ASHOKA THE GREAT - WYTZE KEUNING (முத்துக் குளிக்க வாரியளா…?)
ASHOKA THE GREAT
By Wytze Keuning
நான்காயிரத்து நானூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு நாட்டில் கிமு 300களில் வாழ்ந்த ஒரு மன்னனைப் பற்றி, அந்த நாட்டிற்குச் செல்லாமல், அந்த நாட்டின் மொழி தெரியாமல், அந்த கலாசாரத் தகவல்கள் போதிய அளவு இல்லாமல், கிட்டத்தட்ட பத்து வருடங்கள் உழைத்து, மூன்று பாகங்கள் ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை, உலகப் போரின் நடுவே, தன் நாட்டை ஆக்ரமித்திருக்கும் எதிரி நாட்டவரிடம் அனுமதி வாங்கிப் போராடி பதிப்பித்திட வேண்டுமென்றால் ஒருவரிடம் எத்தகைய அர்ப்பணிப்பும் எழுதப் படும் நாயகன் மீது எத்தகைய ஈடுபாடும் இருக்கவேண்டும்?
அப்படிப்பட்ட ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் எழுதப்பட்டது தான் ‘ASHOKA THE GREAT’. நெதர்லாந்து நாட்டின் Groningen என்ற ஊரில் வாழ்ந்த Wytze Keuning எனும் பள்ளி ஆசிரியரால் வரலாற்றுப் புனைவாக எழுதப்பட்டது .

1937 ல் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணி புரிந்த Wytze Keuning அதை விடுத்து, கிடைக்கும் சிறு ஓய்வூதியத்தில் வாழ்க்கை நடத்திக் கொண்டு, தன்னை முழுமையாக இந்தப் புத்தகம் எழுதுவதில் ஈடுபடுத்திக்கொண்டார்.
1930 களில் ஒரு நெதர்லாந்து நாட்டவருக்கு இந்தியாவின் மிகப் பழங்கால மன்னனைப் பற்றிய அறிமுகம் எப்படிக் கிடைத்திருக்கக்கூடும், இந்தியாவைப் பற்றிய பழங்காலத் தகவல்களையும் வாழ்க்கை முறைகளையும் அவர் எப்படி சேகரித்திருக்கக்கூடும், புத்த மதத்தைப் பற்றியும் அதன் கொள்கைகள், நெறிகளைப் பற்றியும் எவ்வாறு அறிந்திருக்கக்கூடும் எனும் கேள்விகளுக்கு இன்றளவும் விடைகள் கிடைத்தபாடில்லை.
டச்சு மொழியில் அவர் இந்தப் புத்தத்தின் முதல் இரண்டு பாகங்களை எழுதி முடித்திருந்த போது நெதர்லாந்து இரண்டாம் உலகப் போரின் நடுவில் ஜெர்மனியின் ஆதிக்கப் பிடியில் சிக்கியிருந்தது. அவர்களின் அனுமதியின்றி எந்தப் புத்தகமும் வெளியிடமுடியாது. அப்படி அவர்களிடம் அனுமதி வாங்கினாலோ அது தேசத் துரோகமாக சொந்த மக்களால் பார்க்கப்படும் என்ற சூழலிலும் இடைவிடாது முயன்று முதல் இரண்டு பாகங்களை வெளியிட்டார் Wytze Keuning. மூன்றாம் பாகம் 1948 ல், போரில் சீரழிந்த நாட்டையும் வாழ்வையும் மீட்கும் முயற்சியில் நெதர்லாந்து இருந்த போது, வெளிவந்தது. 1957 ல் Wytze Keuning மரணித்த போது இந்த மூன்று புத்தகங்களும் கிட்டத்தட்ட மறக்கப்பட்டுவிட்டன.
இவற்றை மீட்டெடுத்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, மறுபடியும் உலகில் உலவவிட்டு, நம் அசோகரை நமக்கே கிட்டத்தட்ட மறு அறிமுகம் செய்து வைத்தவர் J.E. Steur எனப்படும் J. Elizabeth Steur.
குழந்தைகள் மன நல ஆலோசகராகப் பணிபுரிந்த J.E. Steur, வாழ்வின் ஒரு கட்டத்தில் இந்தியா வர நேர்ந்து, இந்தியாவால் கவரப்பட்டு, இந்தியாவைப் பற்றியத் தகவல்களை அவருடைய நாட்டில் (இவரும் நெதர்லாந்து நாட்டவர் தான்) தேடி, பள்ளிப் பருவ தோழி ஒருவரின் வீட்டில் Wytze Keuning ன் முதல் இரண்டு பாகங்களைக் காண நேர்ந்து, அவற்றை இரவல் வாங்கி வாசித்து வசீகரிக்கப்பட்டு, மூன்றாம் பாகத்தை அவருடைய உள்ளூர் நூலகத்தில் கண்டெடுத்து, அந்த நூலகர் கொடுத்தத் தகவல் மூலம் அந்தப் புத்தகங்களை எழுதியவரின் ஊரும் தன்னுடைய சொந்த ஊரான Groningen தான் என்றும், அதை எழுதியவர் இந்தியாவுக்குச் சென்றதேயில்லை என்றும் கூறக் கேட்டு, நண்பர் ஒருவர் மூலமாக அவருடைய நண்பரின் தந்தை இந்தப் புத்தகங்களை எழுதிய Wytze Keuning ஆக இருக்கலாம் என்று கூறி இவரை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்த, Wytze Keuning தனது தந்தை தான் என்றும் இப்படிப்பட்ட மூன்று புத்தகங்களை அவர் எழுதியுள்ளது தான் உள்பட தனது குடும்பத்தில் யாருக்கும் தெரியாது என்றும், இத்தனைத் தகவல்களையும் அவர் எங்கிருந்து எப்படி சேகரித்தார் என்று தெரியாது என்றும் கூற, இத்தனையும் தன் வாழ்வில் நடந்ததற்கு ஏதேனும் விசேஷக் காரணம் இருக்கவேண்டும் என்ற ஆழமான நம்பிக்கையால் ‘ASHOKA THE GREAT’ புத்தகங்களை டச்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் J.E. Steur.
‘ASHOKA THE GREAT’ புத்தகத்தை வாசிக்கும் யாருக்கும் நம்புவது கடினம் அதன் ஆசிரியர் இந்தியர் அல்லர் என்பது மட்டுமல்ல, அவர் ஒரு முறை கூட இந்திய மண்ணில் காலடி வைத்ததில்லை என்பதையும்.
அசோகரின் இளம் வயதில் ஆரம்பமாகும் முதல் பாகம், கலிங்கத்துப் போரில் இரண்டாம் பாகம் முடிய, போர் வெறுத்து, அமைதியும், மக்களுக்கு நடுநிலையான நீதியும் நிலைநிறுத்த முயலும் பேரரசனை மூன்றாம் பாகம் கண் முன் காட்ட முற்படுகிறது.
'அசோகர் சாலையோரத்தில் மரங்கள் நட்டார்', என்று பள்ளியின் வரலாற்றுப் புத்தகத்தில் ஒற்றைச் செய்தியாய் நம் நினைவில் நிற்கும் அசோகரை, இரத்தமும் சதையும் வீரமும் விவேகமும் கோபமும் சாந்தமும் சாதுர்யமும் சாமர்த்தியமும் கொண்ட ஒரு மனிதனாக, ஒற்றை வரியிலிருந்து விலக்கி, வரலாற்று நாயகனாக நம் நினைவுகளில் நடமாட வைத்து விடுகிறார் Wytze Keuning.
அசோகர் எடுக்கும் முடிவுகளும் அவற்றுக்குப் பின்னே நிற்கும் காரணிகளும் அந்த முடிவுகளுக்கு அவரை அழைத்துச் செல்லும், இழுத்துச் செல்லும் திரை மறைவுச் செயல்களும் சதிகளும், வரலாற்றுக் காட்சிகளாய் நம் கண் முன் விரியும் போது, அசோகருடைய முடிவுகளில் சம்மதமில்லாதவர்களுக்கும் கூட அவைகளின் பின்னே வலைப் பின்னல்களாய் விரிந்து கிடக்கும் நியாய தர்மங்கள் புரியாமலிருக்க வாய்ப்பில்லை.
“The bloodiest wars are fought in the name of peace” - யார் சொன்னது, எங்கே வாசித்தது... நினைவில்லை. ஆனால் இந்த வார்த்தைகளின் உண்மை இந்தப் புத்தகத்தை வாசித்தால் புரியலாம்.
வரலாற்று ஏடுகளில் அசோகரின் போர்த் திறமையும், அவர் ஆட்சியைப் பிடித்த விதமும், முடிசூடிக்கொண்ட நிகழ்வும் வெறும் வறட்டு வாக்கியங்களாய் நிற்க, இந்த அனைத்தின் பின்னும் இப்படியும் இருந்திருக்கலாமோ, அசோகரின் செயல்களுக்கான காரணங்களும் வாத பிரதிவாதங்களும், அந்த முடிவுகளை அவர் எடுக்க அவருக்குள்ளே நடந்த மனப் போராட்டங்களும் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று எண்ணாமல் இருக்க முடிவதில்லை இதை வாசிக்கும் போது.
புத்தகத்தை ஒரு ‘hagiography’ என்று வகைப்படுத்தினாலும் சரி, ஒரு வரலாற்றுப் புனைவு புதினம் எனக் கொண்டாலும் சரி... அரசியலோ, மதமோ, தனிப்பட்ட விருப்பு வெறுப்போ, லாப நோக்கோ, எதுவும் இல்லாமல், எங்கே எப்படிக் கிடைத்தன என்றுத் தெரியாதத் தகவல்களைக் கொண்டு, சொந்த குடும்பத்திற்குக் கூடத் தெரியாமல் பத்து வருடங்கள் உழைத்து உருவாக்கிய புத்தகத்தை, அசோகரின் மீது ஈடுபாடு உள்ளவர்களும், வரலாற்றுப் புனைவுகளில் ஆர்வம் உள்ளவர்களும் நூலகத்தில் எடுத்தேனும் ஒரு முறையாவது ஒரு சில பக்கங்களையாவது முயற்சித்துப் பார்த்தால் Wytze Keuning ன் உழைப்பின், அர்ப்பணிப்பின் ஆழம் புரியலாம்.
ஆயிரத்து ஐம்பத்தியொன்பது பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை வாங்கி, அதை வாசிக்க வேண்டுமெனில் அது வாசகரின் எப்பேர்ப்பட்ட கமிட்மென்ட்டாக இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த ரூபா பப்ளிகேஷன்ஸ், எழுத்துக்களை சற்றுப் பெரியதாகவே அச்சிட்டது மட்டுமல்லாமல், புத்தகத்தை எத்தனை முறைப் புரட்டினாலும் பக்கங்களில் தொய்வில்லாத பைண்டிங்கிலும் கவனம் செலுத்தி, ஒரு நேர்த்தியான paperback படைப்பை வெளியிட்டதற்கு பாராட்டுக்கள் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
ஒரே ஒரு கேள்வி மட்டும் எஞ்சி நிற்கிறது இறுதியில். ஆங்கிலத்தில் J.E. Steur போல் தமிழில் யாரோ? காத்திருப்போர் இருக்கலாம் உலகெங்கிலும்.
கருத்துகள்
கருத்துரையிடுக