நாவாய் ஒப்பந்தம் - VII
காஃபியைக் குடித்து உணவையும் உண்டு இருக்கையில் அமர்ந்த ஹோம்ஸ் நடந்தததை விளக்க ஆரம்பித்தார்.
"உங்கள் இருவரையும் ரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டு அப்படியேக் காலாற நடந்து சர்ரேயின் (Surrey) காட்சிகளை ரசித்துக்கொண்டே மாலை தேநீருக்கு ரிப்ளி (Ripley) கிராமத்தில் ஒரு அழகான சிறிய உணவகத்தை சென்றடைந்தேன். அங்கேயே சற்று நேரம் தங்கிவிட்டு மறக்காமல் சில சான்ட்விச்சுக்களையும் கொஞ்சம் தேநீரையும் எடுத்துக்கொண்டு வோக்கிங்கிற்கு அந்தி சாயும் வேளையில் வந்து சேர்ந்தேன். ப்ரையர்ப்ரே வீட்டின் அருகில் வந்த சேர்ந்ததும் அந்த சாலையில், அது அதிக போக்குவரத்து இல்லாத சாலையாக இருந்தாலும், நடமாட்டம் குறைவதற்குக் காத்திருந்தேன். யாரும் இல்லை என்று உறுதிப்படுத்தியதும் வேலியைத் தாண்டி உள்ளேக் குதித்தேன்".
"கேட் திறந்து தானே இருந்திருக்கும், மிஸ்டர். ஹோம்ஸ்! நீங்கள் ஏறிக் குதிக்க வேண்டிய அவசியமில்லையே!" என்றான் பெர்சி.
"இந்த மாதிரி விஷயங்களில் எனக்கு குறிப்பிட்ட எண்ணங்கள் சில உண்டு, மிஸ்டர். பெல்ப்ஸ். மூன்று தேவதாரு மரங்கள் ஒன்றாய் நிற்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து அதன் பின் இருக்கும் இடத்தில் நான் வேலியைத் தாண்டிக் குதித்ததால் என்னை வீட்டிலிருந்து யாரும் பார்த்துவிடுவார்கள் என்ற அச்சமில்லை. பின் அங்கிருக்கும் செடிகளின் ஊடே தவழ்ந்து ஊர்ந்து - என் பாண்ட்டின் நிலையைப் பாருங்கள் - உங்கள் படுக்கை அறைக்கு எதிரே இருக்கும் ரோடோடென்ட்ரான் செடிகளுக்கு அடியில் வந்து ஒளிந்து கொண்டுக் காத்திருந்தேன் அடுத்து நடக்கப்போகும் நிகழ்வுகளுக்காக".
"உங்கள் ஜன்னலின் திரைச்சீலைகள் ஒதுக்கி விடப்பட்டிருந்தன. நான் இருந்த இடத்திலிருந்து மிஸ். ஹாரிசன் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. இரவு பத்தே கால் மணிக்கு அவர் எழுந்து ஜன்னல்களை மூடி வீட்டுக் கதவையும் பூட்டிவிட்டு அவர் அறைக்குப் படுக்கச் சென்றார்".
"பூட்டிவிட்டா?" என்றான் பெர்சி, எதற்கு என்பது போல்.
"ஆம். நான் தான் மிஸ் ஹாரிசனிடம் அவ்வாறு செய்யச் சொல்லியிருந்தேன், தூங்கப் போகும் போது உங்கள் அறையைப் பூட்டி சாவியைக் கையுடன் எடுத்துச் செல்லுமாறு. நான் சொன்னவைகளை ஒன்று விடாமல் அந்தப் பெண் செய்ததால் தான் இப்போது அந்த ஆவணம் உங்கள் கையில் இருக்கிறது, மிஸ்டர். பெல்ப்ஸ்", என்றார் ஹோம்ஸ்.
அவரே தொடர்ந்தார். "இரவு இதமானதாகத் தான் இருந்தது. ஆனாலும் அது ஒரு களைப்பூட்டும் காத்திருப்பாகவே இருந்தது. வேட்டைக்காரன் நீர் நிலைக்கு வரும் பெரு விலங்கிற்காகக் காத்திருக்கும் ஓர் ஒடுங்கிய உற்சாகம் உடலெங்கும் பரவியிருந்தாலும், அது ஒரு நீண்ட நெடும் காத்திருப்பாகவே இருந்தது. வாட்சன், உமக்கு நினைவிருக்கிறதா - நாம் அந்த 'புள்ளியிட்ட பட்டை' கேஸில் ஓர் அறையில் காத்திருந்தோமே, கிட்டத்தட்ட அப்படிப்பட்டக் காத்திருப்பாய் இருந்தது இது. கால் மணிக்கொரு முறை அடிக்கும் வோக்கிங்கின் தேவாலயக் கடிகாரம் நின்று விட்டதோ என்று கூட நான் பல முறை நினைக்கும் நிலையில் இருந்தேன். ஒரு வழியாய் அதிகாலை இரண்டு மணி அளவில் ஒரு சாவி பூட்டைத் திறக்கும் சத்தமும் அதன் பின் தாழ்ப்பாள் விலகும் சத்தமும் கேட்டது. வேலையாட்கள் உபயோகிக்கும் பக்கவாட்டு சிறிய கதவைத் திறந்து கொண்டு மிஸ்டர். ஜோசப் ஹாரிசன் நிலவொளியில் வெளியே வந்தான்".
