நாவாய் ஒப்பந்தம் - V


அதே போலவே மறு நாள் நாங்கள் வோக்கிங் சென்றோம். ஒரு செவ்விந்தியனைப் போன்று முகத்தில் எந்தப் பாவனையும் இல்லாமல் அவர் பயணம் செய்ததால் அவருடைய முகத்தைப் பார்த்து என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை கேஸ் எந்தத் திசையில் போய்க்கொண்டிருக்கிறதென்று. ஆனால் ரயிலில் அவர் அல்ஃபோன்ஸ்  பெர்ட்டிலான் (Alphonse Bertillon) எனும் ஃபிரெஞ்சுக்காரர் கண்டுபிடித்த மனிதர்களின் உடல் கூறுகளையும் அங்க அளவுகளையும் கொண்டு அவர்களை வகைப்படுத்தும் குறியீடைப் பற்றி  மிகவும் ஆர்வமாகப் பேசிக்கொண்டு வந்ததாக ஞாபகம்.

மிஸ். ஹாரிசானின் கவனிப்பிலேயே இன்னமும் இருந்த பெர்சி அன்று நாங்கள் பார்த்ததை விட சற்றுத் தெளிவாக இருந்தான். எங்களை பார்த்ததும் சிரமமின்றி எழுந்து எங்களை வரவேற்றான்.

"ஏதேனும் செய்தி உண்டா?" என்று ஆர்வமாய் கேட்டான்.

"எதுவும் இருக்காது என்று நான் சொல்லிச் சென்றது போல் செய்தி எதுவும் இல்லை, மிஸ்டர். பெல்ப்ஸ்", என்றார் ஹோம்ஸ். "ஃபோர்ப்ஸையும்  உங்கள் மாமாவையும் பார்த்தேன். மேலும் ஒன்றிரண்டு விசாரணைகளையும் முடுக்கி விட்டிருக்கிறேன். இவற்றிலிருந்து ஏதேனும் கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம்".

"நீங்கள் நம்பிக்கை இழக்கவில்லையே?"

"நிச்சயமாய் இல்லை".

"காட் ப்ளெஸ் யூ, மிஸ்டர். ஹோம்ஸ்", என்றாள் மிஸ். ஹாரிசன், உணர்ச்சிவசப்பட்டவளாய். "தைரியத்தையும் பொறுமையையும் நாம் கடைபிடித்தால் உண்மை ஒரு நாள் வெளியே வந்து தானே ஆகவேண்டும்!"

மறுபடியும் சோபாவில் அமர்ந்து கொண்டே, "நீங்கள் எங்களிடம் சொன்னதை விட நாங்கள் உங்களிடம் சொல்வதற்கு விஷயங்கள் நிறையவே இருக்கின்றன", என்றான் பெல்ப்ஸ்.

"அப்படி ஏதேனும் உங்களிடம் இருக்கும் என்று நினைத்தேன்", என்றார் ஹோம்ஸ்.

"நேற்றிரவு ஒரு சம்பவம் நடந்தது", என்றவன் அதை நினைவு கூர்ந்ததில் ஏற்பட்ட அச்சத்தில் முகம் இருண்டான். "என்னைச் சுற்றி ஏதோ மிக பயங்கர சதிவேலை நடக்கிறதென்று நினைக்கிறேன், மிஸ்டர். ஹோம்ஸ். என் வாழ்வை மட்டுமல்ல என் உயிரையும் பறிப்பது தான் அந்தச் சதியின் நோக்கமாக இருக்க வேண்டும்", என்றான்.

"ஹா! என்ன நடந்தது?" என்று ஆர்வத்துடன் கேட்டார் ஹோம்ஸ்.

"எனக்குத் தெரிந்தவரை இந்த உலகத்தில் எனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை. ஆனால் நேற்றிரவு நடந்த சம்பவத்தை வைத்துப் பார்க்கும் போது வேறு எப்படியும் நினைக்கத் தோன்றவில்லை".

"விரிவாக சொல்லுங்கள்".

"நேற்றிரவு தான் முதன் முதலாக என்னைக் கவனித்துக்கொள்ளும் செவிலி இல்லாமல் இரவில் உறங்கச் சென்றேன். உடல் நிலை நன்றாகவேத் தேறி இருந்ததால் இரவில் துணையின்றி நானாக உறங்கலாம் என்று அவரை அனுப்பிவிட்டுத் தனியே உறங்கினேன். ஆனாலும் இரவு விளக்கு ஒன்றை எரிய விட்டுவிட்டேத் தூங்கினேன். இரவு இரண்டு மணி இருக்கும் என்று நினைக்கிறேன். லேசான தூக்கத்தில் தான் இருந்ததால் எதோ சுரண்டும் சத்தம் கேட்டது போல் இருக்கவே திடுக்கென்று விழித்துக்கொண்டேன். எலி ஏதேனும் எங்கேனும் சுரண்டுகிறதோவென்று சற்று நேரம் கவனித்துப் பார்த்தேன். ஆனால் சத்தம் ஜன்னலில் இருந்து வருவது போல் இருந்தது. சற்று நேரத்தில் சுரண்டல் சத்தம் நின்று 'கிளிக்' என்று ஒரு சத்தம் கேட்டது. இப்போது எனக்குத் தெளிவாய் புரிந்துவிட்டது சத்தம் எலியினால் அல்ல, யாரோ ஜன்னல் தாழ்ப்பாளை திறப்பதற்கு இடுக்குக்குள் எதையோ விட்டு நெம்பி, பின் தாளை விலக்கும் சத்தம் அது என்று.

பின்னர் ஒரு பத்து நிமிடங்களுக்கு எந்த சத்தமும் இல்லை, மிஸ்டர். ஹோம்ஸ். ஜன்னலைத் திறந்தவன் அந்த சத்தத்தில் நான் முழித்துவிட்டேனாவென்று பார்ப்பதற்குக் காத்திருந்தது போல் இருந்தது. அதன் பின் லேசான கிரீச்சென்ற சத்தம் கேட்டு ஜன்னல் கதவு லேசாய் திறக்க ஆரம்பித்தது. அதற்கு மேல் என்னால் பொறுமையாய் இருக்க முடியவில்லை, மிஸ்டர். ஹோம்ஸ். தடாலென்று எழுந்து ஜன்னல் கதவுகளை நானே விரியத் திறந்தேன். இருட்டினுள் யாரோ ஒரு மனிதன் ஜன்னலுக்கடியில் ஒளிந்திருந்தான். யாரென்று என்னால் பார்க்க முடியவில்லை. என்னைப் பார்த்ததும் சரேலென்று ஓடிவிட்டான். முகத்தின் அடிப்பாகத்தைச் சுற்றி ஏதோ போர்வை போல் மூடியிருந்தான். அதனால் யாரென்று அடையாளம் காண முடியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயமாய்த் தெரிந்தது. கையில் நீளக் கத்தி ஒன்று வைத்திருந்தான். அவன் ஓடும் போது நிலவொளியில் அது பளிச்சிடுவதைப் பார்த்தேன்".

 


"ஆஹா...! அடுத்து என்ன செய்தீர்கள்?" என்றார் ஹோம்ஸ் ஆர்வத்துடன்.

"என் உடல்நிலை நன்றாய் இருந்திருந்தால் அவனை நான் பின்தொடர்ந்திருப்பேன், மிஸ்டர். ஹோம்ஸ். அது முடியாதபடியால், அழைப்பு மணியை இழுத்து வீட்டில் உள்ளோரை எழுப்ப முயற்சித்தேன். ஆனால் அழைப்பு மணி சமையல் அறையில் உள்ளது. வேலையாட்கள் அனைவரும் மாடியில் உறங்குவார்கள். அதனால் அவர்கள் வருவதற்குத் தாமதமாயிற்று. ஆகையால் சத்தமாகக் கத்தினேன், உதவி கேட்டு. அந்த சத்தத்தில் ஜோசப் இறங்கி ஓடி வந்தான் மாடியிலிருந்து. அவன் போய் மற்றவர்களை எழுப்பி வர, வேலையாள் ஒருவரும் ஜோசப்பும் வெளியே சென்று தேடினார்கள். என் ஜன்னலின் வெளியே நிலத்தில் யாரோ நின்றிருந்தது போல் தடங்கள் இருந்தன. ஆனால் மழை இல்லாமல் காய்ந்து போன புல் தரையில் அந்தத் தடங்களைப் பின்தொடர முடியவில்லை. சாலையை ஒட்டி உள்ள ஓர் இடத்தில் இருக்கும் வேலியைத் தாண்டி யாரோ ஏறிக் குதிக்கும் போது வேலியை லேசாக உடைத்தத் தடயம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.  உங்களிடம் நடந்தவைகளை முதலில் சொல்லி உங்கள் அபிப்பிராயத்தைக் கேட்க வேண்டும் என்பதால் இவை எவற்றையும் நான் இன்னும் போலீசுக்குச் சொல்லவில்லை, மிஸ்டர். ஹோம்ஸ்".

எங்கள் கிளையண்ட் சொன்ன இரவு சம்பவங்கள் ஹோம்ஸிடம் ஒரு அபரிமிதமான உணர்ச்சியை ஏற்படுத்தின.  அவர் இருக்கையில் இருந்து எழுந்து அறைக்குள் இங்கும் அங்கும் வேகமாக நடந்தார்.

"பிரச்னைகள் எப்போதும் தனியாய் வருவதில்லை", என்று பெர்சி ஒரு சிறிய புன்னகையுடன் கூறினாலும் இரவு நடந்தவை அவனை நிரம்பவே கலக்கமடையச் செய்துவிட்டன என்று தெரிந்தது.

"உங்கள் பங்குக்கு நீங்கள் அவைகளை நிறையவே சந்தித்துவிட்டீர்கள்", என்ற ஹோம்ஸ், "என்னுடன் இந்த வீட்டை சுற்றி வந்துக் காட்டமுடியுமா?" என்று கேட்டார்.

"தாராளமாய். கொஞ்சம் வெயிலில் நடந்தால் எனக்கும் நல்லது. ஜோசப்பும் நம்முடன் வரட்டும்", என்றான் பெர்சி.

"நானும் வருகிறேன்", என்று மிஸ். ஹாரிசன் கூறவும் ஹோம்ஸ், "இல்லையில்லை. நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு அசையாமல் இங்கேயே அமர்ந்திருங்கள்", என்று தடுத்து நிறுத்தினார்.

முகத்தில் தெரிந்த அப்பட்டமான அதிருப்தியுடன் மிஸ். ஹாரிசன் எழுந்த இருக்கையில் மறுபடி அமர்ந்தார். ஜோசப் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளவும் நாங்கள் நால்வரும்  அந்த அறையின் ஜன்னலின் வெளிப்பக்கம் சென்று கீழே இருக்கும் தடங்களை ஆராய்ந்தோம். யாரோ நின்றிருந்த அடையாளம் இருந்ததே தவிர கால் தடங்கள் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.   

அந்தத் தடங்களை ஒரு கணம் கூர்ந்து பார்த்த ஹோம்ஸ் தோள்களை குலுக்கிக்கொண்டு எழுந்தார். "இதிலிருந்து எதுவும் அனுமானிக்க முடியாது", என்றார்.  "திருடன் ஏன் இந்த ஜன்னலைத் தேர்ந்தெடுத்தான் என்று வீட்டைச் சுற்றி வந்து பார்ப்போம்", என்றார். வீட்டைச் சுற்றி ஒரு பார்வை பார்த்தவர், "திருடன் ஏன் அந்த வரவேற்பறையின் ஜன்னலையோ அல்லது டைனிங் ஹாலின் ஜன்னலையோ தேர்ந்தெடுக்கவில்லை? இந்த ஜன்னலை விட அவைகள் பெரிதாய் அல்லவா இருக்கின்றன", என்றார்.

"சாலையில் இருந்து பார்த்தால் அந்த இரண்டு ஜன்னல்களும் தெளிவாகத் தெரியும். இது தான் சற்று மறைவாய் இருப்பது", என்று பதிலளித்தார் ஜோசப் ஹாரிசன்.

"ஓ! சரி தான். நீங்கள் சொல்வது போல் தான் இருக்கின்றது ஜன்னல்கள் அமைப்பு", என்ற ஹோம்ஸ் அருகிலிருந்தக் கதவு ஒன்றை சுட்டிக்காட்டி, "இந்தக் கதவு எதற்காக? இதன் மூலம் அவன் உள்ளே நுழைய முயற்சித்திருக்கலாமே?" என்று கேட்டார்.

"இது வேலையாட்களுக்கானக் கதவு. இரவு அது பூட்டப்பட்டிருக்கும்", என்றான் பெர்சி.

"இதற்கு முன் இப்படி ஏதாவது நடந்திருக்கிறதா?" என்று கேட்டார் ஹோம்ஸ்.

"இல்லவே இல்லை", என்றான் பெர்சி. 

"வீட்டில் விலையுயர்ந்த சாமான்களோ வெள்ளிப் பொருட்களோ ஏதேனும் வைத்திருக்கிறீர்களா?"

"அப்படி எதுவும் இல்லை".

அதைக் கேட்ட ஹோம்ஸ் பதிலேதும் சொல்லாது தனது பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்துக் கொண்டு அசிரத்தையாக வீட்டை சுற்றி வந்தார். அவரது வழக்கத்திற்கு மாறான போக்காயிருந்தது அது.

"வேலியில் ஏதோ ஏறிக் குதித்தத் தடயம் இருப்பதாகக் கூறினீர்கள். அதைப் பார்க்கலாமா?" என்றார் ஜோசப் ஹாரிசனிடம்.

ஜோசப் வேலியில் ஒரு இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். அவர் காட்டிய இடத்தில் வேலியின் ஒரு முனை ஒடிந்துத் தொங்கிக்கொண்டிருந்தது. அதைப் பிய்த்துக்  கையில் எடுத்துப் பார்த்த ஹோம்ஸ், "இது நேற்றிரவு முறிந்தது என்று நினைக்கிறீர்களா? இதைப் பார்த்தால் பழைய முறிவு போல் தெரிகிறதே", என்றார்.

 


"இருக்கலாம்", என்றார் ஜோசப் ஹாரிசன்.

"வேலியின் மறுப்பக்கம் ஏறிக் குதித்த அடையாளம் எதுவும் இல்லை தரையில். இங்கே எதுவும் நமக்கு உதவிகரமாய் இல்லை என்றே தோன்றுகிறது. வீட்டிற்கு சென்று தான் யோசிக்க வேண்டும் இதை", என்ற ஹோம்ஸ் பெர்சியின் அறையை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினார்.

பெர்சி ஜோசப் ஹாரிசனின் கையைப் பிடித்துக்கொண்டு மெதுவாய் வர, நான் ஹோம்ஸுடன் இணைந்து வேகமாக நடந்ததில் அவர்கள் இருவரும் வருவதற்கு வெகு முன்னரே பெர்சியின் அறையை வந்தடைந்தோம்.

ஹோம்ஸ் சொன்னது போலவே இருந்த இடத்தை விட்டு அசையாமல் அமர்ந்திருந்த மிஸ். ஹாரிசனிடம் ஹோம்ஸ் தாழ்ந்த குரலில் அவசரமாய் பேசினார்.

"மிஸ். ஹாரிசன், மிக மிக முக்கியமானது இது - இந்த இடத்தை விட்டு நீங்கள் நாள் முழுதும் அசையக்கூடாது. என்ன நடந்தாலும் இந்த அறையை விட்டு நீங்கள் அகலாமல் இருக்க வேண்டும்", என்றார்.

ஆச்சர்யம் பொங்க அவரைப் பார்த்த மிஸ். ஹாரிசன், "நிச்சயமாய், மிஸ்டர். ஹோம்ஸ். நீங்கள் அப்படி செய்யவேண்டும் என்று விரும்பினால் நான் கண்டிப்பாய் உங்கள் வார்த்தைப்படியே செய்கிறேன்", என்றாள்.

"இரவு நீங்கள் உங்கள் அறைக்குத் தூங்கச் செல்லும் போது இந்த அறையைப்  பூட்டி சாவியை உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். செய்வீர்களா?" என்று இன்னுமொரு செயலைச் செய்யச் சொன்னார் ஹோம்ஸ்.

"ஆனால் பெர்சி?" என்று கேட்டாள் மிஸ். ஹாரிசன்.

"பெர்சியை நாங்கள் எங்களுடன் லண்டன் அழைத்துச் செல்கிறோம்", என்றார் ஹோம்ஸ்.

"ஓ! ஆனால் என்னவானாலும் இங்கேயே தான் நான் இருக்கவேண்டும், அப்படித்தானே?" என்றாள் மிஸ். ஹாரிசன்.

"ஆமாம். எல்லாம் அவனுடைய நன்மைக்காகத்தான். செய்வீர்களா?" என்றார் ஹோம்ஸ் அவசரமாய்.

மிஸ். ஹாரிசன் சம்மதம் என்பதற்காய் தலையை ஆட்டவும் அவர்கள் இருவரும் வந்து சேரவும் சரியாய் இருந்தது.

"ஏன், ஆன்னி, உள்ளேயே அடைந்து கிடக்கிறாய்? சற்று நேரம் வெயிலில் வரலாமல்லவா?" என்று அவள் சகோதரன் ஜோசப் கேட்க, "இல்லை, ஜோசப், கொஞ்சம் தலை வலியாய் இருக்கிறது. வெயிலை விட இந்த அறை தான் குளிர்ச்சியாய் இதமாய் இருக்கிறது", என்று பதிலளித்தாள் மிஸ் ஹாரிசன்.

"இப்போது என்ன செய்யலாமென்று உத்தேசம், மிஸ்டர். ஹோம்ஸ்?" என்றான் பெர்சி.

"ம்ம்... இந்த சிறு விஷயத்தை ஆராயப்போய் நம்முடைய முதல் விஷயத்தை நாம் மறந்துவிடக் கூடாது. நீங்கள் எங்களுடன் லண்டன் வந்தால் எங்கள் விசாரணைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்", என்றார் ஹோம்ஸ்.

"இப்பொழுதேவா?" என்று கேட்டான் பெர்சி.

"ஒரு மணி நேரத்தில் கிளம்பினால் கூட சரிதான்", என்றார் ஹோம்ஸ்.

"உடல் கொஞ்சம் தேறித் தான் இருக்கிறது. லண்டனில் என் உதவி தேவைப்படுகிறதெனில் நான் வரத் தயார்".

"நீங்கள் வருவது பேருதவியாக இருக்கும்".

"அப்படியெனில் இன்றிரவு அங்கேயேத் தங்கட்டுமா?"

"அதை நானே சொல்லலாமென்று இருந்தேன்".

"ஹா …! இன்றிரவு மறுபடியும் என் நள்ளிரவு நண்பன் வருகை புரிந்தால், அவன் குறி வைத்த பட்சி பறந்துவிட்டதை அறிவான். என்னவோ, மிஸ்டர். ஹோம்ஸ், நாங்கள் அனைவரும் உங்கள் கையில். நீங்கள் சொல்வதைக் கேட்டு அப்படியே நடக்கிறோம். என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்", என்ற பெர்சி, "ஜோசப்பையும் அழைத்துச் செல்லலாமா என்னைக் கவனித்துக் கொள்ள?" என்று கேட்டான்.

"அதற்கான அவசியமில்லை என் நண்பர் டாக்டர். வாட்சன் இருக்கும் போது. அவர் கவனித்துக்கொள்வார் உங்களை. நீங்கள் அனுமதித்தால் இங்கே மதிய உணவை உண்டுவிட்டு நாம் மூவரும் ரயிலில் லண்டன் கிளம்புவோம்" என்றார் ஹோம்ஸ்.

ஹோம்ஸ் சொன்னது போலவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மிஸ். ஹாரிசன் அறையை விட்டு வரவில்லை என்று சொல்லிவிட்டபடியால் (அவளிடம் அளிக்கப்பட்ட ஹோம்ஸின் பிரத்யேக பரிந்துரையின் பேரில்) பெர்சியுடன் நாங்கள் மட்டும் டைனிங் ஹாலில் மதிய உணவருந்தினோம். மிஸ். ஹாரிசனிடம்  ஹோம்ஸ் வைத்த ரகசிய வேண்டுகோளின் நோக்கம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. அதனால் அவர் சாதிக்கப்போவது என்னவென்றும் தெரியவில்லை, பெர்சியிடமிருந்து மிஸ். ஹாரிசனைத் தற்காலிகமாகப் பிரிப்பதைத் தவிர. ஆனாலும் பெர்சி உற்சாகமாகவே இருந்தான், சற்றே உடல்நலம் தேறியதாலும் திருடுபோன ஆவணத்தை மீட்க அவன் உதவியை ஹோம்ஸ் கேட்டதாலும். அந்த உற்சாகத்துடனே ரயில் நிலையம் சென்றோம் மூவரும். ஆனால் லண்டன் செல்லும் ரயிலில் என்னையும் பெர்சியையும் ஏற்றிவிட்ட ஹோம்ஸ், தான் வரப்போவதில்லை என்றும் வோக்கிங்கில் அவருக்கு வேலை இருப்பதாகவும் கூறினார்.

"சில விஷயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன் நான் இங்கிருந்து வருவதற்கு முன். நீங்கள் இங்கு இல்லாமலிருப்பது எனக்கு ஒரு வகையில் மிகுந்த உதவியாய் இருக்கும், மிஸ்டர். பெல்ப்ஸ். வாட்சன், லண்டன்  சென்றதும் பெர்சியை அழைத்துக்கொண்டு நேரே பேக்கர் தெருவிற்குச் சென்று இன்றிரவு அங்கேயே தங்குங்கள் இருவரும். காலியாய் இருக்கும் படுக்கை அறையை பெர்சி உபயோகப்படுத்திக் கொள்ளட்டும். நீங்கள் இருவரும் பள்ளித் தோழர்களாய் இருப்பது சௌகரியமாய் போய்விட்டது. இரவு உங்களுக்குப் பேசுவதற்கு விஷயங்கள் நிறைய இருக்கும். நாளைக் காலைச் சிற்றுண்டிக்கு நான் உங்களுடன் இருப்பேன். எட்டு மணிக்கு வாட்டர்லூ வந்தடையும் ரயில் ஒன்று உள்ளது", என்றார் ஹோம்ஸ்.

"ஆனால் நாம் லண்டனில் இணைந்து செய்ய வேண்டிய விசாரணைகள் என்னாவது?" என்றான் பெர்சி ஏமாற்றமடைந்தவனாய்.

"அதை நாளைப் பார்த்துக்கொள்ளலாம். இன்று எனக்கு இங்கே கொஞ்சம் வேலைகள் இருக்கின்றன", என்றபடி எங்களை வழியனுப்பி வைத்தார் ஹோம்ஸ்.

ரயில் நகரத் தொடங்கும் போது பெர்சி, "நாளை இரவுக்குள் நான் வந்துவிடுவேன் என்று என் வீட்டில் சொல்லிவிடுங்கள்", என்று ஹோம்ஸிடம் கூறினான்.

"ஆ! ஆனால் நான் உங்கள் வீட்டிற்குச் செல்லப்போவதில்லையே!", என்றபடி உற்சாகத்துடன் கையசைத்து எங்களை அனுப்பிவைத்தார்.

தொடரும் …



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PIPER (பொதிந்திருக்கும் பவளங்கள்)

ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - V

ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - II