WOW! What Driving!
சில திரைப்படங்களில் வரும் சில காட்சிகள் என்றும் நம் மனக்கண்ணில் ஓடிக்கொண்டிருப்பவை. அப்படிப்பட்ட காட்சிகளில் நிச்சயம் முதலிடம் பெறுவது ஆக்க்ஷன் காட்சிகளும், கார் சேஸ் காட்சிகளும் தான். இந்தப் பதிவு கார் சேஸ் காட்சிகளைப் பற்றியது. இங்குக் கொடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் தரவரிசைப்படி அல்ல, வெளிவந்த வருடங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
1. BULLIT (1968)
ஹாலிவுட் படங்களில் சேஸ் ஸீன்களின் முன்னோடி இது தான். ‘Frank Bullit’ என்ற நேர்மையான போலீஸ் டிடெக்டிவைப் பற்றிய கதை. ஸ்டூடியோக்களில் செட் போட்டே அநேகமாய் எல்லாவற்றையும் படமாக்கிய காலம் அது. படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான Steve McQueen, San Francisco- வின் மேயரிடம் பேசி நகரின் போலீஸ் ஸ்டேஷன், மருத்துவமனை, விமான நிலையம், முக்கியமாகத் தெருக்களை, படப்பிடிப்பிற்குத் திறந்துவிடச் சொல்லி சம்மதம் வாங்கினார்.
அந்த முடிவும் நம்பிக்கையும் கார் சேஸ் ஸீனில் அப்பட்டமாய் தெரிகின்றன. வசனமோ, இசையோ (முதல் சில நிமிடங்கள் தவிர) இல்லாத, சுமார் 12-நிமிட துரத்தல், ஒளிந்து விளையாடும் சிறுவர்களின் 'கள்ளன்-போலீஸ்' விளையாட்டுப் போல் ஆரம்பிக்கிறது. நகரின் தெருக்களில் ஒருவரை ஒருவர் ஆழம் பார்க்கும் இரண்டு கார்களும் ஒரு டிராஃபிக் சிக்னலில் வில்லன் அழுத்தி இழுக்கும் ஸீட் பெல்டின் க்ளிக்கில் எகிறுகிறது டாப் கியருக்கு.
முன்னால் செல்லும் காரின் ரியர் வியூ கண்ணாடியில் தெரியும் துரத்தும் Bullit-ன் காரையும் (இதை படம்பிடிக்க ஏகப்பட்ட டேக்குகள் ஆயிற்றாம்!), கட்டுப்பாடிழந்து புழுதியில் மறையும் Bullit-ன் காரை அதே ரியர் வியூ கண்ணாடியில் பார்த்து வில்லன் ஏளனமாய் உதடு சுழிக்கும் காட்சியையும் மிஸ் பண்ணிவிடாதீர்கள்.
ஓட்டுநர்களின் திறமைக்கும் (ஹை-ஸ்பீட் காமிரா சேஸ் காரையும் சேர்த்து), ரியலிஸ்டிக்காய் ஒரு கார் சேஸை உருவாகிப் படமாகியதற்கும் இந்த 12-நிமிட ஸீன் ஒரு முன்னோடி.
கொசுறு செய்தி: 2020 ஜனவரியில் Frank Bullit ஓட்டிய பச்சை நிற 1968 Ford Mustang கார் $3.4 மில்லியனுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.
2. THE ITALIAN JOB (1969)
Modify செய்யப்பட்ட எஞ்சின்கள் பொருத்தப்பட்ட அதிவேகக் கார்கள், இடித்துத் தள்ளப்படும் பிற வாகனங்கள், உருண்டு சிதறும் சாலையோரக் கடைகள், வெடித்துச் சிதறும் பெட்ரோல் டாங்குகள் என்று கிராஃபிக் காட்சிகள் நிறைந்த இன்றைய சினிமாக்களின் கார் சேஸ் ஃபார்முலாக்கள் எதுவும் இல்லாமல், அன்று இருந்த கார்களிலேயே மிகவும் சிறிய வகைக் கார்களான Mini Cooper S (நம் டாடா நானோ போல்) வகைக் கார்களை வைத்து, நிஜமான டிராஃபிக் ஜாம் நடுவேயும், Fiat கார் தொழிற்சாலையின் கூரையின் மேலும், ராட்சதக் குழாய்களின் உள்ளும் வடிவமைத்துப் படமாக்கப்பட்ட சேஸ் ஸீன் இது.
முழுக்க முழுக்க பிரிட்டனின் தயாரிப்பான இந்தப் படம், இத்தாலியின் Turin நகரில் படமாக்கப்பட்டது. அதற்கு முக்கியக் காரணம் Turin நகரில் தான் அன்றைய தேதியின் அதி நவீன கம்பியூட்டர் மூலம் கட்டுப்படுத்தப்படும் போக்குவரத்து சிஸ்டம் இருந்தது. இந்தப் படத்தின் துரத்தல் ஸீன்களுக்கு இது மிகவும் தேவையான ஒன்றாக இருந்தது.
இந்த ஸீன்களை வடிவமைத்து இன்ச் பிசகாமல் செயற்படுத்தியவர் Rémy Julienne. கார்களை ஓட்டியவர்கள் அவருடைய குழுவின் ஸ்டண்ட் டிரைவர்கள்.
By the way, எதற்காக இந்தத் துரத்தல்கள் என்கிறீர்களா? திருடப்பட்ட தங்கக்கட்டிகளுடன் போலீசிடமிருந்தும் இத்தாலியின் மாஃபியா கும்பலிடமிருந்தும் தப்பிப்பதற்காகத்தான், வேறு எதற்கு?
3. THE FRENCH CONNECTION (1971)
New York நகரின் தெருக்களில் தேவைப்படும் அனுமதிகள் வாங்கி படமெடுப்பதே பெரும் சவால். போதிய அனுமதிகளின்றி, போலீசாரை மட்டும் கொண்டு போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி (சில இடங்களில் அதுவும் இல்லாமல்) படமெடுப்பது, அதுவும் கார் சேஸ் காட்சிகள், அதுவும் ஒரு கார், ஒரு மெட்ரோ இரயிலைத் துரத்திக் கொண்டு, New York நகர மக்களையும், வாகனங்களையும் காட்சிகளின் பகுதிகளாக்கிப் படமெடுப்பதென்பது எவ்வளவு சவாலான காரியம்! அப்படி எடுக்கப்பட்ட கார் சேஸ் தான் இப்படத்தின் சேஸ் ஸீன்.
Bullitt-ல் கருப்பு நிற Dodge Charger காரை ஓட்டிய Bill Hickman தான் இதிலும் டிரைவர். ரிமோட் காமிராக்களுக்கு பதில் படத்தின் திருமணமாகாத இயக்குநர் William Friedkin (படத்தின் மற்ற ஒளிப்பதிவாளர்கள் குடும்பஸ்தர்கள்!) காரின் பின் ஸீட்டில் அமர்ந்து படம் பிடித்தார்.
Bill Hickman-ஐ William Friedkin வாரக்கணக்காகக் கேலி பேசி உசுப்பேற்றிவிட ('தில் இருக்கா?', 'உனக்கு நிஜமா கார் ஓட்டத் தெரியுமா?' ரகக் குத்தல்கள்), பொறுக்கமுடியாத Hickman ஒரு கட்டத்தில், 'காரா...? எனக்கா...? ஓட்டவா...? என் கூட காருல வா... காட்டுறேன்', ரீதியாக பதில் சொல்ல, காமிராவும் கையுமாகப் பின் ஸீட்டில் Bill Hickman-ன் தோளுக்கு மேல் காமிராவை வைத்துக் கொண்டு 90 மைல் வேகத்தில் கிட்டத்தட்ட 26 பிளாக்குகள் ஓட்டி படமாக்கப்பட்ட ஸீன்.
4. RONIN (1998)
San Francisco, Turin, New York முடித்து அடுத்து நாம் வருவது Paris-க்கு.
John Frankenheimer இயக்கிய Ronin (எஜமானரில்லாத சமுராயைக் குறிப்பிடும் ஜப்பானியப் பெயர்) படத்தின் கார் சேஸ் ஸீன்கள் (2) இன்றளவும் ஈடுகொடுக்கமுடியாத அளவில் வடிவமைக்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டு, ஓட்டப்பட்டு, படமாக்கப்பட்டவை.
அன்றைய முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பால் படத்தின் சற்றேக் குழப்பமானக் கதைக்கு ஒரு dark and brooding tone கிடைத்தது. இறுதிவரை, யார் யாரின் பக்கம் (கடைசிக் காட்சிகளில் கவனித்துப் பார்த்தால் ஒரு வேளை விடை கிடைக்கலாம்!), யார் யாரின் முதுகில் குத்துகிறார்கள், யார் யாரின் கழுத்தை அறுக்கிறார்கள், மொத்தத்தில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று சுட்டிக்காட்டமுடியாதபடி சிக்கல்கள் மிகுந்த spy thriller.
அப்படிப்பட்ட இந்தக் கதையின் மையப்புள்ளி ஓர் அலுமினிய சூட்கேஸ். அந்த சூட்கேஸிற்குள் என்ன இருக்கிறது, எதற்காக அதை அடைய இத்தனை பேர் முயலுகிறார்கள் என்று கடைசிவரை நமக்குத் தெரியாது. அந்த சூட்கேஸ் தான் இரண்டு கார் சேஸ்களுக்கும் காரணி.
முதல் சேஸ் அந்த சூட்கேஸைக் கொண்டுவருபவரிடமிருந்து அதைத் திருடுவதில் ஆரம்பிக்கிறது. இரண்டு கார்கள் ஒன்றை ஒன்று துரத்தும் அந்தக் காட்சி நம்மைத் திகைக்க வைத்தாலும் அது அடுத்து வரும் துரத்தலுக்கான முன்னோட்டமே.
இரண்டாவது சேஸ் படத்தின் ஒரே பெண் கதாபாத்திரமான Natascha McElhone-ஆல் ஓட்டப்படுவது. இந்தச் சேஸில் கார்களை ஓட்டியது ஸ்டண்ட் டிரைவர்கள் அல்ல... ஃபார்முலா 1 டிரைவர்கள். பங்குபெறும் மற்ற கார்கள் அனைத்தும் (கிட்டத்தட்ட 300 கார்கள்) ஸ்டண்ட் டிரைவர்களால் ஓட்டப்பட்டவை.
இரண்டு சேஸ்களிலும் க்ளோஸ்-அப் ஷாட்டில் Robert de Niro - வின் முகத்திலும், Natascha McElhone-ன் முகத்திலும் தெரியும் உயிர் பயம் நடிப்பல்ல - நிஜம்.
சேஸைப் பாருங்கள் … அந்த பயம் நம்மிடமும் தொற்றிக்கொள்ளும்.
5. MAD MAX FURY ROAD (2015)
On-road தெருக்களில் ஓட்டுவது ஒரு சவால் என்றால் off-road மணலில் ஓட்டுவது வேறு வகையான சவால்.
நமீபியாவின் நமிப் பாலைவனத்தில் படமாக்கப்பட்ட இந்தப் படம் மொத்தமுமே ஒரு சேஸ் ஸீன் தான். இப்படத்தின் இயக்குநர் George Miller-க்கு (வயது 76) ஒரு மானசீக மகுடம் அணிவிப்பதைத் தவிர செய்வதற்கு வேறு எதுவும் இல்லை.
எச்சரிக்கை: இந்த சேஸ் ஸீன் இதயத்துடிப்பை 33% வரை அதிகப்படுத்தி எகிறவைக்கும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது (சேஸ் சீன்களில் முதலிடம்!).
WATCH WITH CAUTION!
கருத்துகள்
கருத்துரையிடுக