"ஜோசப்?" என்று அதிர்ந்தான் பெர்சி.
"ஆம். ஜோசப் தான். தலையில் அவன் ஏதும் அணியவில்லை. தோள்களில் கருப்பு நிற கோட் ஒன்றைப் போர்த்தியிருந்தான், எதாவது சத்தம் கேட்டால் உடனே அதைக் கொண்டு முகத்தை மூடுவதற்கு ஏதுவாக. வெளிப்புற சுவரின் நிழலில் பூனை போல் நடந்து வந்த அவன் உங்கள் படுக்கை அறை ஜன்னலை ஒரு நீண்ட கத்தி கொண்டு நெம்பித் திறந்தான். நான் ஒளிந்திருந்த இடத்திலிருந்து அவனுடைய ஒவ்வொரு செய்கையும் தெள்ளத்தெளிவாக எனக்குத் தெரிந்தது. மாடத்தில் இருந்த இரண்டு மெழுவர்த்திகளை ஏற்றிவிட்டுக் கதவின் அருகில் இருந்த தரைவிரிப்பை சுருட்டினான். அதன் அடியில் இருந்த ரிப்பேர் வேலைகளுக்காக எளிதாக எடுக்கும் விதத்தில் வைத்திருக்கும் ஒரு சதுர பலகையை நெம்பி எடுத்தான். அந்தப் பலகையின் அடியில் இருந்த சிறிய இடத்திலிருந்து சுருட்டி வைக்கப்பட்டிருந்த உங்கள் ஆவணத்தை எடுத்துக்கொண்டு, பலகையைத் திரும்பப் பொருத்திவிட்டு, தரை விரிப்பை மறுபடி விரித்துவிட்டு, மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்துவிட்டு, ஜன்னலின் வழி வெளியே வந்து வசமாய் சிக்கினான் - காத்திருந்த என் கைகளில்".
"நான் நினைத்தை விட அதிக முரட்டுத்தனம் கொண்டவனாக இருந்தான் ஜோசப். என்னைப் பார்த்ததும் கத்தியைக் கொண்டு என்னைத் தாக்கினான். இரண்டு முறை அவனுடையத் தாக்குதலைத் தடுக்கவேண்டியதாகப் போயிற்று. அதில் பட்டக் காயம் தான் இது", என்றுக் கையைக் காட்டினார்.
"ஆனாலும் என் பிடியில் இருந்து அவனால் தப்ப முடியவில்லை. என் கைகள் அவனிடம் பேசி முடித்த பின் அவனால் ஒரு கண்ணால் தான் உருப்படியாய் பார்க்க முடிந்தது. ஆவணத்தை என்னிடம் கொடுத்து விட்டால் அவனை விட்டு விடுகிறேன் என்று நான் சொல்லவும் வேறு வழியில்லை என்று உணர்ந்து ஆவணத்தை என்னிடம் ஒப்படைத்து விட்டான். நான் சொன்னது போல் அவனை செல்ல அனுமதித்துவிட்டேன். ஆனால் அவனுடைய விவரங்கள் அனைத்தையும் ஃபோர்ப்ஸ்சுக்குத் தந்தி அனுப்பிவிட்டேன். அவருக்குத் திறமை இருந்தால் அவனைப் பிடித்துக்கொள்ளட்டும். அதற்குள் அவன் தப்பியோடிவிட்டால் … ம்ம் … லார்ட் ஹோல்டுஹர்ஸ்ட்டும், ஏன், மிஸ்டர். பெர்சி பெல்ப்சும் கூட, இந்த சமாச்சாரம் வெளியேத் தெரியாமல் இருப்பதே நல்லது என்று நினைத்தாலும் நினைக்கக் கூடும்", என்று சிறு புன்னகையுடன் கூறினார் ஹோம்ஸ்.
"ஓ காட்! இந்தக் கொடுமையானப் பத்து வாரங்களும் இந்த ஒப்பந்தம் என்னுடைய படுக்கை அறையில் என்னுடனேயே தான் இருந்தது என்றா சொல்கிறீர்கள்?" என்று கேட்டான் பெர்சி நம்பமுடியாதவனாய்.
"ஆமாம்".
"அதுவும் ஜோசப்! வில்லனும் திருடனும் ஜோசப்பா?"
"ஹூம் …! வெளிப்புறத் தோற்றத்தில் பார்ப்பதை விட சற்று ஆழமான மோசமான குணம் கொண்டவன் ஜோசப். அவன் சொன்னதிலிருந்து நான் தெரிந்து கொண்டது இது - ஸ்டாக்குகளை விற்று வாங்குவதில் ஏராளமான நஷ்டம் அவனுக்கு. அதிலிருந்து மீள்வதற்கு எதையும் செய்யத் தயாராய் இருந்திருக்கிறான். இப்படி ஒரு வாய்ப்பு அவனுக்குக் கிடைத்ததும் அவனுடைய சகோதரியின் வாழ்க்கையோ அல்லது உங்களின் நற்பெயரோ எதுவும் அவனுக்கு ஒரு பொருட்டாகப் படவில்லை", என்றார் ஹோம்ஸ்.
"எனக்குத் தலை சுற்றுகிறது, மிஸ்டர். ஹோம்ஸ்", என்று மறுபடியும் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான் பெர்சி.
"இந்தக் கேசின் பிரதானப் பிரச்னையே இருந்த ஏகப்பட்டத் தடயங்கள் தான்", என்றார் ஹோம்ஸ் அவருக்கே உரித்தான பாணியில். "முக்கியமானத் தடயங்கள் எவையோ அவை உபயோகமில்லாதத் தடயங்களால் மறைக்கப்பட்டிருந்தன. நமக்குக் கிடைத்த எல்லாத் தகவல்களில் இருந்தும் நமக்குத் தேவையானவற்றை நாம் தேர்ந்தெடுத்து அதை ஆராய்ந்து அதன் மூலமாக இந்த விசாரணையைக் கொண்டுபோகவேண்டியிருந்தது. எனக்கு ஏற்கனவே ஜோசப்பின் மீது சந்தேகம் வந்துவிட்டது. நீங்கள் இருவரும் அன்றிரவு ஒன்றாக வீடு திரும்பும் திட்டம் இருந்ததால் அவன் உங்கள் அலுவலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கலாம் என்று எனக்கு ஒரு அனுமானம் இருந்தது. உங்கள் அறையில் நுழைவதற்கு இரவு எடுக்கப்பட்ட முயற்சி என் சந்தேகத்தைக் கிட்டத்தட்ட உறுதி செய்தது. ஜோசப்பின் அறை தான் உங்கள் படுக்கை அறையாக மாற்றப்பட்டது என்று நீங்கள் எங்களிடம் சொன்ன போது எனக்குப் புரிந்துவிட்டது ஜோசப்பைத் தவிர இந்த அறையில் வேறு யாரும் எதையும் ஒளித்து வைத்திருக்க முடியாதென்று. அதுவும் உங்கள் இரவு செவிலி இல்லாத இரவில் அந்த முயற்சி நடந்ததென்பது வந்தவனுக்கு உங்கள் வீட்டின் நடப்புகள் அத்துப்படி என்பதைக் காட்டின".
"எவ்வளவு குருடனாய் இருந்திருக்கிறேன்!" என்று நொந்து கொண்டான் பெர்சி.
"நடந்தது இது தான், மிஸ்டர். பெல்ப்ஸ். உங்களை அழைத்துச் செல்வதற்காக உங்கள் அலுவலகம் வந்த ஜோசப் ஹாரிசன் சார்ல்ஸ் தெரு கதவின் வழியே உள்ளே நுழைந்திருக்கிறான். நீங்கள் உங்கள் அறையை விட்டு வெளியே வந்ததும் அவன் உள்ளே நுழைந்திருக்கிறான். அங்கே யாரும் இல்லாததால் அழைப்பு மணியை இழுத்திருக்கிறான். மணியை ஒலித்த அதே நொடியில் உங்கள் மேஜையின் மீது இருந்த நாவாய் ஒப்பந்தம் அவன் கண்ணில் பட்டிருக்கிறது. பார்த்ததும் அவனுக்குத் தெரிந்துவிட்டது அது எப்பேர்ப்பட்ட ஆவணம் என்று. சட்டென்று எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வந்த வழியே சென்றுவிட்டான்".
"நீங்கள் கீழே சென்றதற்கும் உதவியாளர் அழைப்பு மணியைப் பற்றி உங்களிடம் சொன்னதற்கும் இடையே சில நிமிடங்கள் கழிந்துவிட்டன. அவை போதுமானதாகி விட்டது அவனுக்கு. ரயிலைப் பிடித்து வீட்டிற்கு வந்ததும் ஆவணத்தைப் பிரித்து முழுவதும் பார்த்திருக்கிறான். அதன் மதிப்பு உண்மையிலேயே அவன் நினைத்தது போல் தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டு அதை அவன் ஒளித்து வைத்திருக்கிறான் இரண்டொரு நாளில் அதை ஃபிரஞ்சுத் தூதரகத்திற்கு எடுத்துச் சென்று விற்கும் நோக்கில். ஆனால் அன்றிரவு உங்களின் எதிர்பாராத வருகையும் அதன் பின்னர் உங்களின் உடல்நலமும் அவனை அவன் அறையை விட்டு வெளியேறச் செய்துவிட்டன. ஒளித்து வைத்ததை எடுக்க முடியாமல் அவனுக்கு மிகப் பெரிய சித்திரவதையாய் இருந்திருக்கும் அத்தனை நாட்களும். செவிலி இல்லாத இரவில் தான் அவனுக்கு முதல் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் நீங்கள் தூங்காமல் இருந்தது அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்திருக்கும். அன்றிரவு நீங்கள் வழக்கமாய் உட்கொள்ளும் தூக்க மருந்தை எடுத்துக்கொள்ளவில்லை அல்லவா?"
"ஆம், நினைவிருக்கிறது. அன்று நான் அந்த மருந்தைக் குடிக்கவில்லை".
"அந்த தூக்க மருந்து வீரியம் மிக்கதாய் இருக்கும் படி பார்த்துக் கொண்டான் ஜோசப். அதனால் நீங்கள் உறுதியாய் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பீர்கள் என்று நினைத்து தான் அவன் உங்கள் அறையில் நுழைய முயற்சித்திருக்கிறான். வசதியாய் அடுத்த வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயமாய் அவன் மறுபடியும் அங்கே நுழைய முயற்சிப்பான் என்று எனக்குத் தெரியும். அதனால் தான் மிஸ். ஹாரிசனை உங்கள் அறையிலேயே நாள் முழுதும் இருக்கச் சொன்னேன். நீங்கள் இரவு திரும்ப மாட்டீர்கள் என்று அவனுக்குத் தெரிந்தவுடன் அவன் மறுபடியும் ஆவணத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கினான். அதைத் தெரிந்து தான் நானும் அவனுக்காகக் காத்திருந்தேன். ஆவணம் அந்த அறையில் தான் இருக்கிறதென்று எனக்குத் தெரியும். ஆனால் அதை தேடுவதற்காக அறை முழுதும் தரையைத் தோண்டவோ அல்லது அறையைத் தலைகீழாகப் புரட்டிப் போடவோ எனக்கு விருப்பமில்லை. அதனால் தான் அவனே எடுத்து அதை என் கையில் கொடுக்கும் படிச் செய்தேன். வேறு ஏதேனும் விஷயங்களை உங்களுக்கு நான் தெளிவுபடுத்த வேண்டுமா?" என்று கேட்டார் ஹோம்ஸ் அவரின் நீண்ட விளக்கத்திற்குப் பிறகு.
"ஜோசப் ஏன் ஜன்னல் வழி நுழைய முயற்சிக்க வேண்டும்? கதவைத் திறந்தே வந்திருக்கலாமே?" என்று கேட்டான் பெர்சி.
"கதவு வழியே வரவேண்டுமென்றால் அவன் ஏழு அறைகளைத் தாண்டி வரவேண்டியிருக்கும். தோட்டத்தின் வழி வந்தால் யார் கண்ணிலும் படாமல் சுலபமாக உங்கள் அறையில் நுழைந்துவிடலாம். வேறு ஏதாவது?"
"அவன் என்னைக் கொல்லும் நோக்கத்தோடு வந்திருப்பான் என்று நினைக்கிறீர்களா, மிஸ்டர். ஹோம்ஸ்? அந்தக் கத்தியை அவன் எடுத்து வந்தது ஜன்னலைத் திறக்கத் தானே?" என்று கேட்டான் பெர்சி.
"இருக்கலாம்", என்றார் ஹோம்ஸ் தோள்களைக் குலுக்கிக்கொண்டு. "ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும் - மிஸ்டர். ஜோசப் ஹாரிசன் என்ற மனிதனின் கருணையை நம்புவதற்கு நான் தயாராக இல்லை".
முற்றும்
கருத்துகள்
கருத்துரையிடுக