பேஷண்ட் ‘வத்சலா’


 

 

பேஷண்ட் ‘வத்சலா’



"எக்ஸ்க்யூஸ் மீ!"

கடைசி பேஷண்ட்டின் நோட்ஸ் எழுதிக்கொண்டிருந்த டாக்டர் தீரன் தலையை நிமிர்த்தினார், அனுமதியில்லாமல் யார் உள்ளே வருவது என்ற எரிச்சலுடன்.

"அப்பாயிண்ட்மெண்ட்ஸ் இன்று முடிந்துவிட்டது. எதுவாயினும் என் செகரெட்டரியைப் பாருங்கள் வெளியே", என்றார் கோபமாக மாறத் தொடங்கும் எரிச்சலுடன்.

"வெளியே யாரும் இல்லை, டாக்டர். மூடியிருக்கும் இந்தக் கதவுக்குப் பின் லைட் எரிவது தெரிந்தது. அதனால் தான் ... ", என்றாள் கதவைத் திறந்தும் உள்ளே வராமல் வெளியே நின்றிருந்த அந்தப் பெண்.

அப்புறம் தான் அவருக்கு நினைவு வந்தது அவருடைய செகரெட்டரி முகிலன் அன்று அரை நாள் லீவு கேட்டுச் சென்றது.

கொஞ்சம் எரிச்சல் குறைந்தது.

"Sorry, என் செகரெட்டரி முகிலன் இன்று அரை நாள் லீவு. அதனால் தான் வெளியே யாரும் இல்லை. ஆனாலும் அப்பாயிண்ட்மெண்ட்ஸ் நேரம் முடிந்துவிட்டதே. நீங்கள் நாளைத் தொலைபேசியில் கேட்டு ஃபிக்ஸ் செய்து கொண்டு வாருங்கள்", என்றார்.

"ஓ! ஆனால் நான் பேஷண்ட்டாக வரவில்லையே!" என்றாள்.

"பின்னே? ஒரு சைக்யாட்ரிஸ்ட்டைத் தேடி பேஷண்ட்டாக வராமல் வேறு எதற்காக வந்தீர்கள்?" என்று கேட்டார் டாக்டர் தீரன், குழப்பமும் ஆச்சர்யமும் கலந்த எரிச்சல் மறுபடி தலை தூக்க.

"உள்ளே வந்து சொல்ல அனுமதி உண்டா?"

கதவுக்கு வெளியிலேயே நிற்கும் அந்தப் பெண்ணை ஒரு கணம் பார்த்தார். கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்து வருட அனுபவத்தில் பார்வையில் மனிதர்களை எடை போடும் சூட்சுமம் கைவந்திருந்தது என்று நம்பி, அந்த நம்பிக்கையில் அவளை பற்றிய சில தகவல்களையாவது கணிக்க முயன்றார்.

நாற்பதுகளின் நடுவில் நிற்கும் வயது. நேர்த்தியான கசங்காத காட்டன் புடவை. அணிகலன்கள் எதுவும் இல்லை, இடது மணிக்கட்டில் ஒரு பெரிய டயல் வாட்ச்சைத் தவிர. தோளில் தொங்கும் விலையுயர்ந்த பை. தோற்றமும் பாவனையும் உடல் மொழியும் அவருக்குத் தெரிவித்த செய்தி - பணத்திற்கும் படிப்பிற்கும் பஞ்சமில்லாத பெண்.

ஹூம் என்ற பெருமூச்சுடன், "Please, come in", என்றார்.

"Thank you", என்றபடி உள்ளே வந்து கவனமாகக் கதவை மூடினாள்.

மேஜையின் முன் நின்றுகொண்டிருந்தவளைப் பார்த்து, அவர் சொல்லாமல் அவருக்கு எதிரே இருக்கும் இருக்கையில் அமரமாட்டாள் என்று உணர்ந்து, "Please, sit", என்றார் நாற்காலியைக் காட்டி.

"Thank you", என்று மறுபடி சொல்லி நாற்காலியில் அமர்ந்தாள்.

