். அவருடைய பூட்ஸைப் பார்த்தீரா? புதியது வாங்க முடியாமல் பழையதை செப்பனிட்டுப் போட்டிருந்தார். பணம் குறைவாகவும் கடமைகள் நிறையவும் இருக்கக்கூடிய கனவான்", என்று ஹோம்ஸ் வழக்கம் போல் அவருடைய பாணியில் லார்ட் ஹோல்டுஹர்ஸ்ட்டைப் பற்றி விவரித்தார்.

"வாட்சன், இன்று நமக்கு இவ்வளவு தான் வேலை. என்னுடைய வண்டி விளம்பரத்திற்கு ஏதேனும் பதில் வந்தாலொழிய வேறு வேலை இல்லை. நாம் நேற்று சென்ற அதே ரயிலிலேயே நீர் நாளை என்னுடன் வோக்கிங் வர முடிந்தால் நலம்", என்று ஹோம்ஸ் சொன்னதால் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு நான் வீடு திரும்பினேன்.

தொடரும் …  



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PIPER (பொதிந்திருக்கும் பவளங்கள்)

ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - V

ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - II