நாவாய் ஒப்பந்தம் - VI

 


ஹோம்ஸின் இந்த முடிவைப் பற்றி பெர்சியும் நானும் ரயிலில் லண்டன் திரும்பும் போது பேசிக்கொண்டு சென்றோம். எவ்வளவு பேசியும் அவருடைய முடிவிற்குத் திருப்திகரமானக் காரணத்தை எங்களால் யோசிக்கமுடியவில்லை.

"நேற்றைய திருட்டு முயற்சிக்கு ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதாவென்று பார்க்க விரும்புகிறாரோ என்னவோ", என்றான் பெர்சி. "என்னைப் பொறுத்தவரை அது ஒரு சாதாரண திருட்டு முயற்சியாய் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை".

"வேறு என்னவாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய்?"

"என் உடல் நிலை சரியில்லாததால் என் மன நிலையும் பலஹீனமாகிவிட்டதாக நீ நினைத்தாலும் பரவாயில்லை, வாட்சன். ஆனால் என்னைச் சுற்றி ஏதோ ஒரு பயங்கர சதி நடப்பதாக நினைக்கிறேன். என்ன காரணத்தாலோ என்னவோ, என் உயிரைக் குறி வைக்கிறார்கள் சதிகாரர்கள். நடந்தவற்றை நினைத்துப் பார், வாட்சன். விலை மதிப்புள்ள எந்தப் பொருட்களும் இருப்பதற்கு வாய்ப்பில்லாத என்னுடைய படுக்கை அறையில் நுழைய அந்தத் திருடன் ஏன் முயற்சிக்க வேண்டும்? அதுவும் கையில் கத்தியுடன்?"

"அவன் கையில் இருந்தது கத்தி தான் என்று உறுதியாகத் தெரியுமா? கதவைத் திறக்க பயன்படும் நெம்புகோலாகக் கூட இருக்கலாமல்லவா?"

"நிச்சயமாய் அது கத்தி தான். நிலவொளியில் அது பளிச்சிடுவதைத் தான் நான் தெளிவாகப் பார்த்தேனே!"

"ஆனால் உன் மேல் யாருக்கு அவ்வளவு விரோதமிருக்கிறது?"

"ஆ! அது தான் எனக்கும் புரியவில்லை".

"ம்ம்ம் ... நீ சொல்வது போலவே ஹோம்ஸும் நினைத்தால் அவரின் இந்த முடிவு சரியானதாகத் தெரியும் அல்லவா? நீ சொல்வது போலவே உன்னைக் கொல்வதற்குத் தான் அவன் வந்தானென்றால், பின் அவனைப் பிடித்தால் ஒப்பந்தத்தைக் கண்டுபிடிக்கவும் அது வாய்ப்பாக இருக்கும். உன்னைக் கொல்ல வந்தவனே ஏன் திருடனாகவும் இருக்கக்கூடாது? உனக்கு இரண்டு எதிரிகள் இருக்கிறார்கள், ஒருவன் உன்னிடமிருந்துத் திருட இன்னொருவன் உன்னைக் கொல்ல, என்று நம்புவது கடினமாக இருக்கிறது".

"ஆனால் ஹோம்ஸ் என் வீட்டிற்குச் செல்லப்போவதில்லை என்றல்லவாக் கூறினார்?"

"ஹோம்ஸை எனக்கு நீண்ட நெடுங்காலமாகத் தெரியும், பெர்சி. எதையும் அவர் காரணமின்றி செய்ததாக இது வரை சரித்திரமில்லை", என்று அவனை சமாதானப்படுத்தினேன். அதன் பின் எங்கள் பேச்சு வேறு திசைகளில் பயணித்தது.

ஆனால் எனக்கு அது மிகவும் களைப்பூட்டும் நாளாக இருந்தது. நான் எவ்வளவு முயன்றும் பெர்சியின் கவனத்தை காணாமல் போன ஆவணத்திலிருந்தும் இருந்தும், ஹோம்ஸின் செயல்களில் இருந்தும், லார்ட் ஹோல்டுஹர்ஸ்ட்டின் முடிவுகளிலிருந்தும் மறு நாள் காலை கிடைக்கப்போகும் செய்தியிலிருந்தும் திசை திருப்ப முடியவில்லை. நேரம் செல்லச் செல்ல அவனின் பதற்றம் அதிகமாகி அவனைப் பார்ப்பதற்கேப் பரிதாபமாயிருந்தது.

"உனக்கு ஹோம்ஸின் மீது நம்பிக்கை இருக்கிறதல்லவா, வாட்சன்?" என்றான் இரவு சாயும் போது.

"சில நம்பமுடியாத செயல்கள் அவர் செய்ததைப் பார்த்திருக்கிறேன்".

"ஆனால் இப்படிப்பட்ட மோசமான கேஸை அவர் பார்த்திருக்கமாட்டார்!"

"தடயங்கள் இதை விடக் குறைவாக இருந்த கேஸ்களை அவர் தீர்ப்பதை அருகிலிருந்துப் பார்த்திருக்கிறேன்".

"ஆனாலும் இவ்வளவு முக்கியமான விஷயம், தேசத்தின் பாதுகாப்பு, சம்பந்தப்பட்டிருப்பதைப் போல் வேறு எந்தக் கேசும் இருந்திருக்காது அல்லவா?"

"ஹூம்... அப்படியும் சொல்ல முடியாது. எனக்குத் தெரிந்தே அவர் ஐரோப்பாவின் மூன்று ராஜ குடும்பங்கள் சம்பந்தப்பட்ட கேஸ்களைக் கையாண்டிருக்கிறார்".

"உனக்குத் தான் அவரை நன்றாகத் தெரியும், வாட்சன். அவர் என்ன நினைக்கிறார் என்பதை என்னால் அவர் முகத்திலிருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. வெற்றிகரமாய் இதைக் கண்டுபிடித்து விடுவாரா?"

"அவர் எதுவும் சொல்லவில்லை இதுவரை".

"அப்படியென்றால் அவருக்கு எந்த நம்பிக்கையும் இல்லை இந்தக் கேஸில்!"

"இல்லை, பெர்சி. மாறாக, தடயங்கள் எதுவும் இல்லை அல்லது சரியான பாதையில் விசாரணை பயணிக்கவில்லை என்றால் அவர் ஏதாவது சொல்லுவார். ஏதோ ஒரு தடயம் கிடைத்து, அது சரியா தவறா என்று அவருக்கு உறுதிபடத்  தெரியாத போது தான் அவர் அமைதி காப்பார்", என்று பெர்சியை சமாதானப்படுத்தினேன். "ஆகையால் மனதை போட்டு நீ குழப்பிக் கொள்ளாதே. கொஞ்சமேனும் உறங்கி எழு. அப்போதுதான் காலையில் நடக்கப்போகும் நிகழ்வுகளை எதிர்கொள்ள சக்தி இருக்கும்", என்று அவனை வற்புறுத்திப் படுக்க வைத்தேன்.

பெர்சியைப் போல் நானும் அன்றிரவுத் தூங்கப் போவதில்லை என்றுத் தெரிந்தது. இரவு முழுதும் மனதைக் குடைந்தக் கேள்விகளுடன் படுக்கையில் புரண்டேன். ஹோம்ஸ் ஏன் வோக்கிங்கிலேயேத் தங்கிவிட்டார்? மிஸ். ஹாரிசனை ஏன் பெர்சியின் படுக்கை அறையிலேயே இருக்கச் சொன்னார்? பெர்சியின் வீட்டிற்குச் செல்லாமல் வேறு எங்கு செல்லப்போகிறார்? இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் மொத்தமாய் விடையளிக்கும் ஒரு பதிலை இரவு முழுதும் தேடி எப்போது தூங்கினேன் என்று தெரியாமல் தூங்கிப் போனேன்.

காலை ஏழு மணிக்கு எழுந்ததும் பெர்சியின் அறைக்குப் போனேன். இரவு முழுதும் தூக்கமின்றி சோர்ந்து போய் அமர்ந்திருந்தான்.

என்னைப் பார்த்ததும் முதல் கேள்வியாய், "ஹோம்ஸ் வந்துவிட்டாரா?" என்று கேட்டான்.

"அவர் சொன்னது போல் காலை சிற்றுண்டிக்கு இங்கே இருப்பார். கவலைப் படாதே".

அதே போலவே எட்டு மணி அடித்து சில நிமிடங்களில் ஒரு வண்டி வந்து நின்றது வாசலில். ஹோம்ஸ் அதிலிருந்து இறங்கி உள்ளே வந்தார். அவர் கையில் ஏதோக் கட்டுப் போட்டிருப்பதை அவர் வண்டியில் இருந்து இறங்கும் போது ஜன்னலின் வழி பார்த்துக் கொண்டிருந்த நாங்கள் கவனித்தோம். அவர் முகமும் இறுகிப்போயிருந்தது. உள்ளே நுழைந்த அவர், நாங்கள் இருக்கும் மாடிக்கு வருவதற்கு சற்று நேரமாயிற்று.

"அவர் முகத்தைப் பார்த்தால் காரியம் எதுவும் கைகூடவில்லை போல் தெரிகிறது, வாட்சன்", என்று உடைந்த குரலில் சொன்னான் பெர்சி.

அவன் சொன்னதை என்னால் ஒத்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

"ஒரு வேளை இங்கே லண்டனில் தான் மேற்கொண்டு விசாரணைகளைத் தொடரவேண்டுமோ என்னவோ!" என்றேன்.

பெர்சியிடமிருந்து ஆழ்ந்த முனகல் கலந்த பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது. "நல்ல செய்தி ஏதாகிலும் கொண்டுவருவார் என்று அவர் வரவை ஆவலுடன் எதிர்பார்த்தேன்", என்றான் மெல்லிய குரலில். "ஆனால் நேற்று அவர் கையில் அந்தக் கட்டு இல்லையே. என்ன நடந்திருக்கும்?" என்றான்.

"அடிபட்டுள்ளதா, ஹோம்ஸ்?" என்றேன் அந்த நேரம் உள்ளே நுழைந்த என் நண்பரிடம்.

"ம்ச்... சின்னக் கீறல். அதுவும் என்னுடைய அஜாக்கிரதையால்", என்ற ஹோம்ஸ் பெர்சியிடம், "நான் விசாரித்தக் குற்றங்களில் உங்கள் கேஸ் நிரம்பவே ஆழமானது, மிஸ்டர். பெல்ப்ஸ்", என்றார்.

"உங்கள் சக்திக்கும் அப்பாற்பட்டதாக இருக்குமோ என்று நான் பயந்தது சரியாகிவிட்டது, மிஸ்டர். ஹோம்ஸ்", என்றான் பெர்சி.

"ரொம்பவுமே சுவாரசியமான அனுபவம்", என்றார் ஹோம்ஸ்.

"கையில் இருக்கும் கட்டைப் பார்த்தால் சாகசங்கள் நிறைய இருக்கும் போல் தெரிகிறது. என்ன நடந்தது, ஹோம்ஸ்?" என்று நான் கேட்டேன்.

"எல்லாம் காலை சிற்றுண்டி உண்ட பின், வாட்சன். முப்பது மைல்கள் பிரயாணம் செய்து வந்திருக்கிறேன் இந்த அதிகாலை வேளையில். எனது வண்டிக்கான விளம்பரத்திற்கு ஏதேனும் பதில் வந்ததா?" என்று கேட்டார்.

நான் இல்லை என்று தலையசைக்கவும், "எல்லா பக்கங்களிலிருந்தும் நமக்கு விடைகள் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது", என்றார்.

உணவு மேஜை மேல் ஏற்கனவே எல்லாம் தயாராய் இருந்தது. மிஸஸ். ஹட்சனை அழைக்க நான் மணியை ஒலிக்க நினைக்கும் போது அவர் தேநீரையும் காஃபியையும் கொண்டு வந்தார். சில நிமிடங்கள் கழித்து மூடி போட்டு மூடிய மூன்று தட்டுகளைக் கொண்டு வந்து எங்கள் முன் வைத்தார்.

"மிஸஸ். ஹட்சன் ஜமாய்த்து விட்டார்", என்றார் ஹோம்ஸ் ஒரு மூடியைத் திறந்து உள்ளிருக்கும் கோழிக் கறியைப் பார்த்து. "உம்முடைய தட்டில் என்ன இருக்கிறது, வாட்சன்?" என்றார் என்னைப் பார்த்து.

"ஹாமும் முட்டையும்", என்றேன் நான்.

"ஓ! அப்படியெனில் உங்களுக்கு என்ன வேண்டும், மிஸ்டர். பெல்ப்ஸ்? கோழிக் கறியா முட்டையா?" என்று பெர்சியைக் கேட்ட ஹோம்ஸ், "இல்லையெனில் எது வேண்டுமோ அதை நீங்களே எடுத்துக்கொள்கிறீர்களா?" என்றார்.

"மிக்க நன்றி. எனக்கு எதுவும் வேண்டாம்", என்றான் பெர்சி ஆழ்ந்த மனச்சோர்வுடன்.

"ஓ! கமான், மிஸ்டர். பெல்ப்ஸ். உங்கள் தட்டில் இருப்பதை கொஞ்சமேனும் சாப்பிடுங்கள்", என்றார் ஹோம்ஸ்.

"இல்லை. எதையும் சாப்பிடும் நிலையில் நான் இல்லை", என்று மறுத்தான் பெர்சி.

"சரி. உங்களை நான் வற்புறுத்தவில்லை. ஆனால் எனக்கு உணவு எடுத்து வைத்து உதவி செய்யலாமா?" என்றார் கண்களில் மின்னும் சிறு குறும்புடன் தன் கட்டுப் போட்டக்  கையை சுட்டிக் காட்டி.

சிறிய பெருமூச்சுடன் தட்டை மூடியிருந்த மூடியை விலக்கிய பெர்சியிடமிருந்து ஒரு கூச்சல் வெளிப்பட்டது. வெளிறிய முகத்துடன் அவன் முன் இருந்த தட்டில் வைக்கப்பட்டிருந்த சாம்பல் நீலக் காகிதச் சுருளை வாய்பிளந்து பார்த்தான். சட்டென்று அதைக் கையில் எடுத்த அவன், அவசரமாய் அதை பிரித்து ஆவலாய் அதன் உள்ளே பார்த்தான். 'நாவாய் ஒப்பந்தம்' என்ற அதன் தலைப்பைப் பார்த்ததும் அந்தக் காகிதத்தை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு கத்திக்கொண்டே அறையில் முன்னும் பின்னும் நடனமாடினான். உணர்ச்சிகளின் ஒரு கோடியில் இருந்து இன்னொரு கோடிக்குக் கண நேரத்தில் பயணித்த அவன் உடலும் மனதும், அதற்கு மேல் அதைத் தாங்கும் திறனின்றி அருகிலிருந்த சோபாவில் கிட்டத்தட்ட மூர்ச்சையாகி விழுந்தான். அவசரமாய் நான் சென்று அவனுக்கு பிராந்தியை வாயில் ஊற்ற வேண்டியதாயிற்று அவனை ஆசுவாசப்படுத்த.


"பார்த்து! பார்த்து! மிஸ்டர். பெல்ப்ஸ்! ஆனந்தத்தில் மயக்கம் போட்டு விடாதீர்கள்!" என்று ஹோம்ஸ் பெர்சியை சமாதானப் படுத்தினார். "உங்கள் உடல்நிலை இருக்கும் நிலையில் உங்களை இப்படி அதிர்ச்சியடைய வைத்தது கொஞ்சம் தவறு தான். ஆனாலும் என்னால் அதைச் செய்யாமல் இருக்க முடியவில்லை", என்றார் புன்னகையுடன்.

ஹோம்ஸின் கையைப் பிடித்திழுத்து முத்தமிட்டான் பெர்சி. "காட் ப்ளெஸ் யூ, மிஸ்டர். ஹோம்ஸ்! என் பெயரைக் காப்பாற்றிவிட்டீர்கள்!"

"ம்ம் …! என்னுடைய பெயரும் இதில் சம்பந்தப்பட்டுவிட்டதல்லவா! உங்களுக்கு எப்படி உங்கள் வேலையில் சறுக்குவது பிடிக்காதோ அதே போல் தான் எனக்கும்…என் தொழிலில் தோற்பது எனக்கும் பிடிக்காது!"

தன்னுடைய கோட்டின் உள் பாக்கெட்டில் அந்த ஆவணத்தைப் பத்திரப்படுத்தினான் பெர்சி.

"உங்கள் உணவை பாதியில் நிறுத்துவதில் எனக்கு இஷ்டமில்லை. ஆனாலும் நீங்கள் எப்படி இதை சாதித்தீர்கள் என்று தெரிந்துகொள்ளவில்லையென்றால் தலையே வெடித்துவிடும் போல் இருக்கிறது".

ஹோம்ஸ் கொஞ்சம் காஃபியை அருந்திவிட்டு ஹாமையும் முட்டையையும் ருசித்து உண்டார். பின்னர் தன் பைப்பைப் பற்ற வைத்துக்கொண்டு அவருடைய நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தார்.

"முதலில் நான் என்ன செய்தேன் என்று சொல்லிவிட்டு பின்னர் சொல்லுகிறேன் அதை எப்படிச் செய்தேன் என்று", என்று ஆரம்பித்தார்.

தொடரும் …





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PIPER (பொதிந்திருக்கும் பவளங்கள்)

ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - V

ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - II