பேஷண்ட் ‘வத்சலா’
கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கழித்து, இரவு முகிலனை அனுப்பிவிட்டு ஆயாசத்துடன் கண்மூடி இருக்கையில் சாய்ந்திருக்கையில், "Sorry, டாக்டர். மறுபடியும் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமலே உங்களைத் தொந்தரவு செய்கிறேன்", என்ற குரல் கேட்டு, அனிச்சையாய் முகத்தில் பூத்த புன்னகையுடன் கண் திறந்து இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தார்.
"வத்சலா! Come in, come in", என்றார் விரிவடையும் புன்னகையை முகத்தில் உணர்ந்தபடி.
"நீங்கள் புன்னகைக்கும் போதுதான் உங்கள் முகத்திற்கு அந்தத் தாடி நன்றாகப் பொருந்துகிறது", என்று அவளும் புன்னகைத்தபடியே கவனமாகக் கதவை மூடிவிட்டு உள்ளே வந்தாள்.
"Please sit", என்று இருக்கையைக் காட்டினார் டாக்டர் தீரன்.
"அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் இந்த நேரத்தில் வருகிறேன் என்று கோபித்துக்கொள்ளாதீர்கள், டாக்டர், ப்ளீஸ். ஏனோ இப்படி வருவது தான் பிடிக்கிறது", என்றபடி கைப்பையிலிருந்து பர்கர் டப்பா ஒன்றை எடுத்து நீட்டினாள்.
"Thank you", என்றபடி வாங்கிக்கொண்ட டாக்டர் தீரன், அவளும் அவளுடைய டப்பாவைத் திறக்கும் வரைக் காத்திருந்தார்.
"நான் ப்ராக்டிஸ் செய்யும் நாள் கணக்கு உங்களுக்கு எப்படித் தெரியும் என்று சொன்னால் இதை நான் எடுத்துக்கொள்வேன்", என்றார்.
"அது ஒன்றும் பெரிய வித்தை இல்லையே, டாக்டர். உங்கள் வெப்சைட்டில் உங்கள் படிப்பு விவரங்களும் தொழில் விவரங்களும் தெளிவாக இருக்கின்றனவே… அதிலிருந்துதான் கணக்கிட்டுக் கொண்டேன்", என்றாள்.
'சே! இதைக் கூட யோசிக்கவில்லையே என் மூளை!' என்று நொந்துகொண்டார் டாக்டர் தீரன்.
"சரி, பேஷண்ட்டல்லாத பேஷண்ட்'டாக ஏன் வந்தீர்கள் என்னிடம்?"
உண்பதை நிறுத்தி விட்டு ஆழமான பார்வை பார்த்தாள்.
"பேசுவதற்கு, டாக்டர். மனதில் தோன்றியதை எந்தக் கட்டுப்பாடுகள் இல்லாமல் பேசவும், எந்த judgements-ம் இல்லாமல் கேட்கவும் உங்களைப் போன்ற சைக்யாட்ரிஸ்ட்டைத் தவிர யார் இருக்கிறார்கள்? காசு வாங்கிக்கொண்டேனும் நீங்கள் காது கொடுக்கிறீர்கள். தொழில் தர்மத்திற்காகவேனும் சொல்வதைக் கேட்பீர்களல்லவா?"
"Fair
enough", என்ற டாக்டர் தீரன் அமைதியாக உண்டு முடித்து, அவள் நீட்டிய மில்க் ஷேக்கையும் குடித்து முடித்தார்.
அடுத்த கேள்வியைக் கேட்க வாயைத் திறக்கும் முன், "இப்போது என்னுடைய முறை, கேள்வி கேட்பதற்கு", என்றாள் 'வத்சலா'.
"என்ன கேட்கவேண்டும்?"
"சகோதரன், சகோதரி, மனைவி, மகன், மகள், மாமியார், மாமனார், பேரன், பேத்தி, மருமக்கள், கொழுந்தன், மச்சினி, சகலை என்று எந்த உறவுகளும் இல்லாத நீங்கள், இந்த உறவுகளால் ஏற்படும், ஏற்படுத்தப்படும் மனச்சிக்கல்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகளும் பரிந்துரைக்கும் தீர்வுகளும் ஏட்டுச் சுரைக்காய் என்று உங்களுக்கு இன்னமுமா உறுத்தவில்லை?" என்றாள்.
நியாயமாய் அவருக்குக் கோபம் வந்திருக்கவேண்டும் அந்த வார்த்தைகள் காதில் விழுந்தவுடன். மாறாக ஓர் ஆழ்ந்த ஆயாசம் அவரைப் போர்த்தியது.
பதிலாய் ஒரு பெருமூச்சு மட்டுமே வெளிப்பட்டது அவரிடமிருந்து.
"Please don’t mistake me, Doctor. தண்ணீரிலேயே இறங்காதவன் நீச்சல் கற்றுக்கொடுப்பதை போல் அல்லவா இருக்கிறது இது?"
ஈகோ நிலைகள் பற்றியும், பர்சனாலிட்டி வகைகள் பற்றியும், மனதின் தற்காப்பு டெக்னீக்குகள் பற்றியும், மெக்கானிஸம்ஸ் பற்றியும் நீண்டதொரு விளக்கம் கொடுக்க நினைத்தவர், "உண்மைதான்", என்று தன் வாயிலிருந்து வந்த ஒற்றை வார்த்தையைக் கேட்டு லேசாய்ப் புன்னகைத்தார்.
"என்னைக் கேள்விகள் கேட்டு நேரத்தைப் போக்கவே வருகிறீர்கள் போல் தெரிகிறது, வத்சலா", என்றார் அதே புன்னகையுடன்.
"டாக்டர், உங்களை விட பதினான்கு வருடங்கள் வயதில் நான் இளையவள். தயவுசெய்து பன்மையில் என்னை அழைக்காதீர்கள்".
"ஓகே", என்றார் புன்னகை மாறாமல், அவள் கூறிய கணக்குப் படி அவளுக்கு வயது நாற்பத்தி நான்கு என்று மனதில் கணித்துக்கொண்டே.
"Thank you. இல்லை, உங்களைக் கேள்விகள் கேட்க வரவில்லை. நான் பேசுவதற்கே வருகிறேன். அடுத்த முறையிலிருந்து அதைச் செய்கிறேன்", என்று சொல்லி எழுந்தாள்.
"ஒரு நிமிடம்…", என்ற டாக்டர் தீரன் சட்டைப் பையில் வைத்திருந்த இரண்டு ஐநூறு ரூபாய்த் தாள்களை எடுத்து அவளிடம் நீட்டினார், "இது உங்களுடையது என்று நினைக்கிறேன்", என்றபடி.
"உங்கள் ஃபீஸ்…?", என்றாள் 'வத்சலா' அதை வாங்காமல்.
"இல்லை. இது தான் என் ஃபீஸ்", என்று பர்கர் டப்பாவையும் மில்க் ஷேக் டெட்ரா பாக்கையும் காட்டினார் டாக்டர் தீரன்.
"If you say so", என்றபடி புன்னகையுடன் நோட்டுக்களைப் பெற்றுக்கொண்டாள்.
"I do say so", என்ற டாக்டர் தீரனுக்கு, "Till next time. Good
night, Doctor", என்று புன்னகைத்து விடைபெற்றாள் 'வத்சலா'.
சொல்லியபடியே பேசினாள். ஒவ்வொரு முறையும் எதைப் பற்றியாவது - படித்த புத்தகம், பார்த்த சினிமா, பெய்த மழை, பக்கத்து வீட்டு நாய்க்குட்டி, எங்கோ வெடித்த எரிமலை, யாரோ வென்ற பதக்கம் - என்று பேசினாள். 'Notable by
its absence' என்பது போல் அவளுடையக் குடும்பத்தைத் தவிர அனைத்தையும் பற்றி பேசினாள் 'வத்சலா'.
டாக்டர் தீரனுக்கு அதை பற்றி முதலில் இருந்த குறுகுறுப்பு, பின் வந்த நாட்களில் மெள்ள மெள்ளக் குறைந்து பின் மறைந்தே போனது. வத்சலா அடுத்து எப்போது வருவாள், என்ன பேசுவாள் என்பது மட்டுமே டாக்டர் தீரனின் எண்ண ஓட்டத்தை ஆக்கிரமிக்கும் நினைவுகளாயின. மற்ற பேஷண்ட்டுகளைப் பார்ப்பதும், அவர்கள் பேசுவதைக் கேட்பதும் போகப் போக எரிச்சல் தரும் விஷயங்களாயின. அதன் விளைவாக மாலை நேர அப்பாயிண்ட்மெண்ட்டுகளை இனிமேல் யாருக்கும் கொடுக்கவேண்டாம் என்று முகிலனுக்கு உத்தரவிட்டார் டாக்டர் தீரன். என்ன, ஏது என்று ஆச்சர்யமாய் விசாரித்தவனை ப்ராக்டிஸிலிருந்து ரிடையர் ஆகும் எண்ணம் தலைதூக்குவதாகவும் அதன் முதல் கட்டமாக இந்த நடவடிக்கை என்றும் அவனிடம் கூறினார். முகிலனுக்கு அந்த வார்த்தைகளில் இருந்த நியாயம் புரிந்ததால் மாலை நேர பேஷண்ட்டுகளை காலை அப்பாயிண்ட்மென்ட்கள் கொடுத்து மாற்றினான். மாற்ற முடியாத, விரும்பாத பேஷண்ட்டுகளை அவர்கள் விரும்பும் வேறு சைக்யாட்ரிஸ்ட்டுகளிடம் மாற்றிக் கொள்வதற்கு உதவினான். மாலையில் இனி முகிலன் வருவதற்கான அவசியமில்லை என்று டாக்டர் தீரன் கூறியதால் மாலைகளில் க்ளினிக் வருவதை நிறுத்தினான்.

கருத்துகள்
கருத்துரையிடுக