மேடை ஒளியமைப்பு (Stage Lighting)

 


கலை நிகழ்ச்சிகள் எவற்றையேனும், நாடகமோ நடனமோ, மேடையில் எப்போதேனும் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு வரையிலும் காணக் கிடைத்திருந்தால் அந்த நிகழ்ச்சியின் ஒளி அமைப்பு நினைவில் நிற்கிறதா என்று யோசித்துப் பார்த்தால், 'இல்லை' என்பதே அநேகமாக நமது பதிலாய் இருக்கும்.

ஒரே சீராக மேடையை நிரப்பும் மஞ்சள் ஒளியும், காட்சியமைப்பிற்கும் கதைக்கும் ஏற்ப அவ்வப்போது மாறி மாறி கலைஞர்களின் மேல் பாய்ச்சப்படும் சிவப்பு, பச்சை, நீல ஒளிகளும், பரபரப்பைக் குறிப்பதற்கு வேகமாக சுற்றப்படும் ஒரு பெரிய வட்டத்தில் சிறு வட்டங்களாக ஒட்டப்பட்டிருக்கும் வண்ண தாள்களுக்குப் பின் இருந்து காட்டப்படும் வெள்ளை ஒளியுமே மேடையின் ஒளி அமைப்பாக வெகு காலம் வரை இருந்திருக்கிறது.

நாடகங்களுக்கான ஒளி அமைப்பிலும் நடனங்களுக்கான ஒளி அமைப்பிலும் பெரிதாக வித்தியாசம் என்று எதுவும் இருந்ததில்லை. நிலையாய் பொருத்தப்பட்ட ஒளி அமைப்பு (fixed lighting) அல்லது தொங்கும்/நகரும் ஒளி அமைப்பு (floating lighting) ஆகியவையே மேடை ஒளி அமைப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. காட்சிகளையும் கதையின் உணர்வையும் கதாபாத்திரங்களின் முக்கியத்துவத்தையும் பொறுத்து முன்னால், பின்னால், பக்கவாட்டில், மேலே, கீழே என்று விளக்குகள் பொருத்தப்பட்டு மாற்றி மாற்றி அவற்றை இயக்கியும் அணைத்தும் மேடையில் கலைகளுக்கு செறிவூட்டுவதே ஒளி அமைப்பாக இருந்தது. முக்கியமான முன்னேற்றம் என்று பார்த்தால் கணினியுடன் இணைக்கப்பட்டுத் தாமாகவே இசைக்கேற்ப இயங்கும் ஒளி அமைப்புகளைச் (automated lighting) சொல்லலாம்.

ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் தொழில்நுட்பத்தை இறுகப் பற்றிக்கொண்டு மேடை ஒளி அமைப்பைத் தனியாகக் கவனத்தில் கொண்டு அதற்காகவும் அது ஏற்படுத்தியத் தாக்கத்திற்காகவும் திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டிய கலை நிகழ்ச்சிகள் இரண்டு.

பொதுவாய் நாடகத்தை விட நடனங்களுக்கு மேடை ஒளி அமைப்பு செய்வது சற்று சவாலானதாகவேத் தோன்றும். நின்று வசனம் பேசும் சிலரை விட நகர்ந்து நடனமாடும் பலருக்கு ஒளி அமைப்பு செய்வதற்கு கொஞ்சம் கூடவே மெனக்கெட வேண்டியிருக்கும். அதனால் தானோ என்னவோ இந்த இரண்டு நடனங்களும் மனதில் தங்கிவிட்டன.

2. ‘Dernière Danse’

‘So You Think You Can Dance’ எனும் அமெரிக்க ரியாலிட்டி போட்டி சீசன் 14-ல் இடம்பெற்றிருக்கும் குழு நடனம் இது.
Brian Friedman இதன் நடன இயக்குநர். ஃபிரெஞ்சு மொழியில் இருக்கும் இந்தப் பாடலைப் பாடியவர் ‘Indila’ எனும் இளம் பாடகி. இந்தியாவின் மேல் உள்ள ஈடுபாட்டினால் தன்னுடைய மேடைப் பெயரை ‘Indila’ என்று சூட்டிக்கொண்ட அவரின் பாரம்பரியம் அல்ஜீரியா, கம்போடியா, எகிப்து, இந்தியா என்று விரிகிறது.


தேசம் விட்டு தேசம் வந்து சேரும் ஒரு இளம் அகதிப் பெண் பாரீசில் சந்திக்கும் குரூரங்களையும் படும் அவமானங்களையும் எதிர்கொள்ளும் இனவெறியையும் ஆன்மாவின் ஆழத்திலிருந்து ஊற்றெடுத்துப் பெருகும் சோகத்தில் இசைக்கிறது பாடல்.

இதை மனதில் கொண்டு நடனத்தைப் பார்த்தால் சொல்லாமலேப் புரியும் மேடை ஒளி அமைப்பின் பங்களிப்பு இதன் தாக்கத்திற்கு. 







1. ‘Beautiful Friends’

‘So You Think You Can Dance’ நிகழ்ச்சி சீசன் 12-ன் குழு நடனம் தான் இந்த ‘Beautiful Friends’. இந்த நடனத்தின் இயக்குநர் Travis Wall தான் பன்னிரண்டு வயதாய் இருந்த போது ‘The Music Man’ என்ற ஒரு பிராட்வே ஷோவைப் பார்த்துவிட்டுத் தியேட்டரை விட்டுக் கிளம்பும் போது, எல்லா விளக்குகளும் தியேட்டருக்குள் அணைக்கப்பட்டுவிட, பாதுகாப்பு கருதி ஒரே ஒரு மங்கலான விளக்கு (ghost light) மட்டும் மேடையில் எரிய விடப்பட, 'அது எதற்கு?' என்று தன்னை அழைத்து வந்தவரிடம் அந்தப் பன்னிரண்டு வயதுப் பையன் கேட்க, 'சும்மா… இரவு விளக்கு', என்று அவர் பதில் சொல்லாமல், 'அதுவா? அது தியேட்டரில் இருக்கும் இறந்த கலைஞர்களின் ஆவிகள் இரவில் நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்வதற்காக. அப்போது தானே அவை நம் நிகழ்ச்சிகளைத் தொந்தரவு செய்யாமல் இருக்கும்', என்று கூற, அந்த நினைவே இந்த நடனமாக உருமாறியிருக்கிறது.

 

இதை மனதில் வைத்துக்கொண்டு ‘So You Think You Can Dance’-ன் ஒளி அமைப்பு டிஸைனரான Bob Barnhart -டிடம், "வயர்கள் இல்லாத விளக்கு என்று ஒன்று கிடைக்குமா?" என்று கேட்க, அதற்கு அவர், "ஓ! 'பேய் விளக்கு' (‘ghost lamp’) ஒன்றை நான் வடிவமைத்திருக்கிறேன்", என்று அவரிடம் விளக்கு ஒன்றைக் காட்ட, "Perfect!" என்று கூறி உருவானது தான் இந்த நடனம்.

இந்த நடன வடிவமைப்பிற்கு Travis Wall -க்கு Emmy விருது கிடைத்தது. நியாயப்படி, அவருக்கு பன்னிரண்டு வயதில் கலைஞர்களின் ஆவிகளுக்காக எரியவிடப்படும் ‘ghost light' பற்றிக் கூறிய அந்த ஒருவருக்கும் ஒரு சிறப்பு விருது கொடுத்திருக்க வேண்டும்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி (குறுநாவல்)

'போகுமிடம் வெகு தூரமில்லை' - திரை விமர்சனம்

வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி (குறுநாவல்)