அனிமட்ரானிக்ஸ் - 'Spy In The Wild'

 


Peter Jackson-ன் King Kong படம் பார்த்தவர்களுக்கு ‘அனிமட்ரானிக்ஸ்’ என்ற சொல்லுக்கான அர்த்தத்தை விளக்க வேண்டிய அவசியம் இருக்காது அநேகமாய். King Kong-ன் பிரமாண்டம் மட்டுமல்லாது நுட்பமான அதன் முகபாவங்களும் பார்த்தவர்களை வியப்பில் ஆழ்த்தி, சற்று நேரத்திலேயே அது ஒரு பின்னிருந்து இயக்கப்படும் இயந்திரம் என்பதை மறக்கச்செய்யும் தொழில்நுட்பமாய் அன்று அது அமைந்திருந்தது. பார்ப்பது திரைப்படம், நடிப்பது நடிகர்கள், இயங்குவது இயந்திரம் என்ற உண்மைகளைத் தாண்டி, King Kong-ன் கடைசி மூச்சு பிரியும் போது கண்களில் கண்ணீர் வரவில்லையென்றாலும் மனம் சற்றே நெகிழும் அந்தத் தருணம் தான் அன்றைய அந்த அனிமட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தின் வெற்றி.

அந்தத் திரைப்படம் வெளிவந்து பதினாறு வருடங்கள் ஆகின்றன. இந்தப் பதினாறு வருடங்களின் தொழில்நுட்ப வளர்ச்சி, திரைப்படத்தில் ஒரு இயந்திர உருவத்தின் புனையப்பட்ட இறப்பிற்குப் பார்வையாளர்கள் மனம் வருந்தியத்திலிருந்து, தம்முடைய கூட்டத்தில் இருந்த (ஊடுருவிய!) குட்டிக் குரங்கு (அனிமட்ரானிக்ஸ் ரோபாட்!) ஒன்றின் இறப்பிற்கு (பழுதாகி இயங்காமல் போன!) கூட்டம் கூடி துக்கம் அனுஷ்டிக்கும் குரங்குக் கூட்டத்தில் வந்து நிற்கிறது.


BBC-ன் ‘Spy In The Wild’ எனும் இயற்கைத் தொடரில் நடந்த நடப்பு இது. தொலைவில் நின்றோ, அமர்ந்தோ, படுத்தோ காமிராவை இயக்கி, விலங்குகளையும் பறவைகளையும் உயிரினங்களையும் படம் பிடித்துத் தொலைக்காட்சித் தொடராய் நம் பார்வைக்கும் இயற்கை ஆய்வுக்கும் பதிவு செய்வதில் உள்ள குறைபாடுகளைப் போக்குவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கபட்டத் தொடர் இது. எளிதில் செல்ல முடியாத இடங்களில் காமிராக்களை ஒளித்து வைத்து, நாட்கணக்கில் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் காத்திருந்து சில மணித்துளிகள் அரிதாகப் பதிவுசெய்யப்படும் காட்சிகள் வழங்கும் தகவல்கள் போதுமானதாக இல்லாமல்  போனதாலும் இந்த யோசனை எழுந்திருக்கலாம்.

இந்தத் தொடரை தயாரித்த John Downer இயற்கை டாகுமென்டரிப் படப்பிடிப்பில் ஏற்கனவே பல புதுமைகளைப் புகுத்தியவர். காமிராக்களை பறவைகளுடன் இணைத்தும், பறவைகளைப் படம் பிடிக்க வான் மார்க்கமாக பல்வேறு படம்பிடிக்கும் உத்திகளைக் கையாண்டும் போதாமல் அடுத்த கட்டமாக யோசித்து உருவாக்கிய தொடர் இந்த ‘Spy In The Wild’.

தொடரின் சாராம்சம் இது தான் - முப்பதுக்கும் மேற்பட்ட அனிமட்ரானிக்ஸ் உளவு காமிராக்களை விலங்குகளின் மத்தியில் நடமாடவிட்டு அவைகளின் வாழ்வையும் உணர்வுகளையும் படம்பிடிப்பது. காடுகளில், புல்வெளிகளில், நீர்நிலைகளில், கடலில், பனிப்பாறைகளில் என்று எல்லா இடங்களிலும் இந்த உளவு காமிராக்கள் உலவுகின்றன. அந்த காமிராக்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கூட்டமும் எப்படி எதிர்கொண்டு, ஏற்றுக்கொண்டு கூடிவாழுகின்றன என்பதை இரண்டு சீஸன்களாக நம் திரைகளில் விரிக்கிறது தொடர்.


 ‘அனிமட்ரானிக்ஸ்’ என்பது ‘அனிமேஷன்’ மற்றும் ‘எலக்ட்ரானிக்ஸ்’ என்பதின் கூட்டுச் சொல். நகர்தலின் பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கிய அனிமேஷன் அந்த நகர்தல்களுக்குப் பின்புறமாய் சார்ந்து நிற்பது எலக்ட்ரானிக்ஸை. இயற்கை சூழல்களில், எளிதில் எட்ட முடியாத இடங்களில் பல்வேறு சோதனைகளுக்கு நடுவே இந்த அனிமட்ரானிக்ஸ் காமிராக்கள் இயங்கவேண்டுமென்பது மட்டுமல்லாது, புகுத்தப்படும் விலங்குக் கூட்டங்களால் அவைகளின் எல்லா வகையானத் தேர்வுகளையும் தாண்டி இவை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

இந்தக் காமிராக்களை உருவாக்கிய பிரிட்டனின் பிரிஸ்டாலில் உள்ள ‘Amalgam’ கம்பெனி 1984-ல் இருந்து இந்தத் துறையில் இருக்கும் டிஸைன் கம்பெனி. Engineering, electronics, mould-making, sculpting, specialist painting, fur finishing என்று பல்வகை நிபுணர்களை ஒருங்கிணைத்து உருவாக்கியவை இந்த காமிராக்கள் அனைத்தும்.


அப்படிப்பட்ட உழைப்பினாலும் திறமைகளினாலும் உருவாக்கப்பட்ட உளவாளிகளின் ஊடுருவல் வெற்றி, முட்டைகளிலிருந்து வெளிவந்தத் தன் குட்டிகளுடன் சேர்த்து உளவுக் குட்டியையும் தன் இராட்சதப் பற்களுக்கிடையில் அன்பாய் லாவகமாய் மிருதுவாய் தூக்கிச் செல்லும் முதலையின் செயலில் இருக்கிறது.

தொடர் நெடுக நம்மை இப்படி வியப்பிலும் ஆச்சரியத்திலும் மூழ்கடிக்கும் தருணங்களாலேயே ஆனவை என்றாலும் இறுதியில், அடுத்தவர் வீட்டிற்குள் நடப்பதை ஒளிந்து நின்று நோட்டமிடும் ஒரு உறுத்தலைத் தடுக்கமுடியாமல் போகும் குற்றவுணர்வு உங்களுக்கும் எஞ்சி நிற்கிறதாவென்று பாருங்கள்.


Series: Spy In The Wild
Seasons: 2
Platform: Sony Liv
Channel: BBC Earth


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PIPER (பொதிந்திருக்கும் பவளங்கள்)

Tales from the Loop (பொதிந்திருக்கும் பவளங்கள்)

'போகுமிடம் வெகு தூரமில்லை' - திரை விமர்சனம்