மழைச்சாமி

இராமநாதபுர மாவட்டத்தின் ஒரு வறண்ட கிராமத்தின் ஒரு காய்ந்த பகல் பொழுதில், பிரசவித்த களைப்பில் ஒரு தாயும், பிறந்த களைப்பில் ஒரு ஆண் சிசுவும் உறங்க ஆரம்பித்தனர். மழை பெய்யத் தொடங்கியது. ‘என் மவன் பொறந்த நேரம் நல்ல நேரமய்யா’, என பிள்ளையைப் பெற்றவனும், ‘மூணுக்கப்புறம் இதாவது பையனாப் பொறந்ததே’, என பெற்றவளின் மாமியார்க்கிழவியும் சந்தோஷித்தனர். அதன் பின் அந்தக் கிராமத்தில் தினமும் மழை பெய்தது. நாள் தவறாமல், வாரம் தவறாமல், மாதம் தவறாமல், வருடம் தவறாமல் நான்கு வருடங்களாய் சத்தமில்லாமல், சலனமில்லாமல், அமைதியாய், அளவாய், நிச்சயமாய் இரவிலும், எப்போதேனும் பகலிலும் பெய்தது. சட்டென அந்தக் கிராமம் செழித்துப்போனது. அவன் பிறந்த நேரம் என அந்தக் கிராமம் அவனைக் கொண்டாடியது. அவனுக்கென வைத்த பெயர் மறந்து, ‘யப்பா, சாமி, அப்பு’, என அடைமொழி சொல்லியே அவன் அழைக்கப்பட்டான். நான்கு வயதாகியும் வாய் திறந்து வார்த்தை பேசாததால் அவனை அழைத்துக்கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வேண்டிக்கொள்ளச் சென்றாள் அவனைப் பெற்றவள். அன்று அந்தக் கிராமத்தில் மழை பெய்யவில்லை. மதுரையில் பெய்தது. ‘என்னய்யா, உன் மவன் மழையையும் கூடவே க...