அவர் மேஜையின் மேல் இருந்த விளக்கின் வெளிச்சத்தில் முகத்தை இன்னும் தெளிவாகப் பார்த்தார். வழவழப்பான பளீரென்ற முகம். திருத்தப்பட்ட புருவங்கள். மேக்கப் இருக்கிறதா இல்லையா என்று தெரியாத ஒப்பனை. உதடுகளில் ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு புன்னகை. இதயத்தை ஊடுருவும் பார்வையுடன் அகண்ட ஆழமான கண்கள். அலைபாயும் கண்களுடன் அல்லது வெறித்த பார்வையுடனுமே வரும் பேஷண்ட்டுகளைப் பார்த்துப் பழகியவருக்கு இந்தக் கண்களின் கூர்மை சற்றுக் கூசச் செய்தது.

"உள்ளே வந்தாகிவிட்டது. இப்போது சொல்லலாமா, பேஷண்ட்டாக அல்லாமல் யாராக வந்தீர்கள் என்று?"

"பேஷண்ட் தான் ... ஆனால் பிரச்னை என்று எதுவுமில்லை எனக்கு. உங்களிடம் வந்து முறையிட்டுத் தீர்வு காண்பதற்கு குறைகளோ குறுகுறுப்புகளோ எவையும் இல்லை என்னிடம்", என்றாள் கண்களில் மாறாத புன்னகையுடன், கம்பீரமான ஆங்கிலத்தில்.

ஏதும் சொல்லாமல் அமைதியாயிருந்தார் டாக்டர். தீரன். மௌனம் என்பது அவர் கரைத்துக் குடித்தப் பாடம் மட்டுமல்ல, அந்த டெக்னீக்கைக் கையாள்வதில் அவர் நிபுணரும் கூட. இருவருக்கு இடையில் அமர்ந்திருக்கும் கனத்த மௌனத்தின் பாரத்தைத் தாங்கமுடியாமல், பேஷண்ட்டுகள் பேச ஆரம்பித்து பின் நிறுத்த மாட்டார்கள் என்பது அவருடைய தொழில் அறிவு. அங்கு நிலவிய மௌனம் அவரை அனிச்சையாய் அவரின் ‘listening mode’க்குக் கொண்டு செல்ல, ஒரு விதமான மோன நிலை போல் காத்திருந்தார் அந்தப் பெண்ணின் வாயிலிருந்து அடுத்து வரப்போகும் வார்த்தைகளுக்கு.

"பசிக்கிறது, டாக்டர். ஏதேனும் சாப்பிடலாமா?"

செவி வழி நுழைந்த வார்த்தைகள் மூளையை எட்டி அவைகளின் அர்த்தம் புரிந்த போதும், சில நொடிகள் ஆனது அது முழுவதுமாக டாக்டர் தீரனுக்கு உறைப்பதற்கு.

"ஹாங்...?" என்றார் குழப்பமான முனகலாக.

"பசிக்கிறது. ஏதேனும் சாப்பிடலாமா?" என்று மறுபடி கேட்டாள் கேள்வியை.

'என்ன விளையாடுகிறாயா? இது என்ன டாக்டரின் கன்சல்டேஷன் என்று நினைத்தாயா இல்லை ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் என்று நினைத்தாயா?' என்று கத்த நினைத்தவரை சட்டென்று அந்தக் கணம் பார்த்து வயிற்றைக் கிள்ளிய பசி, "எதுவும் இல்லையே சாப்பிட", என்று கிட்டத்தட்ட பரிதாபமாக சொல்ல வைத்தது.

பெரிதாகும் புன்னகையுடன் அவள் கைப்பையைத் திறந்து இரண்டு சாண்ட்விச் டப்பாக்களை எடுத்தாள். முக்கோண வடிவில் இரண்டு கையிலும் பிடித்து சாப்பிடும்படியான சைஸுடன் இருந்த டப்பாவை மேஜையில் அவர் முன் தள்ளி வைத்தாள்.

அதைக் கையில் எடுக்க யோசித்தவரை, "ப்ளீஸ், டாக்டர். உங்களைப் பார்க்கவைத்துக் கொண்டு சாப்பிட்டால் எனக்கு வயிறு வலிக்கும்", என்று சொல்லி இன்னும் கொஞ்சம் அவர் அருகில் அதைத் தள்ளி வைத்தாள்.

உடலிலும் மனதிலும் இருந்த இறுக்கம் சட்டென்று தளர்ந்து போக, லேசான புன்னகையுடன் டப்பாவைக் கையில் எடுத்தார். சாண்ட்விச்சைச் சுற்றியிருந்த பேப்பரைப் பிடித்துக்கொண்டு ஒரு மூலையில் பிரித்து சாப்பிட ஆரம்பித்தார்.

"Thank you", என்றபடி அவளும் கடித்தாள்.

சாப்பிட ஆரம்பித்த பின் தான் உணர்ந்தார் அவருடைய பசியின் தீவிரத்தை. பேசுவதற்கோ கேள்விகள் கேட்பதற்கோ அவருடைய வாய்க்கு விருப்பமில்லாமல் உண்பதிலேயே கவனமாயிருந்தது. உண்டு முடித்து, மேஜையில் இருந்த டிஷ்யூ பேப்பர் எடுத்துக் கையும் வாயும் துடைத்து அத்துடன் சேர்த்து சாண்ட்விச் பேப்பரையும் அவரின் மேஜைக்கு அடியில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுத் திரும்பும் போது, தயாராய் நீட்டினாள் மில்க் ஷேக் டெட்ரா பாக் ஒன்றை, அவருக்கு விருப்பமான ஏலக்காய் சுவையில்.

"Oh! Thank you!” என்று வாங்கிக் கொண்டார் ஆச்சர்யம் கலந்த நன்றியுடன்.

அவருடைய கன்சல்டேஷன் அறையைச் சுற்றிக் கண்களை சுழலவிட்டுக் கொண்டே அவளுடைய வெனிலா ஷேக்கில் ஸ்ட்ராவை நுழைத்து அவளும் உறிஞ்சத் தொடங்கினாள். அவள் மேல் வைத்தப் பார்வையை அகற்றாமலே அவரும் உறிஞ்சினார். வயிறு நிறைய நிறைய, உடல் குளிர்ந்து, மனம் அடங்கி, பசியிலும் அலுப்பிலும் ஏற்பட்ட எரிச்சல் மறைந்து, ஒரு சிறிய குறுகுறுப்பு எட்டிப் பார்க்க ஆரம்பித்தது - பேஷண்ட் அல்லாத பேஷண்ட்டாக அவர் முன் அமர்ந்திருப்பவளைப் பற்றி.

'இப்போது சொல்லுங்கள் எதற்காக என்னைத் தேடி வந்தீர்கள்', என்று கேட்க அவர் வாயைத் திறக்கும் முன், "முப்பத்தி நான்கு வருடங்கள், பத்து மாதங்கள், இருபத்தி மூன்று நாட்களாக மனிதர்களின் புலம்பல்களையும் குறைகளையும் கோணல்களையும் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கிறீர்களே, சலித்துப் போகவில்லையா உங்களுக்கு?" என்றாள் அவள்.

"What?" என்றார் ஒன்றும் புரியாமல்.

"முப்பத்தி நான்கு வருடங்கள், பத்து மாதங்கள், இருபத்தி மூன்று நாட்களாக மனிதர்களின் புலம்பல்களையும் குறைகளையும் கோணல்களையும் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கிறீர்களே, சலித்துப் போகவில்லையா உங்களுக்கு?" என்றாள் அவள் மறுபடியும், அழுத்தம் திருத்தமாக.

ஏற்பட்ட ஏகப்பட்ட குழப்பங்களால் வாயடைத்துப் போனார் டாக்டர் தீரன். அவர் ப்ராக்டிஸ் செய்ய ஆரம்பித்த நாள் கணக்கு சரியாக இருந்தது. இத்தனை வருடங்களில் அவர் தான் கேள்விகள் கேட்டிருக்கிறாரே தவிர அவரிடம் யாரும், குறிப்பாய் அவருடைய பேஷண்ட்டுகள், கேள்விகள் கேட்டதில்லை; கேட்பதற்கு அவர் அனுமதித்ததும் இல்லை. அவள் கதவைத் தட்டுவதற்கு சற்று முன் தான், பேஷண்ட் நோட்ஸ் எழுதும் போது, அவள் கேட்ட அதே கேள்வியை அவர் மனம் அவரைக் கேட்டது. 'இவளுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?' என்று லேசானக் கோபத்துடன் எட்டிப் பார்த்தக் கேள்வியை அவளிடம் கேட்க நினைத்தவரின் வாயிலிருந்து, "சலிக்க ஆரம்பித்து வெகு நாட்களாகிவிட்டன", என்ற வார்த்தைகள் வந்தன, ஒரு சிறிய பெருமூச்சுடன், அவரே எதிர்பார்க்காமல்.

'பின்னே இன்னும் ஏன் இதில் தொடர்கிறீர்கள்?' என்ற அடுத்த கேள்வியை அனிச்சையாய் அவர் மனம் எதிர்பார்க்க, அவள், "எனக்கான ஒரு மணி நேரம் முடிந்துவிட்டது, டாக்டர். அடுத்து வரும் போது அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வருவதற்கு முயல்கிறேன்", என்றபடி கைப்பையை எடுத்துக்கொண்டு அவர் பதிலுக்குக் காத்திராமல் கதவை நோக்கி நடந்தாள்.

விக்கித்துப் போன டாக்டர் தீரன் சுதாரிப்பதற்குள் அவள் கதவை அடைந்திருந்தாள்.

சட்டென்று உறைத்தது டாக்டர் தீரனுக்கு.

"உங்கள் பெயரைக் கூட சொல்லவில்லையே", என்றார் அவசரமாய் இருக்கையை விட்டு எழுந்தபடி.

கதவைத் திறந்தவள் திறந்த கதவைப் பிடித்தபடி அவரைத் திரும்பிப் பார்த்தாள்.

"என்னைப் பார்த்தால் என்ன பெயர் தோன்றுகிறது உங்களுக்கு?" என்றாள்.

என்ன சொல்கிறோம் என்று அவர் மூளை அவருக்கு உணர்த்துவதற்குள் அவர் வாய் சொன்னது, "வத்சலா".

ஒரு சிறிய புன்னகையுடன், "அப்படியெனில் அதுதான் என் பெயர். வருகிறேன்", என்று கதவை சத்தமில்லாமல் மூடிவிட்டுச் சென்றுவிட்டாள்.

மூடிய கதவை வெறித்துக்கொண்டு நின்றார் டாக்டர் தீரன் என்ன நடந்தது என்று புரியாத பிரமையுடன். ஏதோ ஓர் உணர்வு அவரை உந்தித் தள்ள, வேகமாகச் சென்று அவருடைய கதவைத் திறந்து, ரிசப்ஷனைக் கடந்து சென்று வெளிக் கதவையும் திறந்து பார்த்தார். காரிடார் அமைதியாக அடங்கியிருந்தது. எதிர்பார்த்தது என்ன என்று தெரியாமலேயே ஏமாற்றத்துடன் திரும்பினார். ரிசப்ஷன் மேஜை மேல் பூ ஜாடிக்கு அடியில் இரண்டு ஐநூறு ரூபாய் தாள்கள் சொருகி நின்றன. பூ ஜாடியின் முன் வந்து நின்று அதை சற்று ஆச்சர்யத்துடன் பார்த்தார், எப்படி இதை எடுத்து கணக்கில் வைக்காமல் முகிலன் வீட்டிற்குச் சென்றான் என்று. யோசித்துக்கொண்டிருக்கும் போது சட்டென்று உறைத்தது, அது 'வத்சலா' வைத்துவிட்டுச் சென்ற நோட்டுக்கள் என்று. ஒரு கணம் அவைகளை பார்த்துக் கொண்டு நின்றவர் அவர் அறைக்குள் நுழையப் போனார், காலையில் முகிலன் வந்து அதை எடுத்து வைத்துக் கொள்ளட்டும் என்று. கன்சல்டேஷன் ஃபீஸைக் கையால் அவர் தொட்டு இருபது வருடங்களுக்கு மேலாகின்றன. எல்லாம் முகிலன் தான்.

மூன்றாமாண்டு கல்லூரி மாணவனாக அவனுடைய தந்தையை அவரிடம் அழைத்து வந்திருந்தான், ஏற்கனவே தாயை இழந்திருந்த முகிலன். அவனுடைய தந்தைக்கு 'paranoid schizophrenia ' என்று அவர் கண்டறிந்து அதற்கு மருந்துகளும் பரிந்துரைத்தார். அவருடைய ஃபீஸையோ அவர் மருந்துச் சீட்டில் எழுதியிருந்த மருந்துகளையோ வாங்குவதற்கு அவனிடம் வழியில்லை என்று தெரிந்து ஃபீஸ் வாங்காமல் அவருக்கு வரும் சாம்ப்பிள் மருந்துகளை அவனிடம் கொடுக்க, மனம் தெளிந்த ஒரு கணத்தில் மகனுக்கு இதற்கு மேல் சிரமம் கொடுக்கவேண்டாமென்று அவனுடைய தந்தை தூக்கிட்டுக்கொண்டு அவனுக்கு விடுதலை கொடுத்தார்.

டாக்டர் தீரனுக்கு அவர் பேஷண்ட்டுகளில் அது தான் முதல் இழப்பு. ஆழம் வரை ஆட்டிவிட்டது அவரை. திக்கற்றுத் தடுமாறி நின்றவனைத் தேற்றி மீதமுள்ள படிப்பை முடிக்க உதவி, மேலும் படிக்க உற்சாகப்படுத்த, அவனோ, 'படிப்பு போதும். உங்களுக்கு செகரெட்டரியாக வேலை கொடுங்கள். இறுதி வரை எனக்கு அது போதும்', என்று கேட்டு அவரிடம் அன்று சேர்ந்து இன்று அவருக்கு எல்லாமுமாகி நிற்கிறான். ஒரு கட்டத்தில் அவனின் திருமணத்தைப் பற்றி அவர் அவனிடம் கேட்க, 'இந்த மரபணு என்னுடன் தொலையட்டும், சார். இன்னொரு சந்ததி என்னைப் போல் நிற்க வேண்டாம்', என்று மறுத்துவிட்டு இன்று வரை அவன் முடிவில் அவன் தெளிவாக நிற்கிறான். Schizophrenia இந்த மரபணுவுடன் தொடர்புடையது என்று எந்த ஆராய்ச்சியும் உறுதியாக கூறாவிட்டாலும் குடும்பத்தில் அது தொடர்வதற்கு எட்டில் ஒரு வாய்ப்பு இருப்பதாக அதே ஆராய்ச்சிகள் சொன்ன காரணத்தால், அவன் வாதத்தில் இருந்த நியாயத்தை இன்று வரை அவரால் மறுக்க இயலவில்லை. ஏதோ ஒரு கால கட்டத்தில் ஃபீஸை முகிலனிடம் கொடுக்கச் சொல்ல, அன்று ஆரம்பித்தது இன்று வரைத் தொடர்கிறது.

தன் அறையின் கதவைத் திறந்த டாக்டர் தீரன், ஏதோ நினைத்தவராய் சரேலென்று திரும்பி வந்து அந்த இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளையும் எடுத்து சட்டைப் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டு சென்றார். மறுநாள் அவர் அதை முகிலனிடம் கொடுக்கவும் இல்லை, அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் அவர் பார்த்த 'பேஷண்ட்டை'ப் பற்றி அவனிடம் சொல்லவும் இல்லை.

அடுத்தடுத்த பேஷண்ட்டுகளில் கவனம் செலுத்தினாலும் அவர் மனதின் ஒரு பகுதி தன்னைத் தானே 'வத்சலா'வுக்காக ஒதுக்கிக் கொண்டது. 'நான் ப்ராக்டிஸ் செய்யும் காலக்கணக்கு இவ்வளவு துல்லியமாக அவளுக்கு எப்படித் தெரியும்?' ''பேஷண்ட்டல்லாத பேஷண்ட்' என்றாளே… அப்படியென்றால் என்னைத் தேடி ஏன் வந்தாள்?' 'மறுபடியும் வருவாளா?'

புது பேஷண்ட்டுகளின் கேஸ் ஹிஸ்ட்டரியுடன் அவருடைய இன்டெர்ன்கள் அவரிடம் வரும் போது 'வத்சலா'வின் ஃபைல் வருகிறதா என்று பார்க்க ஆரம்பித்தார். அப்படி ஒரு ஃபைலும் வராத போது அவருடைய மனம் சிறிது ஏமாற்றமடைவதை உணரவும் ஆரம்பித்தார்.

- தொடரும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

The Red Balloon (பொதிந்திருக்கும் பவளங்கள்)

ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - V

PIPER (பொதிந்திருக்கும் பவளங்கள்)