அசோகமித்திரனும் American Fiction-ம்
Thelonius “Monk” Ellison ன் ஏஜெண்ட் விளையாட்டாய் அதை ஒரு பதிப்பாளருக்கு
அனுப்பிவைக்க 'My Pafology' என்று தலைப்பிட்ட
அந்தப் புத்தகத்திற்கு $750,000 முன்பணமாகக்
கிடைக்கிறது. உதவாக்கரை அப்பாக்கள், குற்றக்குழுக்களின்
வன்முறை, போதைப்பொருட்கள் என்று கறுப்பினத்தவரைப்
பற்றிய அத்தனை புளித்துப்போன அபிப்பிராயங்களின் கலவையாக நையாண்டியின் மொத்த
உருவமாய் தான் எழுதிய நாவலுக்குக் கிடைக்கும் வரவேற்பையும், தான் ஏற்கனவே எழுதி வெளியிட்ட மேதாவிப் புத்தகங்களுக்குக்
கிடைத்த அவமரியாதையையும் பார்க்கும் Thelonius “Monk” Ellison வெறுப்பின் உச்சத்தில் தன் புத்தகத் தலைப்பை 'Fuck'
என்று மாற்றவேண்டும் என்று கூறுகிறார். முதலில்
தயங்கும் பதிப்பாளர்கள், பின்னர் அதற்கும்
ஒத்துக்கொண்டு அந்தப் புத்தகத்தை பதிப்பிட அது பெரும் வரவேற்பைப் பெறுகிறது.
அவருடைய இயற்பெயரிலேயே அந்த புத்தகத்தை வெளியிட்டால் அது சரிவராது என்று கருதிடும்
ஏஜெண்ட் அவரை 'Stagg R. Leigh' என்ற புனைப்பெயரை
ஏற்றுக்கொள்ள வைக்கிறார். அது மட்டுமின்றி ''Stagg R. Leigh' சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியோடிக்கொண்டிருக்கும்
ஒரு குற்றவாளி என்பதுமாக ஒரு பின்புலத்தையும் சிருஷ்டிக்கிறார்.
இலக்கிய பரிசு வழங்கும் தேர்வுக் குழுவில் Thelonius
“Monk” Ellison ஐ நடுவராக சேர்க்க, மிகுந்த தயக்கத்துடன் ஒத்துக்கொள்கிறார் அவர். அந்தப் பரிசுக்கு 'Fuck'
புத்தகமும் பரிந்துரைக்கப்பட, அவருடைய புத்தகத்திற்கு அவரே நடுவராகிறார். அந்தத்
தேர்வுக்குழுவில் Sintara Goldenம் ஒரு நடுவராக
இருக்கிறார். இருவருக்கும் வாக்குவாதங்கள் வருகின்றன. Thelonius
“Monk” Ellison, Sintara Goldenன் புத்தகம் அவருடைய
நடுத்தர வர்க்கத்து ஆப்பிரிக்க-அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றிலும் புறம்பானது என்று
வாதிடுகிறார் Thelonius “Monk” Ellison. ஆழ்ந்த ஆராய்ச்சியின் பலம் சேர்த்து குரலற்றவர்களின் குரலாக
தன் புத்தகம் இருப்பதாக, 'வாசக சந்தை'
கேட்பதை தான் கொடுப்பதாகக் (‘giving
the market what it wants’) கூறுகிறார் Sintara
Golden.
Thelonius “Monk” Ellison ன் தனிப்பட்ட வாழ்வில் நடக்கும் சில பல சம்பவங்களும்
இந்தப் புத்தத்தின் பயணத்துடன் சேர்ந்து கதையை முன்னெடுத்துச் செல்கின்றன. Satirical
comedyயாக விரியும் இந்தக் கதையின்
அடிநாதமே ஓர் எழுத்தாளரின் இலக்கு/இலட்சியம்/கடமை/நோக்கம்/குறிக்கோள் என்ன
என்பதுதான். சந்தையின் ஆதிக்கத்துக்கேற்ப எழுதுவதா (அது உண்மையாய் இல்லாவிடினும்)
அல்லது லாப நஷ்ட கணக்குகளைக் கருத்தில் கொள்ளாது 'இதைத் தான் வாசகனுக்குக் கொடுக்கவேண்டும்' என்று ஓர் எழுத்தாளன் எந்தவித சமரசமும்
செய்துகொள்ளாமல் தட்டச்சில் நேர்மையை பதிவேற்றி அச்சிடுவதா?
இங்கே தான் அசோகமித்திரன் உள்ளே நுழைகிறார். இல்லை.
அசோகமித்திரன் 1971லியே வந்துவிட்டார். அவர்
கோடிட்ட பாதையின் வழியே தான் 2001ல் 'Erasure'
பயணித்து 2023ல் 'American
Fiction' பின்தொடர்கிறது.
1971ல் அசோகமித்திரன் எழுதிய 'தமிழ் நாவல் ஒரு கண்ணோட்டம்' என்ற கட்டுரையின் சிறு பகுதி இது.
"லெனின் கூறியது ஒன்றைப் படிக்கிறேன்.
இதை அவர் விளக்குகிறார். “'இலக்கியப் படைப்பு சுதந்தரம்' 'எழுத்தாளனின் சுதந்தரம்' என்பதைச் செயல்படுத்துவது சாத்தியம் இல்லை. ஏனெனில் எழுத்தாளன் பிரசுரம் செய்பவரை நம்பி வாழவேண்டியிருக்கிறது. பிரசுரம் செய்பவருக்கு கலைநயம், தார்மீக மதிப்புகளைக் காட்டிலும் புத்தகம், லாபம் தருமா என்பது முக்கியம். மேலும், ஒரு புத்தகத்தின் வெற்றியும் அதனால் கிட்டக்கூடிய லாபமும், விளம்பரத்தையும் இலக்கிய விமர்சகர்களையும் பெரிதும் சார்ந்துள்ளன. பெரிய பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் வெளியிடுகின்ற விளம்பரங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றின் மூலம் வாசகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அவை பெரிய முதலாளிகள் கையில் இருக்கின்றன. அவர்கள் தங்கள் செல்வாக்கும் செல்வமும் பெருகுவதைத்தான் முக்கியமாகக் கருதுவார்கள். இந்த நிலையில் எழுத்தாளன் அடங்கிப் போவது தவிர வேறு வழியில்லை. சுதந்தரமாக எழுத ஆசைப்படுகிற ஓர் எழுத்தாளன், தன் எழுத்து பிரசுரமாகி, போதிய கவனிப்பைப் பெறுவதற்கு யாரை நம்பியிருக்க நேரிடுகிறதோ அவரது பொருளாதார அக்கறைகளை மதிக்காமல் போனால் அனாமதேயமாகி விடுவான்".
1971 ல் அவர் எழுதிய வார்த்தைகள் இன்றளவும் மாறாமல் இருப்பதற்கு ஆச்சர்யப்படுவதா வேதனைப்படுவதா? அல்லது 'மாற்றம் ஒன்றே மாறாதது' என்ற கூற்றைப் பொய்யாக்க தொடரும் தொடர்கதை இதுவென்று நம்மை நாமே சமாதானப் படுத்திக்கொள்வதா? விடையிருந்தால் சொல்லுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக